தமிழக ஆளுநராக சென்னமனேனி வித்யாசாகர் ராவை நியமித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிர ஆளுநராகப் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவுக்கு இந்தப் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யாவின் பதவிக் காலம், கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (ஆக.30) நிறைவடைந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர முன்னாள் முதல்வரான ரோசய்யாவை தமிழகத்தின் ஆளுநராக கடந்த 2011-ஆம் ஆண்டில் முந்தைய மத்திய காங்கிரஸ் அரசு நியமித்தது. கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசுடன் சுமுகமான உறவுடன் செயல்பட்டு வந்ததால், ரோசய்யாவின் பதவிக் காலம் மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வித்யாசாகர் ராவை தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். இதுதொடர்பாக, குடியரசுத் தலைவர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
ரோசய்யா வகித்து வந்த தமிழக ஆளுநர் பொறுப்பை மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூடுதலாக கவனித்துக் கொள்வார்.
தமிழ்நாட்டின் ஆளுநராக முறைப்படி ஒருவரை நியமிக்கும்வரை அவர் இந்தப் பொறுப்பில் நீடிப்பார்.
அதேபோல, மத்தியப் பிரதேச ஆளுநராக இருந்து வந்த ராம் நரேஷ் யாதவின் பதவிக் காலம் நிறைவடைந்ததால், அப்பொறுப்பினை குஜராத் ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி கூடுதலாக கவனித்துக் கொள்வார்.
புதிய ஆளுநரை நியமிக்கும் வரை அவர் அப்பொறுப்பில் தொடர்வார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment