Wednesday 17 February 2016

வரிகள் இல்லாத இடைக்கால பட்ஜெட்: வருவாய் பற்றாக்குறை ரூ.9154 கோடி

புதிய வரிகள், திட்டங்கள் இல்லாத இடைக்கால நிதிநிலை அறிக்கையை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதேசமயம், வரும் நிதியாண்டில் (2016-17) ரூ.9 ஆயிரத்து 154.78 கோடிக்கு வருவாய் பற்றாக்குறை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கடந்த 5 நிதியாண்டுகளில்...அதிமுக அரசில் கடந்த 2011-12-ஆம் நிதியாண்டு முதல் 2015-16-ஆம் நிதியாண்டு வரை செயல்படுத்திய அனைத்துத் திட்டங்களையும் பட்டியலிட்டார், நிதி-பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். வரும் நிதியாண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு அவர் தாக்கல் செய்தார்.
 இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தின் வழக்கமான மரபைப் பின்பற்றி, எந்தப் புதிய அறிவிப்புகளையும் இந்த நிதிநிலை அறிக்கையில் அரசு மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்து அவர் தனது அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார்.
 வருவாய்ப் பற்றாக்குறைக்குக் காரணம்: வரும் 2016-2017-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்த வருவாய் வரவுகள் ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 4 கோடியே 23 லட்சம் ரூபாயாக இருக்கும் எனத் தெரிவித்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய் செலவுகள், ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 159 கோடியே 1 லட்சம் ரூபாயாக இருக்கும் என்றார். இதன் மூலம், வரும் நிதியாண்டில் ரூ.9 ஆயிரத்து 154.78 கோடி வருவாய்ப் பற்றாக்குறை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
 பசுமை வீடுகள் திட்டம், விலையில்லாத மின் விசிறிகள், மிக்ஸிகள், கிரைண்டர்கள், மடிக் கணினிகள் வழங்குதல் போன்ற பல முன்னோடித் திட்டங்களை தமிழகம் செயல்படுத்தி வருவதும் இதற்குக் காரணம் எனக் கூறிய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இத்தகைய சமூக பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தாத பல மாநிலங்களும் பெரும் வருவாய்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் கொண்டாடப்பட்டு வரும் மகாமகத் திருவிழாவை இந்த ஆண்டு நடத்திட ரூ.135.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
 இலங்கை பிரச்னை குறித்து... மேலும், இலங்கைப் பிரச்னையில் நீதியை நிலைநாட்டவும், பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை விரைவாக மறுகுடியமர்த்தவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு சர்வதேச அமைப்புகளின் உதவியோடு மேற்கொள்ள வேண்டுமென அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 அதிமுக அரசு பொறுப்பேற்றது முதல், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் நிதியாண்டில் காவல் துறைக்கு மட்டும் ரூ.6 ஆயிரத்து 99 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
 தேசிய பேரிடர் நிவாரண நிதி: தமிழகத்தில் வெள்ள நிவாரணத்துக்காகவும், மறுசீரமைப்புப் பணிகளுக்காகவும் தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தில் இருந்து ரூ.1,773.78 கோடியை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்துக்கு வரும் நிதியாண்டில் வரவு-செலவுத் திட்டத்தில் ரூ.713 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்துக்காக ரூ.5,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சார வாரியத்துக்கு ரூ.13,819 கோடியும், போக்குவரத்துத் துறைக்கு ரூ.1,590 கோடியும் வரும் நிதியாண்டில் மானியமாக ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
 சிறப்புத் திட்டங்களின் செயலாக்கம் குறித்து பட்டியலிட்ட அவர், தமிழக அரசின் மடிக்கணினிகள் இதுவரை 31.78 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் ரூ.7 ஆயிரத்து 755.73 கோடி செலவில் 1.76 கோடி எண்ணிக்கையில் மின்விசிறிகள், மிக்ஸிகள், கிரைண்டர்கள் கொடுக்கப்பட்டு விடும் என நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
 ஏழாவது ஊதியக் குழு: 2017-18 ஆம் நிதியாண்டில் இருந்து ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதுவதாகத் தெரிவித்த அவர், அந்த ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ஏற்படும் என கணிக்கப்படுவதாகக் கூறினார். இந்த கூடுதல் செலவினங்களைச் சமாளித்து நிதிப் பற்றாக்குறையை நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே கட்டுப்படுத்த வேண்டுமெனில், மாநில அரசு கூடுதல் நிதி ஆதாரத்தைத் திரட்டுவது அல்லது செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
 கடன் அளவு: வரும் நிதியாண்டில் நிகர கடன் வாங்கும் அளவின் மதிப்பு ரூ.35,129 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், வரும் நிதியாண்டின் இறுதியில் (மார்ச் 2017) நிலுவையிலுள்ள கடன் ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 31 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஆனாலும், தமிழக பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைத்து வகையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் நலனுக்கு ரூ.2702 கோடி
 சென்னை, பிப்.16: ஆதிதிராவிடர் நலனுக்காக ரூ.2702.22 கோடி, பழங்குடியினர் நலனுக்காக ரூ.261.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
 சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
 ஆதிதிராவிடர், பழங்குடியினர் உயர்கல்வி உதவித் தொகைக்காக 2016-2017-ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலையில் ரூ.1,430 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கு ரூ.64.86 கோடி, மத்திய சிறப்பு உதவித் திட்டத்துக்காக ரூ.130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 ஆதிதிராவிட மாணவர்கள் பயன்பெறும் வகையில் 1,314 விடுதிகளும், பழங்குடியின மாணவர்களுக்கு 42 விடுதிகளும், 302 பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. 
 கடந்த ஐந்து ஆண்டு அதிமுக ஆட்சியில் மட்டும் ரூ.142 கோடி செலவில், 198 தங்கும் விடுதிகளும், 55 பள்ளிக் கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன. இந்த மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கு ரூ. 103.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால நிதிநிலையில் ஆதிதிராவிடர் நலனுக்காக ரூ.2,702 கோடி, பழங்குடியினர் நலனுக்காக ரூ.261.66 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கை: 2 மணி 17 நிமிஷங்கள் வாசித்த ஓ.பி.எஸ்.
 சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையை 2 மணிநேரம் 17 நிமிஷங்கள் வாசித்தார், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
 காலை 11.02 மணிக்கு நிதிநிலை அறிக்கையை அவர் வாசிக்கத் தொடங்கினார். பிற்பகல் 1.19 மணிக்கு அறிக்கையை அவர் வாசித்து முடித்தார். இந்த அறிக்கையை வாசித்து முடிக்கும் வரை, முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் எதிர்க்கட்சி வரிசையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக, மனிதநேய மக்கள் கட்சியினரும் இருந்தனர். 
பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்
 மகாமகம் திருவிழா சிறப்பாக நடத்த ரூ.135.38 கோடி 
 வரும் நிதியாண்டில் காவல் துறைக்கு ரூ.6,099.88 கோடி 
 மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்துக்கு ரூ.713 கோடி 
 உணவு மானியத்துக்கு ரூ.5,500 கோடி 
 மின் துறைக்கு மானியம் உள்பட ரூ.13,819.03 கோடி 
 போக்குவரத்துத் துறைக்கு ரூ.1,590 கோடி 
 சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ரூ.1,032.55 கோடி
 சத்துணவு திட்டத்துக்காக ரூ.1,645 கோடி 
 ஓய்வூதியம்-ஓய்வூதியப் பலன்களுக்கு ரூ.19,841 கோடி
வரவு-செலவு-ஒரு பார்வை...(ரூ.கோடியில்)
 வருவாய் வரவுகள் ரூ.1,52,004.23
 வருவாய் செலவு ரூ.1,61,159.01
 வருவாய் பற்றாக்குறை (-)9,154.78
 (வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை அளவானது, 
 இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிப்பது இதுவே முதல் முறை)
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த முதல்வர் உத்தரவு
 சென்னை, பிப்.16: அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
 இது தொடர்பாக சட்டப்பேரவையில் அவர் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை ரூ.1,862 கோடியில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை கடந்த 2011-ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. பில்லூர் அருகில் பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை எடுத்து கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள பொதுப்பணித்துறையின் 31 ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றிய குளங்கள், ஏனைய 538 நீர்நிலைகளில் நிரப்புவதற்கு இந்தத் திட்டம் வகை செய்கிறது.
 இதைத் தொடர்ந்து நிதியுதவி கோரி மத்திய அரசுக்கு இந்தத் திட்ட அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் அன்று ஆட்சியிலிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல், குடிநீர் வழங்கல் திட்டமாக அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
 இதன்படி மத்திய அரசுக்கு திருத்திய திட்ட அறிக்கை உடனடியாக அனுப்பப்படும். அதே நேரத்தில் இந்தத் திட்டத்துக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு ரூ.67,072 கோடி
 முதியோர் ஓய்வூதியம், விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு தமிழக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.67,072 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 இந்தத் தொகை மொத்த நிதி ஒதுக்கீடான ரூ.1,98,683 கோடியில் 35.41 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
 உணவு மானியம் உள்ளிட்டவற்றுக்கு...இதே போன்று உணவு மானியம், மின்சார மானியம், நியாய விலைக் கடைகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்தல், கல்வி உதவித் தொகை போன்ற நலத் திட்டங்களுக்கு இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.62,382.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment