தமிழகத்தில் ஆதார் அட்டையைப்
பெறுவதற்காகப் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 95.32 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதில், கைவிரல் ரேகை, கருவிழி ஆகியவற்றின் அடிப்படையில் 87.53 சதவீதம்
பேருக்கு ஆதார் எண் உருவாக்கப்பட்டு, அவை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள்
தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் இணை இயக்குநர் கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.
தமிழகத்தில் இப்போது ஆதார் எண் பெறுவோரின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமையல் எரிவாயு மானியம் பெறுவது,
ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு பணப் பலன்களைப் பெறுவதற்கு
ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால், அனைத்துத் தரப்பினரிடமும் ஆதார் எண்ணைப் பெற
அதீத ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆதார் எண்ணைப் பெற முதலில் நமது அடிப்படைத்
தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும். இந்தத் தகவல்கள், பாரத மிகுமின்
நிறுவனத்தின் கணினி சேமிப்புப் பிரிவில் சேகரித்து வைக்கப்படும்.
பெயர், பிறந்த தேதி, முகவரி, செல்லிடப்பேசி எண்,
கருவிழி, கைவிரல் ரேகைகள் ஆகிய அனைத்தும் பதிவு செய்யப்பட்டு பயோ- மெட்ரிக்
எண் வழங்கப்படும். இந்தத் தகவல்களின் அடிப்படையில் சில வாரங்களுக்குப்
பிறகு, ஆதார் எண் கிடைக்கும்.
95.32 சதவீதப் பதிவு: தமிழகத்தின் அனைத்து
மாவட்டங்களிலும் சேர்த்து ஆதார் எண்ணைப் பெறுவதற்காக 95.32 சதவீதம் பேர்
தங்களது அடிப்படைத் தகவல்களைப் பதிவு செய்துள்ளனர். இந்தத் தகவல்களைப்
பதிவு செய்வதற்காக வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல
அலுவலகங்களில் தனி மையம் செயல்பட்டு வருகிறது.
அடிப்படைத் தகவல்களின் அடிப்படையில் மாநிலம் முழுவதும்
இதுவரை (ஜூலை 6 ஆம் தேதி நிலவரம்) 87.53 பேருக்கு ஆதார் எண்
அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 94.52 சதவீதம்
பேருக்கு ஆதார் எண் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு, 101.19 சதவீதம் பேரின்
அடிப்படைத் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
100 சதவீதத்தைத் தாண்டியது: பெரம்பலூர் (111.89),
புதுக்கோட்டை (101.15), தேனி (100.53), சென்னை (103.31) ஆகிய மாவட்டங்களில்
ஆதாருக்கான பதிவு 100 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இதற்கான காரணங்கள்
குறித்து இணை இயக்குநர் கிருஷ்ணாராவ் கூறியது:
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு குறிப்பிட்ட
மாவட்டத்தில் மக்கள் தொகையின் அளவு கணிக்கப்பட்டு இருக்கும். ஆனால், அந்த
மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நகருக்கு வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்
குடிபெயரும்போது அவர்கள் ஆதார் எண்ணைப் பெற விண்ணப்பம் செய்வார்கள்.
இதனால், அந்தக் குறிப்பிட்ட மாவட்டத்தில் மக்கள் தொகை எண்ணிக்கையைவிட ஆதார்
பதிவுக்கான எண்ணிக்கை அதிகரிக்கும்.
இந்த அடிப்படையிலேயே, சென்னை, தேனி, பெரம்பலூர் போன்ற
மாவட்டங்களில் மக்கள் தொகை எண்ணிக்கையைக் காட்டிலும் ஆதார் பதிவுக்கான
எண்ணிக்கை 100 சதவீதத்தைத் தாண்டியிருக்கிறது என்றார் அவர்.
மக்கள் தொகை எவ்வளவு: தமிழகத்தில் 2011 மக்கள்தொகைக்
கணக்கெடுப்பின்படி, மொத்தம் 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 பேர்
உள்ளனர். இவர்களில், 6 கோடியே 87 லட்சத்து 70 ஆயிரத்து 780 பேர் ஆதார் எண்
பெற பதிவு செய்திருக்கின்றனர். இவர்களில், 6 கோடியே 31 லட்சத்து 53
ஆயிரத்து 86 பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது.
வீடு வீடாகக் கணக்கெடுப்பு தீவிரம்: ஆதார் எண்
வழங்கப்பட்டுள்ள சூழலில், அவர்களின் அடிப்படை விவரங்களைச் சரிபார்க்கும்
பணிகளும் இப்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக, ஒவ்வொருவருக்கும் ஆதார்
விவரங்கள் அடங்கிய தனித்தனிப் படிவங்கள் தொகுக்கப்படுகின்றன. இந்தப்
படிவங்களை வீடு வீடாக எடுத்துச் செல்லும் பணியில் ஆசிரியர்களும், வருவாய்த்
துறை அலுவலர்களும், மாநகராட்சி பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கிருஷ்ணா ராவ் கூறியதாவது: ஆதார் எண்
பெறும் போது அளித்த அடிப்படைத் தகவல்கள் அனைத்தும் சரியானனவையா, தற்போது
அதில் ஏதும் மாற்றம் இருக்கிறதா போன்ற அனைத்தையும் சரிபார்க்கும் பணிகள்
இப்போது நடைபெறுகின்றன.
இந்தப் பணிகள் முழுமையடைந்த பிறகு ஆதார் அட்டையை எந்த
வடிவத்தில் வழங்குவது என மத்திய அரசு முடிவு செய்யும். இப்போது ஆதார் எண்
வழங்கும் போது அது ஒரு காகிதத்தில் மட்டும் அச்சிடப்பட்டு தபால் மூலம்
அனுப்பப்படுகிறது. இணைய சேவை மையங்களில் வழங்கும் பிளாஸ்டிக் அட்டைக்கு
அங்கீகாரம் அளிக்கப்பட்டாலும் அதுவே இறுதியானது அல்ல.
ஆதார் எண்ணில் தெரிவித்த அடிப்படை விவரங்கள் அனைத்தும்
வீடு வீடாகச் சரிபார்க்கப்பட்டு அந்த இறுதித் தகவல்களைக் கொண்டு ஆதார்
அட்டை வடிவமைக்கப்படும். ஆனால், யாருக்கும் ஆதார் எண் மாறாது. இதன்மூலம்,
ஆதார் எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உறுதியானதாக இருக்கும் என்றார்
அவர்.
அக்டோபரில் இருந்து மாற்றம்: தமிழகத்தைப் பொருத்தவரை,
ஆதார் எண்ணை வழங்கும் பணியை பாரத மிகுமின் நிறுவனத்தின் (பெல்) கணினிப்
பிரிவு மேற்கொண்டு வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இந்தப் பணியை தமிழக
அரசே எடுத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இ-சேவை
மையங்கள் மூலமாக இந்தப் பணிகள் மேற்கொள்வதற்கான பூர்வாகங்கப் பணிகள்
தொடங்கப்பட்டிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
அடைமொழிச் சொல்லை சேர்க்கக் கூடாது
ஆதார் எண்ணுக்காக பயோ- மெட்ரிக் விவரங்களைப் பதிவு
செய்யும் போது சில குறிப்பிட்ட முன்சேர்க்கை, பின்சேர்க்கை பெயர்
விவரங்களைச் சேர்க்கக் கூடாது. அப்படிச் சேர்த்தால் ஆதார் எண் கிடைக்காமல்
நிராகரிக்கப்படும் என்று தேசிய மக்கள் பதிவேடு ஆணைய அதிகாரிகள்
தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
ஆதார் எண்ணுக்காக நமது அடிப்படை விவரங்களை கணினியில்
பதிவு செய்யும் போது, திரு, டாக்டர், ஐ.ஏ.எஸ்., என்கிற ஆகிய சொல்கள் இடம்
பெறக் கூடாது. இத்தகைய அடைமொழிச் சொல்களை கணினியில் உள்ளீடு செய்தால் ஆதார்
எண் வழங்கப்படாமல் நிராகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், திரு,
டாக்டர், ஐ.ஏ.எஸ். ஆகியன அடைமொழிகளாக இருந்தாலும், கணினியைப் பொருத்தவரை
அவற்றை ஒரு பெயராகவே ஏற்றுக் கொள்ளும்.
இதனுடன் உங்களது அசல் பெயரைச் சேர்க்கும் போது, அவற்றை
இரண்டு பெயர்களாக கணினி ஏற்கும். இதனால், போலி எனக் கருதி நிராகரிக்க
வாய்ப்பிருக்கிறது. எனவே, நமது பெயரை மட்டும் பதிவு செய்வது நல்லது.
விவரங்களைத் திருத்த...: ஆதார் எண் நமக்குக் கிடைத்த
பிறகு, அதிலுள்ள முகவரி, பிறந்த தேதி, செல்லிடப்பேசி எண் போன்ற விவரங்களை
மாற்றம் செய்ய நினைத்தால் நாமே அதைச் செய்யலாம். ஆதார் விவரங்களைத்
திருத்தம் செய்வதற்கான இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
அதற்கு முன்பாக தகுந்த ஆவணத்தின் நகலில்
கையெழுத்திட்டு, அதைக் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதாருக்குரிய
இணையதளத்தில் சென்று விவரங்களைத் திருத்தி, அதற்குரிய ஆவணத்தை பதிவேற்றம்
செய்துவிட்டால், குறைந்தபட்சம் 5 முதல் 7 வேலை நாள்களுக்குள் திருத்தம்
செய்யப்பட்ட ஆதார் கிடைத்து விடும் என்றனர் அதிகாரிகள்.
மாவட்ட வாரியாக எவ்வளவு?
ஜூலை முதல் வாரம் வரையிலான நிலவரம்
மாவட்டம் பயோ- மெட்ரிக் பதிவு ஆதார் எண் பெற்றோர் (சதவீதத்தில்)
1. அரியலூர் 101.19 94.52
2. தருமபுரி 100.40 92.27
3. திருநெல்வேலி 99.75 92.17
4. விருதுநகர் 94.26 91.99
5. திருச்சி 97.05 91.83
6. பெரம்பலூர் 111.89 91.56
7. மதுரை 93.89 91.09
8. கன்னியாகுமரி 93.04 90.91
9. திருவள்ளூர் 91.03 90.84
10. ஈரோடு 98.19 90.14
11. சேலம் 97.24 89.88
12. கரூர் 95.80 89.76
13. புதுக்கோட்டை 101.15 89.24
14. காஞ்சிபுரம் 89.94 89.25
15. தேனி 100.53 89.13
16. தூத்துக்குடி 99.02 89.18
17. நாகப்பட்டினம் 90.73 88.13
18. திண்டுக்கல் 93.40 87.48
19. வேலூர் 93.60 87.42
20. கடலூர் 92.64 86.89
21. நீலகிரி 98.11 86.81
22. கோவை 92.69 86.80
23. திருவாரூர் 90.04 86.73
24. சிவகங்கை 95.41 86.36
25. நாமக்கல் 93.30 86.19
26. திருவண்ணாமலை 98.18 85.92
27. தஞ்சாவூர் 93.17 85.40
28. விழுப்புரம் 90.46 85.10
29. கிருஷ்ணகிரி 96.00 83.19
30. ராமநாதபுரம் 95.44 78.58
31. திருப்பூர் 91.7 78.84
32. சென்னை 103.31 78.71
மொத்தம் 95.32 87.53