திருவாரூர் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.–தி.மு.க. உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நகரசபை தலைவர் அறையின் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டது.
உள்ளிருப்பு போராட்டம்
திருவாரூர் நகரசபை அவசர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக கடந்த 6–ந்தேதி சாதாரண கூட்டத்தில் ஒத்தி வைக்கப்பட்ட 37 தீர்மானங்கள், இதனுடன் புதிதாக வைக்கப்பட்டிருந்த 7 தீர்மானங்களும் வாசிக்கும் பணி தொடங்கியது. அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது அ.தி.மு.க.–தி.மு.க. உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு நகராட்சி தலைவர் ரவிச்சந்திரன் கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன என்று கூறி கூட்ட அறையை விட்டு வெளியேறி, தனது அறைக்கு சென்றார். அவருடன் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சென்றனர்.
இதனை தொடர்ந்து கூட்ட அரங்கில் இருந்த 15 தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் 2 காங்கிரஸ், 2 சுயேச்சை உறுப்பினர்கள், நகரசபை தலைவரின் தன்னிச்சையான முடிவை கண்டித்து கோஷங்கள் எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு எழுதி, அதில் 19 உறுப்பினர்கள் கையெழுத்து போட்டு நகராட்சி ஆணையரிடம் கொடுக்க முயன்றனர். அவர் வெளியில் சென்றதால் அலுவலக மேலாளரிடம் மனுவை வழங்கினர்.
வாக்குவாதம்
பின்னர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ், சுயேச்சை உறுப்பினர்கள் நகராட்சி அலுவலகம் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து நகரசபை தலைவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது கோஷங்கள் எழுப்பியவர்கள் மீது சைக்கிள் வீசப்பட்டது. மேலும் குடம், கற்களும் வந்து விழுந்தன. இந்த நிலையில் அங்கு வந்த அ.தி.மு.க. உறுப்பினர்களும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து நகராட்சி வாசலில் பாதுகாப்பில் இருந்த திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில், போலீசார் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தங்களது பிரச்சினைகளை புகாராக அளிக்கும்படி கூறினர். இதனை தொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ், சுயேச்சை உள்பட 19 உறுப்பினர்கள் நகரசபை கூட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து புகார் கொடுக்க புறப்பட்டனர்.
அப்போது நகரசபை தலைவர் ரவிச்சந்திரன் அறையின் மீது யாரோ கற்களை வீசினர். இதில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இந்த பிரச்சினையால் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவானது. இதனால் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment