Sunday, 6 July 2014

உளவியல் சோதனைக்காக மன்னிப்புக் கோரிய ஃபேஸ்புக்


அனுமதி இல்லாமல் மேற்கொண்ட உளவியல் பரிசோதனைக்காக ஃபேஸ்புக் மன்னிப்பு கேட்டுள்ளது. ஃபேஸ்புக் முதன்மை செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க் இதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக்கில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை தொடர்பாக சமீபத்தில் வெளியான செய்தி இணைய உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பெரும் சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் பயனாளிகள் மனநிலையில் ஏற்படும் தாக்கத்தை அறிவதற்காக, இந்த பரிசோதனை ரகசியமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபேஸ்புக் பயனாளிகளின் பக்கத்தில் வெளியாகும் செய்தி ஓடையில் (நியூஸ் ஃபீட்) திட்டமிட்டு மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, செய்திகளின் வரிசையில் இடம் பெற்ற முதல் செய்தி, நல்ல செய்தியாகவோ அல்லது தீங்கான செய்தியாகவோ இருக்கும் வகையில் அமைக்கப்பட்டது.
நியூஸ் ஃபீடில் பார்க்கும் செய்தி பயனாளிகள் வெளியிடும் கருத்தை பாதிக்கிறதா என அறிய இவ்வாறு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஏழு லட்சம் பயனாளிகளின் ஃபேஸ்புக் பக்கத்தில் இத்தகைய மாற்றத்தை செய்து ஒரு வார காலத்திற்கு அதன் விளைவுகள் கண்காணிக்கப்பட்டது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனை ரகசியமாகவே அரங்கேறியது. அதாவது பயனாளிகளுக்கு இது பற்றி எந்த தகவலும் தெரியாது. அமெரிக்க ஆய்விதழில் இது தொடர்பான கட்டுரை வெளியான பிறகே இந்த பரிசோதனை பற்றி உலகிற்கு தெரிய வந்தது.
பயனாளிகள் தங்கள் நியூஸ் ஃபீடில் படிக்கும் செய்தியின் தன்மை, அவர்கள் மனநிலையை பாதிக்கிறது என்பதே இந்த ஆய்வின் முடிவாக அமைந்தது.
இதன் பொருள், பயனாளிகள் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் நல்லவிதமான செய்தியை படித்தால், அதன் பிறகு அவர்கள் வெளியிடும் பதிவும் நல்லவிதமாகவே இருக்கிறது என்பதாகும். அதேபோல எதிர்மறையான செய்தியை படித்தால், அதன் தாக்கம் காரணமாக பயனாளிகள் பதிவும் எதிர்மறையாகவே இருக்கிறது.
செய்திகள் பயனாளிகள் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று உணர்த்திய இந்த ஆய்வு முடிவை விட, இந்த ஆய்வு பயனாளிகள் அனுமதி இல்லாமல் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
ஏற்கெனவே ஃபேஸ்புக் செயல்பாடு பலவிதமான அந்தரங்க உரிமை மீறல்களுக்கு வித்திட்டுள்ள நிலையில், பயனாளிகளுக்கு தெரியாமலேயே ஃபேஸ்புக் அவர்களை சோதனைக்கு உள்ளாக்கியது கடும் எதிப்புக்கு இலக்கானது.
இந்நிலையில், ஃபேஸ்புக் முதன்மை செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க் இது தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொழில்முனைவோர்களை சந்தித்து பேசும் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, அவர் இந்த சர்ச்சைக்காக மன்னிப்பு கேட்பதாக கூறினார்.
ஆனால், சாண்ட்பர்க் உண்மையில் இந்த ரகசிய சோதனைக்காக மன்னிப்பு கோரவில்லை. இந்தச் சோதனை நிறுவனங்கள் நடத்தும் வழக்கமான சோதனை என்று கூறிய அவர், இது தொடர்பாக தகவல் தெரிவித்த விதம்தான் மோசமாக அமைந்து விட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார்.
அதாவது, பயனாளிகளின் அனுமதி இல்லாமல் அவர்களை சோதனைக்கு உட்படுத்தியது பற்றி அவர் எதுவும் கூறவில்லை.
ஏற்கெனவே, இந்தச் சோதனையை முன்னின்று நடத்திய ஃபேஸ்புக் டேட்டா விஞ்ஞானி ஆடம் கிராமரும் இதற்காக மன்னிப்பு கோரியிருந்தார். இந்தச் சோதனையின் நோக்கம் பயனாளிகளுக்கு மேலும் சிறப்பான சேவையை வழங்குவது தான், யாரையும் வருத்த்திற்கு உள்ளாக்குவதில்லை என்று அவர் ஃபேஸ்புக் பதிவில் கூறியிருந்தார்.
எது எப்படியோ இந்த பரிசோதனை சமூக ஊடங்களின் தாக்கம் பற்றி மட்டும் அல்ல; அவற்றின் செயல்படும் விதம் பற்றியும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

No comments:

Post a Comment