Wednesday, 23 July 2014

சிவசேனா எம்.பி.க்கள் மீதான புகார்; பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் கடும் அமளி

 

சிவசேனா எம்.பி.க்கள் மீதான புகார் குறித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டுள்ளது.

ரம்ஜான் நோன்பு இருந்த இஸ்லாமியர் ஒருவரை வற்புறுத்தி சப்பாத்தி சாப்பிட வைத்ததாக சிவசேனா கட்சி எம்.பி.,க்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள மராட்டிய மாநில இல்லத்தில் உணவு வழங்கும் பணியினை ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் கவனித்து வருகிறது. கடந்த வாரம் மராட்டிய பவனுக்கு வந்த 11 சிவசேனா எம்.பி.,க்கள் தங்களுக்கு சாப்பிட மகாராஷ்டிர உணவு வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் பணியில் இருந்த ஊழியர்கள் அவர்களுக்கு சப்பாத்தியை பரிமாறியுள்ளனர். இதனால் சிவசேனா கட்சியின் எம்.பி.க்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். பின்னர் மேற்பார்வையாளரை வலுக்கட்டாயமாக சப்பாத்தியை சாப்பிட வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

மேற்பார்வையாளராக இருந்த அர்ஷத் என்ற இஸ்லாமியர் ரம்ஜான் நோன்பு இருந்துள்ளார். அப்போது சிவசேனா எம்.பி.க்கள் அவரிடம் இவ்வாறு நடந்து கொண்டனர் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர தலைமைச்செயலாளர் சகாரியாவுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை சிவசேனா எம்.பி.,க்கள் மறுத்துள்ளனர். நாங்கள் யாருடைய நோன்பையும் கலைக்க வலியுறுத்தவில்லை. இவை அனைத்து பொய்யான குற்றச்சாட்டுக்கள். நாங்கள் மிகவும் தரம் குறைந்த உணவு மற்றும் தரமற்ற சேவைக்கே எதிர்ப்பு தெரிவித்தோம். என்று சிவசேனா கட்சியின் எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே கூறியுள்ளார்.

இந்நிலையில் இவ்விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்துள்ளது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இவ்விவகாரத்தை எழுப்பி பிற கட்சியின் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவைகள் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை 12:30 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக பேசிய பாராளுமன்ற விவகாரத் துறை மந்திரி வெங்கையா நாயுடு, இது ஒரு முக்கியமான விஷயம். இதில் உண்மை யாருக்கும் தெரியாது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். பின்னர் நாம் இதுகுறித்து பேசுவோம். என்று கூறினார்.

இதற்கிடையே பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குறிப்பிட்ட சிவசேனா கட்சியின் எம்.பி.க்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment