தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிக் கட்ட கலந்தாய்வில் 180 பேருக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.
அகில இந்திய ஒதுக்கீட்டின் அடிப்படையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்த பிறகு சமர்ப்பிக்கப்பட்டுள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். காலியிடங்கள், தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் ஏற்பட்டுள்ள காலியிடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பி.டி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள அரசு ஒதுக்கீட்டு காலியிடங்கள், மேலும், மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் கல்லூரிகளை மாற்றிக் கொள்வதற்கான மறுஒதுக்கீடு ஆகியவற்றுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் நடைபெற்ற இறுதிக் கட்ட கலந்தாய்வின் முதல் நாளான திங்கள்கிழமை 500 பேர் பங்கேற்றனர்.
கலந்தாய்வின் முடிவில் 180 பேருக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.
கலந்தாய்வின் முதல் நாளான திங்கள்கிழமை மாலை, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 62 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் 41 எம்.பி.பி.எஸ். இடங்கள், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் 9 எம்.பி.பி.எஸ். இடங்கள், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 6 எம்.பி.பி.எஸ். இடங்கள், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் 5 எம்.பி.பி.எஸ். இடங்கள், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 1 எம்.பி.பி.எஸ். இடம் என மொத்தம் 62 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும், சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி உள்பட சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்களையும் நிரப்ப செவ்வாய்க்கிழமை (செப்.9) கலந்தாய்வு நடைபெறுகிறது.
No comments:
Post a Comment