பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று புதிய வரலாறு: தனியாக விளையாடி சாதனையாளராக மாறிய மாரியப்பன்
ரியோ பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்ற தகவல் அறிந்ததும், அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டி கிராமம் விழாக்கோலம் பூண்டது. தங்கவேலு-சரோஜா தம்பதியின் மூத்த மகனான மாரியப்பனின் சாதனையை அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
வாடகை வீட்டில்...
மாரியப்பனின் சாதனையை டி.வி.யில் பார்த்து நெகிழ்ந்த அவரது தாயார் சரோஜா கூறியதாவது:-
எனக்கு மாரியப்பன் (வயது 21), குமார் (20), கோபி (16) ஆகிய மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகள் சுதாவுக்கு(26) திருமணம் ஆகி விட்டது. எங்களது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. ஊர், ஊராக சென்று காய்கறி வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். சொந்த வீடு கிடையாது. ரூ.500-க்கு வாடகை வீட்டில் வசிக்கிறோம்.
மாரியப்பனுக்கு 5 வயதாக இருக்கும் போது அந்த மோசமான சம்பவம் நடந்தது. நான் பஸ் நிறுத்தம் அருகே காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது வீதியில் விளையாடிய எனது மகனின் மீது எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது. இதில் அவனது வலது காலில் சக்கரம் ஏறியதில், வலது கால் பெருவிரல் தவிர்த்து மற்ற 4 விரல்களும் நசுங்கின. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தும், அதை குணப்படுத்த முடியவில்லை. என்றாலும் அவர் மனம் தளரவில்லை.
இதன் பிறகு எங்கள் ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்த்தோம். அங்கு அவர் நன்றாக படித்தார். அவருடைய விளையாட்டு ஆர்வத்தை கண்டறிந்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் தடகள போட்டியான உயரம் தாண்டுதலில் பயிற்சி பெற்று இப்போது இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறார்.
அவரது இந்த வெற்றியின் மூலம் பிறந்த ஊருக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கே பெருமை சேர்த்து இருக்கிறார்.
எனது மகனின் இந்த சாதனையை பாராட்டி தமிழக முதல்-அமைச்சர் ரூ.2 கோடி பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சியாளர் சொல்வது என்ன?
மாரியப்பனுக்கு தொடக்க காலத்தில் பயிற்சி அளித்த பெரிய வடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் கூறியதாவது:-
மாரியப்பன் வலது கால் பெருவிரல் தவிர்த்து மற்ற 4 விரல்களும் இன்றி சற்று சிரமப்பட்டு தான் நடப்பார். இடது காலை விட வலது கால் 7 சென்டிமீட்டர் அளவில் உயரம் குறைவாக இருப்பதால் அவருடைய நடையில் வேறுபாடு தெரியும். இருப்பினும், மாரியப்பனுக்கு படிப்பை போன்று விளையாட்டிலும் ஆர்வம் இருந்தது. ஆனால் மாரியப்பனால் வேகமாக ஓட முடியாததால் சக மாணவர்கள் அவரை விளையாட்டில் சேர்க்க தயங்குவார்கள். இதனால் ஏமாற்றம் அடையும் மாரியப்பன், மற்ற மாணவர்கள் விளையாடி முடிக்கும் வரை விளையாட்டு மைதானத்தில் ஒரு பார்வையாளராக காத்திருப்பார்.
பின்னர் மற்ற மாணவர்கள் விளையாடி முடித்து விட்டு சென்ற பிறகு தனியாக ஓடியாடி விளையாடுவார். இந்த நிலையில் அவருடைய உயரம் தாண்டும் ஆர்வத்தை கண்டறிந்து அவருக்கு பயிற்சி அளித்தோம். இன்றைக்கு மாரியப்பன் தன்னுடைய விடா முயற்சியால் இந்த சாதனை சிகரத்தை எட்டி உள்ளார். அவரை மனதார பாராட்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாரியப்பனின் காலை சரி செய்வதற்காக ரூ.3 லட்சம் ரூபாய் வரை அவரது பெற்றோர் மருத்துவ செலவு செய்துள்ளனர். அதற்காக வாங்கிய கடனை இன்னும் அடைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இனி அந்த கவலை இருக்காது. முதல்வேலையாக தனது தாயாருக்கு சொந்த வீடு கட்டித்தர வேண்டும் என்கிறார், இந்த ‘தங்க மகன்’ மாரியப்பன்.
No comments:
Post a Comment