வருகிற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நன்னிலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைய உள்ள வாக்குபதிவு மையம் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நன்னிலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைய உள்ள வாக்குபதிவு மையம் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணும் மையம் நன்னிலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட உள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, வாக்கு எண்ணும் மையங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி,கழிவறை வசதி, மற்றும் மாற்றுதிறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்தள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அவர் உத்தரவிட்டார்.
கால அவகாசத்தில்
முன்னதாக நன்னிலம் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். தாசில்தார் அலுவலகத்தில் தற்போது உள்ள பணியிடங்கள், காலி பணியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். தாசில்தார் அலுவலக வாயிலாக வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை, சாதி, வருமானம், இருப்பிடச்சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்த பொதுமக்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசத்தில் வழங்க வேண்டுமென தாசில்தாருக்கு, அவர் உத்தரவிட்டார். இ–சேவை மைய செயல்பாடுகள், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் சான்றிதழ்கள் வழங்க எடுத்து கொள்ளப்படும் அவகாசங்கள் மற்றும் ஆதார் அட்டை கோரி பொது மக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் குறித்தும் ஆய்வு செய்து பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அதனை பரிசீலனை செய்து உரிய தீர்வு காண தாசில்தாருக்கு கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது திருவாரூர் உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, உதவி ஆணையர் (கலால்) அசோகன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பாரதிதாசன், நன்னிலம் தாசில்தார் சுந்தரவடிவேலு, நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், சிவகுமார், ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment