முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்
மின் நுகர்வோர்களுக்கான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எப்படி நிர்ணயித்தாலும், அதன் காரணமாக, ஏழை, எளிய மக்கள் எந்த விதத்திலும் பாதிப்படையாத வகையில், அதற்குத் தேவைப்படும் கூடுதல் மானியத்தை அரசு வழங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மின்சாரம் என்றாலே வாழ்வாதாரம் என்று சொல்லும் அளவுக்கு, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் மின் உற்பத்தியின் வளர்ச்சி பின்னிப் பிணைந்துள்ளது என்பதை கருத்தில் கொண்ட எனது தலைமையிலான அரசு, 2011-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த மூன்று ஆண்டு காலமாக மின் உற்பத்தியைப் பெருக்கவும், சீர்குலைந்து கிடந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை சீர்திருத்தவும் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மின்தடை முழுமையாக ரத்து செய்யப்பட்டதோடு, கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் சீரான மின்சாரம் தங்கு தடையின்றி தமிழக மக்களுக்கு கிடைத்து வருகிறது.
மின் உற்பத்தி என்று எடுத்துக் கொண்டால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,793 மெகாவாட் மின் நிறுவு திறன் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், நடுத்தரக் கால அடிப்படையில், 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதுவன்றி, கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அலகிலிருந்து தற்போது 562 மெகாவாட் மின்சாரமும்; நீண்டகால கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் 224 மெகாவாட் மின்சாரமும் தமிழ்நாட்டிற்கு கிடைக்கின்றது.
மொத்தத்தில், 4,079 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கூடுதலாக கிடைத்து வருகிறது. புதிய மின் திட்டங்கள் மூலமாக 1,430 மெகாவாட் மின்சாரம்; நீண்ட கால கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் 776 மெகாவாட் மின்சாரம் என மொத்தம் 2,206 மெகாவாட் மின்சாரம் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் நமக்கு மேலும் கிடைக்க இருக்கிறது.
முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் சீர்குலைந்து கிடந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை மீட்டெடுப்பதற்காக 25,255 கோடி ரூபாய் நிதியுதவியினை எனது தலைமையிலான அரசு செய்துள்ளது. இதில், மின் நுகர்வோருக்கான மின் கட்டண மானியமாக 11,149 கோடி ரூபாயை எனது தலைமையிலான அரசு வழங்கியுள்ளது. மேலும், 2014-2015 ஆம் ஆண்டிற்கு 10,575 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மின்சாரம் தயாரிப்பதற்கு ஏற்படும் எரிபொருள் செலவு, தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பெறப்பட்ட கடனுக்கான வட்டித் தொகை மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டண விகித மாறுதல் கேட்டு அதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சமர்ப்பிக்க வேண்டும் என்று 2005 ஆம் ஆண்டு மின் கட்டண ஒழுங்குமுறை விதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அவ்வாறு சமர்ப்பிக்காவிட்டால், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையாக மின் கட்டண நிர்ணயத்தை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஒழுங்குமுறை ஆணைய விதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மின்சார மேல் முறையீட்டு தீர்ப்பாயமும், தனது 11.11.2011 நாளிட்ட தீர்ப்பில், மின்பகிர்வு உரிமைதாரர்கள் மின் கட்டண நிர்ணயத்திற்கான மனுவினை சமர்ப்பிக்காமல் ஒரு மாதத்திற்கு மேல் தாமதம் செய்தால், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் தன்னிச்சையாக மின் கட்டணங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. மத்திய பாஜக கூட்டணி அரசால் இயற்றப்பட்ட 2003 ஆம் ஆண்டு மின்சார சட்டமும், மின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான அதிகாரத்தை மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அளித்துள்ளது.
மின் கட்டணங்கள் மாற்றம்
இந்த நிலையில், 2003 ஆம் ஆண்டைய மத்திய மின்சார சட்டம், 2005 ஆம் ஆண்டைய மின் கட்டண நிர்ணய விதிகள் மற்றும் மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவு ஆகியவற்றின் அடிப்படையில், மின் கட்டணங்களை மாற்றி அமைக்கும் விதமாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொது அறிவிப்பு ஒன்றினை இன்று (23.9.2014) வெளியிட்டுள்ளது.
உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியின் விலை டன் ஒன்றிற்கு தற்போது 3,298 ரூபாய் என உயர்ந்துள்ளதையும்; வெளிநாட்டு நிலக்கரியின் விலை 6,896 ரூபாய் என உயர்ந்துள்ளதையும்; பணியாளர் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கான செலவு நடப்பு ஆண்டில் 4,370 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளதையும்; தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான மேம்பாட்டுப் பணிகளுக்காக பெறப்பட்ட கடன்களின் மீதான வட்டிச் செலவினம் 8,463 கோடி ரூபாய் என உள்ளதையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் நுகர்வோர்களுக்கான உத்தேச மின் கட்டணத்தை நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்ட பின், அதன் மீது பொதுமக்கள் மற்றும் நுகர்வோரின் கருத்துகள் கேட்கப்பட்டு; நுகர்வோர் நலன், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நலன், எதிர்கால மின் திட்டங்கள் மற்றும் கட்டமைப்பிற்கான செலவினங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண நிர்ணயம் குறித்த இறுதி அறிவிக்கையை வெளியிடும்.
மின் நுகர்வோர்களுக்கான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எப்படி நிர்ணயித்தாலும், அதன் காரணமாக, ஏழை, எளிய மக்கள் எந்த விதத்திலும் பாதிப்படையாத வகையில், அதற்குத் தேவைப்படும் கூடுதல் மானியத்தை எனது தலைமையிலான அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment