Sunday 4 September 2016

வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை வாய்ப்பு

லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம், ''லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. இப்போதும் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரக்கோணத்தில் 70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூரில் 60 மில்லி மீட்டர், மணமேல்குடி, மருங்காபுரி, திருவாலங்காடு, ஆலங்குடி, கோத்தகிரி, சின்னக்கல்லூறு ஆகிய பகுதிகளில் தலா 30 மில்லி மீட்டர், நீடாமங்கலம், தேவகோட்டை, பெருங்களூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிட்டாம்பட்டி, குடவாசல், பேராவூரணி, உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் தலா 20 மில்லி மீட்டர், காரைக்குடி, இலுப்பூர், அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை, வால்பாறை உள்பட 17 இடங்களில் தலா 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment