Tuesday 6 September 2016

தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்து விட கர்நாடகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்திற்கு தினமும் 15,000 கன அடி வீதம் காவிரி நீரை 10 நாட்களுக்குத் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழக விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரணமாக இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. 

மேலும் காவிரியில் இருந்து நீர் திறந்து விடுவதை காவிரி கண்காணிப்புக் குழு மேற்பார்வையிடவும், இதற்காக காவிரி கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு 3 நாட்களுக்குள் அணுகவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

தங்களது கோரிக்கையை தமிழகம் 3 நாட்களுக்குள் குழுவிடம் அளிக்க வேண்டும். 3 நாட்களுக்குப் பிறகு கர்நாடக அரசின் நிலையை குழு கேட்டறிய வேண்டும். இரு மாநில நிலமைகளையும் கேட்டறிந்து 4 நாட்களில் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். 

காவிரியில் 50 டிஎம்சி தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிரக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ளது. அடுத்த விசாரணை 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக இந்த விசாரணையை முன்னிட்டு கர்நாடகாவில் கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கட்டுப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment