Sunday 14 September 2014

திருவாரூர் கமலாலய குளத்தை சுற்றி கனரக வாகனங்கள் செல்ல தடை

 
திருவாரூர் கமலாலய குளத்தை சுற்றி கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மதிவாணன் கூறினார்.
கமலாலய குளம்
திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகும். இக்கோவிலின் மேற்கு கோபுர வாசலின் எதிரே அமைந்துள்ள கமலாலய குளத்தின் நடுவே நாகநாதர் கோவில் அமைந்துள்ளது. குளமே ஆலயமாக கருதப்படும் கமலாலய குளம் திருவாரூர் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர்ப்பரப்பாகும். கமலாலய குளத்தின் வடகரை தடுப்புச் சுவர் கடந்த 2012–ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. இதனால் வடகரை பகுதியில் கனரக வாகன போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது.

தண்ணீர் நிறுத்தம்
இடிந்து விழுந்த கமலாலய குளத்தின் தடுப்புச்சுவரை சீரமைக்க கடந்த 2013–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைதொடர்நது கடந்த ஏப்ரல் மாதம் பணிகள் தொடங்க இருந்த நிலையில், குளத்தில் தண்ணீர் இருந்ததால் தடுப்பு சுவர் கட்டும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து குளத்துக்கு தண்ணீர் வருவதை நிறுத்த தற்காலிக தடுப்பு ரூ.11 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இதனால் தற்போது கமலாலய குளத்தில் 3 அடி உயரமே தண்ணீர் உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 8–ந் தேதி புதிதாக பொறுப்பு ஏற்ற மாவட்ட கலெக்டர் மதிவாணன், சிறப்பு வாய்ந்த கமலாலய குளத்தின் இடிந்து விழுந்த தடுப்புச்சுவரை சீரமைப்பது தொடர்பாகவும், குளத்தை பழமை மாறாமல் பராமரிப்பது தொடர்பாகவும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உடனடியாக சீரமைப்பு பணிகளை தொடங்க உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்று சீரமைப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் மதிவாணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குளத்தின் 4 கரைகளிலும் நடந்தே சென்று பார்வையிட்ட கலெக்டர், படிக்கட்டுகளில் மணல் திட்டுகளையும், தேங்கி கிடக்கும் குப்பைகளையும் அகற்ற உத்தரவிட்டார்.

ஆய்வு குறித்து கலெக்டர் மதிவாணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பழமை மாறாமல்...
முதல்–அமைச்சர் ஜெயலலிதா பழமை வாய்ந்த திருவாரூர் தியாகராஜசுவாமி கோவிலையும், கமலாலய குளத்தையும் பழமை மாறாமல் சீரமைக்க உத்தரவிட்டார். அதன்படி சுற்றுலா, கலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் செயலாளர் கண்ணன் தியாகராஜ சுவாமி கோவிலில் நடைபெறும் திருப்பணிகளையும், கமலாலய குளக்கரை தடுப்புச் சுவர் சீரமைப்பு பணிகளையும் நேற்றுமுன்தினம் பார்வையிட்டார்.
அப்போது அவர், தொல்லியல் ஆய்வாளர் நரசிம்மன் தலைமையில் அரசால் அமைக்கப்பட்ட குழு கொடுத்த அறிக்கையின்படி தியாகராஜசுவாமி கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தின் தடுப்புச் சுவரையும், படித்துறையையும் பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் என்றும் குளத்தை சுற்றி 4 கரைகளிலும் உள்ள சாலையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் திருக்கொள்ளிகாடு, திருவாஞ்சியம், ஆவூர்பசுபதிகோவில் ஆகிய இடங்களில் உள்ள பிரசித்திப் பெற்ற கோவில்களில் கழிவறை கட்டவும், முத்துப்பேட்டையில் படகு தளம் அமைக்கவும், மூணாறு தலைப்பு பகுதியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தவும் அரசு செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.

கனரக வாகனங்களுக்கு தடை
அரசு செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் குளக்கரையின் உறுதிதன்மையை பாதுகாக்கும் விதமாக குளத்தை சுற்றி உள்ள சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. கனரக வாகனங்கள் செல்வதற்கு மாற்றுப்பாதை விரைவில் ஏற்படுத்தப்படும். கமலாலய குளத்தின் வடகரையில் இடிந்த தடுப்புச் சுவரை சீரமைப்பதற்கு முதல் கட்டமாக தற்காலிக தடுப்புச் சுவர் கட்டப்படும். அதைதொடர்ந்து பழமை பொலிவுடன் தடுப்புச் சுவர் அமைக்கப்படும். குளத்தை சுற்றிலும் தூய்மையாக பராமரிக்க 10 இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்படும். புரதான சின்னமாக விளங்கும் தியாகராஜர் கோவிலையும், கமலாலய குளத்தையும் பராமரிக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

No comments:

Post a Comment