Thursday, 8 September 2016

தமிழக காவல்துறை டி.ஜி.பி.யாக டி.கே. ராஜேந்திரன் பொறுப்பேற்பு

தமிழக காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி. யாக (பொறுப்பு) டி.கே.ராஜேந்திரன் புதன்கிழமை பொறுப்பேற்றார். இதேபோல சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக மூன்றாவது முறையாக எஸ்.ஜார்ஜ் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இது குறித்த விவரம்:
தமிழக காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்த அசோக்குமார் கடந்த 2015ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இருப்பினும் தமிழக அரசு அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது. இதன்படி அசோக்குமார், இந்த ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி வரை பணியில் இருக்கலாம்.
இந்த நிலையில், அசோக்குமார், தனக்கு விருப்ப ஓய்வு கேட்டு தமிழக அரசிடம் முறையிட்டதாக தெரிகிறது. அந்த முறையீட்டை ஏற்ற அரசு, அவரைப் பணியில் இருந்து இம்மாதம் 6-ஆம் தேதி விடுவித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரனை, நுண்ணறிவுப் பிரிவு டி.ஜி.பி.யாக நியமித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ் புதன்கிழமை உத்தரவிட்டார். மேலும் அந்த உத்தரவில், சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி. பணியை ராஜேந்திரன் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவையடுத்து, புதன்கிழமை நண்பகல் 1.40 மணியளவில் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வந்து பொறுப்பேற்றுக்கொண்டார் ராஜேந்திரன்.
பின்னர் ராஜேந்திரன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
எனக்கு வழங்கப்பட்ட பணியை செவ்வனே செய்வேன். பொதுமக்கள் எனக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாநிலத்தில், சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிக்கப்படும் என்றார் அவர்.
சென்னை காவல் ஆணையர்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் இருந்த டி.ஜி.பி. எஸ்.ஜார்ஜை, சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக நியமித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் அபூர்வ வர்மா உத்தரவிட்டார்.
இதேபோல சென்னை பெருநகர காவல்துறை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த சு.அருணாசலத்தை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.யாக நியமித்து அபூர்வ வர்மா உத்தரவிட்டார்.
இந்த உத்தரவையடுத்து, டி.ஜி.பி. எஸ்.ஜார்ஜ், புதன்கிழமை பிற்பகல் 2.50 மணியளவில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment