Thursday, 29 September 2016

உள்ளாட்சி அலுவலக கட்டடங்களை அரசியல் பணிகளுக்குப் பயன்படுத்த தடை

உள்ளாட்சி அமைப்புகளின் அரசு கட்டடங்களை எக்காரணம் கொண்டும் அரசியல் தலைவர்கள் பயன்படுத்த மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோருக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.
அதில், உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், பேரூராட்சிகள், மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் அலுவல் சாரா உறுப்பினர்கள், உதாரணமாக அரசியல் தலைவர்கள் தலைமையில் நடத்தப்படும் சட்டப்பூர்வமான கூட்டங்கள், அந்தந்த அமைப்புகளின் மூத்த அலுவலர்களால் மட்டுமே கட்டாயம் நடத்த வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் வறட்சி, வெள்ள நிவாரணம் போன்ற முக்கிய அவசரத் தேவைகளை மட்டும் கருத்தில் கொண்டு விவாதிக்கலாம். அத்துடன் புதிய திட்டங்கள், நிதி வழங்குதல் தொடர்பாக அதில் விவாதிக்க கூடாது.
மேலும் மனு நீதிநாள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களை தேர்தல் நடைமுறைகள் முடியும் வரையில் நடத்தக் கூடாது. அதேபோல், அரசு நிதியிலிருந்து கட்டப்பட்ட உள்ளாட்சி கட்டடங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களை எக்காரணம் கொண்டும் தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தக் கூடாது.
அந்தக் கட்டடங்களின் அறையை பூட்டி மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அதோடு நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், மன்ற உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட எந்த ஒரு கட்சியினராலும் இக்கட்டடங்கள் பயன்படுத்தவில்லை என்பதையும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் உறுதி செய்வது அவசியம்.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு வாகனங்களையும், அவர்களிடமிருந்து திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த நாளிலிருந்து நடைமுறைக்கு வருவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment