Wednesday 16 July 2014

குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ. 9.68 கோடியில் வேளாண் பொருள்கள்


திருவாரூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு ரூ. 9.68 கோடியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தில் வேளாண் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

திருவாரூர் மாவட்டத்தில் ஆட்சியர், வேளாண் அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் அடங்கிய வேளாண் சுற்றுலா செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதில், குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தில் வலங்கைமான் அருகே பாடகச்சேரியில் அரசின் 50% மானியத்தில் அமைக்கப்பட்ட பசுந்தாள் உரப்பயிர் தக்கைப்பூண்டு விதைப் பண்ணை, ஆலங்குடியில் 50% மானியத்தில் நுண்ணூட்டம் இடப்பட்ட மாற்றுப் பயிர் பருத்தி வயல், புலவர்நத்தத்தில் 100% மானியத்தில் வழங்கப்பட்ட இயந்திர களை அமுக்கும் கருவியின் பயன்பாடு, குறுவையில் இயந்திர திருந்திய நெல் சாகுபடி பணி ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தது:

குறுவை நடவுப் பணிகளை விரைந்து முடிக்க 50 விவசாய குழுவுக்கு 100% மானியத்தில் நடவு இயந்திரம், களை எடுக்கும் கருவி வழங்கப்படுவதால், நடவுப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. நிலத்தடி நீரைப் பயன்படுத்தி 24,800 ஹெக்டேரில் சாகுபடி செய்ய திட்டமிட்டு தற்போது வரை 14,030 ஹெக்டேரில் பணி முடிந்துள்ளது.

100% மானியத்தில் எச்டிபிஇ பைப்புகள் வழங்கப்படுவதால், நீர் ஆதாரத்திலிருந்து வயலுக்கு எடுத்துச் செல்லும் நீர் வீணாகாமல் கூடுதல் பரப்பளவில் சாகுபடி செய்ய முடிகிறது.
கோடை பருவத்தில் 5,329 ஹெக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருத்தி மினி மிஷன் 2-ம் திட்டத்தின் கீழ், 50% மானியத்தில் 1,500 ஹெக்டேருக்கு பருத்தி நுண்ணூட்டம் வழங்கப்பட்டது. ஹெக்டேருக்கு சராசரியாக 15 குவிண்டால் வரை கிடைக்கிறது.

மண் வளத்தை பாதுகாக்க பசுந்தாள் உரப் பயிர் சாகுபடி ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பை மற்றும் தக்கைப் பூண்டு விதைகள் 50% மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.

ஆய்வின் போது, மாவட்ட வேளாண் இணை இயக்குநர் க. மயில்வாகனன், வலங்கைமான் வேளாண் அலுவலர் தேவேந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment