பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள வான்வழித் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது.
ஏழாவது நாளை எட்டியுள்ள வான்வழித் தாக்குதல் ஏற்படுத்தியுள்ள சேதம் குறித்து காஸா சுகாதாரத் துறை செய்தித்தொடர்பாளர் கூறும்போது, "தெற்கு காஸா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் தந்தை, மகன் உள்பட 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ரஃபான், கான் யூனிஸ் நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
 
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இஸ்ரேலியப் படைகள் காஸா மீது வான்வழி தாக்குதல் நடத்தத் துவங்கியதில் இருந்து இதுவரை 170 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 80 பேர் அப்பாவி பொதுமக்கள். இவர்களில் 36 பேர் குழந்தைகள், 32 பேர் பெண்கள் ஆவர். 1,154 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 350 பேர் குழந்தைகள், 460 பேர் பெண்கள்" என்றார்.
 
இதற்கிடையில், இஸ்ரேலின் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய நகரங்களில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு ஹமாஸ் ஆதரவு பெற்ற அல் கசாம் படையினர் பொறுப்பேற்றுள்ளனர். காஸா பகுதியில் இருந்து 700 ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதே போல், கடந்த 7 நாட்களில் இஸ்ரேல் 1000 முறை வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது. ஞாயிறன்று கூடிய இஸ்ரேல் அமைச்சரவை கூட்டத்தில் காஸா பகுதியில் தாக்குதலை தொடர முடிவு எட்டப்பட்டுள்ளது.
 
தாக்குதலை நிறுத்த ஐ.நா. கோரிக்கை:
 
இந்நிலையில், காஸா பகுதியில் நிலவும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருமாறு இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'இரு தரப்பின் நலனையும் கருத்தில் கொண்டு, தற்போது நிலவும் அபாயகரமான சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடி தீர்வு காணப்பட வேண்டும். தாக்குதல்களால், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளில் அப்பாவி பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிராந்திய அமைதிக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் இத்தகைய தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்' என சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இஸ்ரேல் தாக்குதலில் பொதுமக்களே பெருமளவில் உயிரிழந்துள்ளதற்கு பான் கி மூன் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த சனிக்கிழமையன்று பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "காஸா மீதான தாக்குதலை தொடர்ந்து நடத்துவோம். இது தொடர்பாக சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்பட்டாலும் அதற்கு அடிபணிய மாட்டோம்" என்று அறிவித்திருந்தார்.
 
தரை வழி தாக்குதல்?
கடந்த 7 நாள்களாக காஸா பகுதி மீது இஸ்ரேல் வான் வழி தாக்குதல் மட்டுமே நடத்தி வருகிறது. அடுத்ததாக தரை வழியாக பாலஸ்தீனத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீனத்துக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் புரொடக்டிவ் எட்ஜ்' (Operation Protective Edge) என இஸ்ரேல் பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.