Thursday, 29 September 2016

உள்ளாட்சி அலுவலக கட்டடங்களை அரசியல் பணிகளுக்குப் பயன்படுத்த தடை

உள்ளாட்சி அமைப்புகளின் அரசு கட்டடங்களை எக்காரணம் கொண்டும் அரசியல் தலைவர்கள் பயன்படுத்த மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோருக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.
அதில், உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், பேரூராட்சிகள், மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் அலுவல் சாரா உறுப்பினர்கள், உதாரணமாக அரசியல் தலைவர்கள் தலைமையில் நடத்தப்படும் சட்டப்பூர்வமான கூட்டங்கள், அந்தந்த அமைப்புகளின் மூத்த அலுவலர்களால் மட்டுமே கட்டாயம் நடத்த வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் வறட்சி, வெள்ள நிவாரணம் போன்ற முக்கிய அவசரத் தேவைகளை மட்டும் கருத்தில் கொண்டு விவாதிக்கலாம். அத்துடன் புதிய திட்டங்கள், நிதி வழங்குதல் தொடர்பாக அதில் விவாதிக்க கூடாது.
மேலும் மனு நீதிநாள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களை தேர்தல் நடைமுறைகள் முடியும் வரையில் நடத்தக் கூடாது. அதேபோல், அரசு நிதியிலிருந்து கட்டப்பட்ட உள்ளாட்சி கட்டடங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களை எக்காரணம் கொண்டும் தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தக் கூடாது.
அந்தக் கட்டடங்களின் அறையை பூட்டி மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அதோடு நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், மன்ற உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட எந்த ஒரு கட்சியினராலும் இக்கட்டடங்கள் பயன்படுத்தவில்லை என்பதையும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் உறுதி செய்வது அவசியம்.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு வாகனங்களையும், அவர்களிடமிருந்து திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த நாளிலிருந்து நடைமுறைக்கு வருவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Wednesday, 28 September 2016

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 149 பேர் வேட்பு மனு தாக்கல்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17 மற்றும் 19–ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 75 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று 2–வது நாளாக நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் நகராட்சி உறுப்பினர், பேரூராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 33 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 111 பேர், ஊராட்சி தலைவர் பதவிக்கு 5 பேர் என மொத்தம் 149 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tuesday, 27 September 2016

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 75 பேர் வேட்பு மனு தாக்கல்

திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பதவிக்கான உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17, 19–ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. மாவட்டத்தில் நேரடியாக 4,020 பதவிகளுக்கும், மறைமுகமாக 474 பதவிகளுக்கும் என மொத்தம் 4,494 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், நகராட்சி உறுப்பினர், பேரூராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இதில் திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 74 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஊராட்சி தலைவர் பதவிக்கு திருத்துறைப்பூண்டி பகுதியில் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். மொத்தத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 75 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Monday, 26 September 2016

திருவாரூர் நகரமன்ற தேர்தல்

திருவாரூர் நகரமன்ற தேர்தல் வரும் அக்டோபர் 17 அன்று நடைபெறள்ளது.
வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி அக்டோபர் 3 வரை செய்யலாம்.
கொடிக்கால் பாளையம் வார்டுகள் 7 மற்றும் 8 பொது பெண்களாக ஓதுக்கப்பட்டுள்ளது.

Friday, 23 September 2016

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி

முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதா 

முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காணொலி காட்சிகள் மூலம் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் ஜெயலலிதாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல் நலம் சீராக இருக்கிறது 

இதுகுறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘முதல்–அமைச்சர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக தங்களது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் இப்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும்’ கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா - எம்.ஜி.ஆர். பெஸ்ட் சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் திருவாரூர் மருத்துவ கல்லூரி நூலகத்திற்கு தொகுப்பு புத்தகங்கள் ஜெயலலிதா வழங்கினார்

ஜெயலலிதா-எம்.ஜி.ஆர். பெஸ்ட் சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் 6 மருத்துவ கல்லூரி நூலகத்திற்கு 10 தொகுப்பு புத்தகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கல்வி கற்க நிதியுதவி

எந்த ஒரு மாணவ, மாணவியும் கல்வி பயில்வதற்கு நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற தொலைநோக்கு சிந்தனையுடன், தாயுள்ளத்துடனும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை வாயிலாக கல்வி கற்க வசதியில்லாத ஏழை, எளிய மாணவ - மாணவிகளுக்கு கல்வி கற்பதற்காக நிதியுதவி வழங்கி வருகிறார்.

அந்த வகையில், அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் நமது எம்.ஜி.ஆர். பெஸ்ட் சேரிடபிள் டிரஸ்ட் மூலமாக 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 5 தொகுப்பு எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பிற்கான புத்தகங்களும் மற்றும் புரட்சித் தலைவி அம்மா பெஸ்ட் சேரிடபிள் டிரஸ்ட் மூலமாக 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 5 தொகுப்பு எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பிற்கான புத்தகங்களையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

10 தொகுப்பு புத்தகங்கள்

அதன்படி, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஈ.எஸ்.ஐ.எஸ். மருத்துவமனை, சென்னை, தமிழ்நாடு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவக் கல்லூரி நூலகங்களின் பயன்பாட்டிற்காக 4 ஆண்டு எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பிற்கு தேவையான அனைத்து புத்தகங்களும் அடங்கிய 10 தொகுப்பு புத்தகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார்.

Thursday, 22 September 2016

திருவாரூர் மாவட்ட நகராட்சிகள் தலைவர்கள் இட ஓதுக்கீடு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் 7 பேரூராட்சிகள் உள்ளன .இதில் திருவாரூர் நகராட்சி தலைவர் பொது  பெண்கள்  பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பொது எஸ் சி பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .திருத்துறைப்பூண்டி நகராட்சி தலைவர் எஸ் சி பெண்கள் பிரிவுக்கு  ஒதுக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி நகராட்சி தலைவர் பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சிகள்

கொரடாச்சேரி
நன்னிலம்
வலங்கைமான்
முத்துப்பேட்டை
குடவாசல்
நீடாமங்கலம்
பேரளம்

 

உள்ளாட்சித் தேர்தல்: பெண்கள் மட்டுமே போட்டியிடும் நகராட்சி -பேரூராட்சி பட்டியல்

தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என 4 வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. 

இந்த உள்ளாட்சி அமைப்பு களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ந்தேதிகளில் இருகட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. 
தற்போது இந்த அமைப்பு களின் 5 ஆண்டு பதவி காலம் அடுத்த மாதம் (அக்டோபர்) 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டபடி நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

தேர்தல் செலவுக்கான நிதி பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
இந்த தேர்தலில் பெண் களுக்கு 50 சதவீதம் இடஒதுக் கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி பெண்களுக்கு ஒதுக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளை கண்டறியும் பணி தீவிரமாக நடந்தது. 

இந்தப் பணிகள் அனைத் தும் முடிந்ததை தொடர்ந்து பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் பட்டியல் அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 
உள்ளாட்சி தேர்தலுக்காக வரும் 26-ந்தேதிக்குள் வாக்காளர் திருத்தப்பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
நாளை உள்ளாட்சி தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

ஒவ்வொரு பிரிவினருக் கும் ஒதுக்கப்பட்ட நகராட்சி கள் பட்டியல் விவரம் வருமாறு:-

எஸ்.சி. (பொது):-நெல்லிக் குப்பம், அரக்கோணம், நெல்லியாலம், ஆத்தூர், திருவேற்காடு, நரசிங்கபுரம், கூத்தாநல்லூர், மறைமலை நகர். 
எஸ்.சி. பெண்கள்:-ராணிப்பேட்டை, சீர்காழி, திருத்துறைப்பூண்டி, வால் பாறை, ஊட்டி, சங்கரன் கோவில், பேரணாம்பட்டு, குன்னூர், பெரம்பலூர். 

எஸ்.டி. பெண்கள்:-கூடலூர்.

பெண்கள் (பொது):-ஆம்பூர், குடியாத்தம், திருவத்தி புரம், வந்தவாசி, கும்ப கோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண் யம், அறந்தாங்கி, ஜெயங் கொண்டம், தேவக்கோட்டை, காரைக்குடி, கீழக்கரை, தாராபுரம், உடுமலை பேட்டை, கடையநல்லூர், தென்காசி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கோவில்பட்டி, காயல் பட்டினம், குழித்துறை, நாகர்கோவில், பத்மநாப புரம், சாத்தூர், விருதுநகர், திருத்தங்கல், ராசிபுரம், திருவாரூர், செங்கோட்டை, துறையூர். வாலாஜாபேட்டை, கடலூர், பழனி, வாணியம் பாடி, மேட்டுப்பாளையம், செங்கல்பட்டு, மதுராந்தகம், போடிநாயக்கனூர், குளித் தலை, மேட்டூர், கிருஷ்ணகிரி, அரியலூர், ராஜபாளையம், ஆற்காடு, அருப்புக்கோட்டை, திருமங்கலம், பெரியகுளம், தர்மபுரி, பொள்ளாச்சி, விழுப்புரம், கம்பம்.

பொது பட்டியல்

பொது:-தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், காஞ்சீபுரம். 
பெண்கள்:-செங்கல் பட்டு, மதுராந்தகம். 
எஸ்.சி. பொது:-மறை மலைநகர்.

மாவட்ட பஞ்சாயத்து
பொது:-திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவாரூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், சிவகங்கை, கன்னியாகுமரி.

எஸ்.டி. பெண்கள்:-நாமக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி.
எஸ்.டி. (பொது):-நீலகிரி, தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், ராமநாதபுரம்.
பெண்கள் (பொது):-காஞ்சீபுரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், புதுக் கோட்டை, மதுரை, தேனி, தூத்துக்குடி.

பேரூராட்சிகள் 

உள்ளாட்சி தேர்தலில் எஸ்.சி. (பொது), எஸ்.சி. பெண்கள், பெண்கள் (பொது) ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட பேரூராட்சி கள் விவரம் வருமாறு:-

எஸ்.சி. (பொது):-கொரடாச்சேரி, வேப்பத்தூர், பூலாம்பாடி, வீரபாண்டி, ஆர்.புதுப்பட்டி, பள்ளிப் பட்டு, களப்பநாயக்கன்பட்டி, இலஞ்சி, புதூர் (எஸ்), தொட்டியம்,  திருப்போரூர், பள்ளிகொண்டா, தேவதானப்பட்டி, தேரூர், காட்டுபுதூர், கனியூர், முதூர்.

அச்சரப்பாக்கம், கீழ்பென்னாத்தூர், கொளத்துபாளையம், தியாகதுருகம், அரும்பாவூர், ஆதனூர், கோடகிரி, சுந்தரபாண்டியபுரம், அகரம், சின்னக்காம்பாளையம், மணிமுத்தாறு, ருத்ராவதி, திட்டக்குடி, திருவேங்கடம், நெய்காரபட்டி, தேசூர், மூலகரைப்பட்டி, பொன்னேரி, கீலாம்பாடி, ஆயக்குடி, புதுப்பட்டி, கொம்பை, அனந்தபுரம், பீலூர், அதனி, மாமல்லபுரம்.
எஸ்.சி. பெண்கள் 
நடுவட்டம், ஐவேஸ், பி.மீனாட்சிபுரம், ஆயக்குடி, பட்டினம், கீரனூர், இடக்காளிநாடு, தாமரைகுளம், புதுப்பாளை யம், ஓவேலி, சீரபள்ளி, தென்கரை, மேலத்தூர், கீழ்குண்டா, வேடப்பட்டி, கங்குவார்பட்டி, எஸ்.கொடி குளம், கடத்தூர், அடிகரட்டி, மணல்மேடு, பெத்தநாயக்கன் பாளையம், உதயேந்திரம், கருங்குழி, திருப்பனந்தாள், கொங்கனாபுரம், கடயம்பட்டி, மரக்காணம், புலியூர், தலைஞாயிறு, பாலசமுத்திரம், மருதூர், கருப்பூர், சிதயங் கோட்டை, நாமகிரிப்பேட்டை, செந்தாரப்பட்டி, வாலாஜா பாத், மீஞ்சூர், பேரளம், பி.மல்லபுரம், படைவீடு, வீரகனூர், கீழ்வேலூர், ஆலங்கயம், அஞ்சுகிராமம், திருப்பத்தூர், பள்ளபட்டி, ஸ்ரீவைகுண்டம், சின்னாளபட்டி, வில்லுகுரி, கிள்ளியூர், அபிராமம், அருமனை, நாங்குநேரி, ஓமலூர், வி.புதூர், சேத்துப்பட்டு, போளூர், நாசரேத், வாசுதேவநல்லூர், அவல்பூந்துறை, கண்டனூர், காவிரிபட்டினம், வேங்கம்புதூர், கயத்தார், பெருமாகலூர், எட்டயபுரம், கொடுமுடி, பனகுடி, ஒத்தகால்மண்டபம், செய்யூர்புரம், வடக்கு வள்ளியூர், கழுகுமலை, காஞ்சிகோவில், மடத்துக்குளம், சுசீந்திரம், காசிபாளையம் (ஜி), சிறுமுகை, வலங்கைமான், சிவகிரி, அகஸ்தீசுவரம், பெருங்குளம், ஆழ்வார் திருநகரி, கீழ்குளம், திசையன் விளை, வேட்டவலம், சிவகிரி, வரதராஜன் பேட்டை, பண்ணைக்காடு, லால்பேட்டை, சூலூர், பனப்பாக்கம், திருநின்றவூர், பெரனமல்லூர், தென் தாமரைகுளம், பள்ளத்தூர், ஊத்துக்குளி, இலுப்பூர், வேளூர், திருச்செந்தூர், நெய்யூர், மதுக்கரை, மயிலாடி, குத்தாலம், கொட்டாரம், வேடசந்தூர், அரியப்பம்பாளையம், ஆலங்குடி, பொன்னமராவதி, சென்னிமலை, மருங்கூர், தென்கரை, சேரன்மகாதேவி, மொடக்குறிச்சி, இரணியல், திருவிடைமருதூர், திருவட்டார், ஆரணி, திருப்புவனம், அழகிய பாண்டி புரம், காவேரிபாக்கம், சித்தோடு, பி.ஜெ.சோழபுரம், பரங்கிபேட்டை, உண்ணா மலைகடை, நாரவாரிகுப்பம், பள்ளபாளையம், ஏர்வாடி, மாங்காடு, அரிமளம், ஏரல், சங்கராபுரம், காரமடை, ஆண்டிபட்டி, உடன்குடி, வளவனூர், லக்கம்பட்டி, கானாடுகாத்தான், சூளேஸ் வரன்பட்டி, மணலூர் பேட்டை, நல்லூர், பெரிய நெகமம், சோழிங்கர், கீரனூர், சிட்லபாக்கம், வீரபாண்டி, கணபதிபுரம், கண்ணம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், மானாமதுரை, பாப்பார பட்டி, ஆப்பகூடல், பழனி செட்டிப்பட்டி, தாழியூர், பொன்னம்பட்டி, கோட்டையூர், பெரிய கொடிவேரி, குறிஞ்சிபாடி, நெங்கம்புதூர், போத்தனூர், பெரியநாயக்கம்பாளையம், ஏ.வெள்ளாளப்பட்டி, கீழமங்கலம், கருமாத்தம் பட்டி, டி.கல்லுப்பட்டி, கீழப்பாவூர், கொல்லங்கோடு,  மொப்பேரிபாளையம்,  மேட்டுப்பாளையம், இளையாங்குடி, கமுதி, பாகோடு, ஜலகண்டபுரம், பாளையம், பள்ளப்பாளை யம், பூலம்பட்டி, பீர்க்கங் கரணை, கங்கைகொண் டான், பெருங்களத்தூர், அரக்கண்டநல்லூர், டி.என்.பி.எல்.புகளூர், பண்பொழி.

Wednesday, 21 September 2016

திருவாரூர், நீடாமங்கலத்தில் இருந்து பொதுவினியோக திட்டத்துக்கு 2,700 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

திருவாரூர், நீடாமங்கலத்தில் இருந்து பொது வினியோக திட்டத்துக்கு 2,700 டன் அரிசி சரக்கு ரெயிலில் தூத்துக்குடி, வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அரிசி 


திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அரவை செய்யப்பட்டு, அரிசி மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு பொதுவினியோக திட்டத்துக்காக பல மாவட்டங்களுக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று திருவாரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து அரிசி மூட்டைகள் 144 லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர், சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர்.

இதைத்தொடர்ந்து 29 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 1,500 டன் அரிசி பொதுவினியோக திட்டத்துக்காக திருவாரூரில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நீடாமங்கலம் 
இதைப்போல 

நீடாமங்கலத்தில் இருந்து வேலூருக்கு 1,200 டன் பொதுரக அரிசி பொதுவினியோக திட்டத்திற்காக நேற்று சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி பாமணி மத்திய சேமிப்புகிடங்கு, சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை, மன்னார்குடி வட்ட கிடங்கு ஆகியவற்றில் இருந்து லாரிகளில் அரிசி மூட்டைகள் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் முன்னிலையில் லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 29 பெட்டிகளில் ஏற்றினர். இதை தொடர்ந்து 1,200 டன் அரிசி மூட்டைகளுடன் சரக்கு ரெயில் வேலூருக்கு புறப்பட்டு சென்றது.

திருவாரூர், நீடாமங்கலம் ரெயில் நிலையங்களில் இருந்து மொத்தம் 2,700 டன் அரிசி பொது வினியோக திட்டத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tuesday, 20 September 2016

நன்னிலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் ஆய்வு

வருகிற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நன்னிலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைய உள்ள வாக்குபதிவு மையம் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நன்னிலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைய உள்ள வாக்குபதிவு மையம் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணும் மையம் நன்னிலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட உள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, வாக்கு எண்ணும் மையங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி,கழிவறை வசதி, மற்றும் மாற்றுதிறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்தள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அவர் உத்தரவிட்டார்.
கால அவகாசத்தில்
முன்னதாக நன்னிலம் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். தாசில்தார் அலுவலகத்தில் தற்போது உள்ள பணியிடங்கள், காலி பணியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். தாசில்தார் அலுவலக வாயிலாக வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை, சாதி, வருமானம், இருப்பிடச்சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்த பொதுமக்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசத்தில் வழங்க வேண்டுமென தாசில்தாருக்கு, அவர் உத்தரவிட்டார். இ–சேவை மைய செயல்பாடுகள், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் சான்றிதழ்கள் வழங்க எடுத்து கொள்ளப்படும் அவகாசங்கள் மற்றும் ஆதார் அட்டை கோரி பொது மக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் குறித்தும் ஆய்வு செய்து பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அதனை பரிசீலனை செய்து உரிய தீர்வு காண தாசில்தாருக்கு கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது திருவாரூர் உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, உதவி ஆணையர் (கலால்) அசோகன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பாரதிதாசன், நன்னிலம் தாசில்தார் சுந்தரவடிவேலு, நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், சிவகுமார், ஆகியோர் உடன் இருந்தனர்.

Monday, 19 September 2016

திருவாரூர் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.–தி.மு.க. உறுப்பினர்களிடையே வாக்குவாதம் நகரசபை தலைவர் அறையின் ஜன்னல் கண்ணாடி உடைப்பு

திருவாரூர் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.–தி.மு.க. உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நகரசபை தலைவர் அறையின் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டது.
உள்ளிருப்பு போராட்டம்
திருவாரூர் நகரசபை அவசர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக கடந்த 6–ந்தேதி சாதாரண கூட்டத்தில் ஒத்தி வைக்கப்பட்ட 37 தீர்மானங்கள், இதனுடன் புதிதாக வைக்கப்பட்டிருந்த 7 தீர்மானங்களும் வாசிக்கும் பணி தொடங்கியது. அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது அ.தி.மு.க.–தி.மு.க. உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு நகராட்சி தலைவர் ரவிச்சந்திரன் கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன என்று கூறி கூட்ட அறையை விட்டு வெளியேறி, தனது அறைக்கு சென்றார். அவருடன் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சென்றனர்.
இதனை தொடர்ந்து கூட்ட அரங்கில் இருந்த 15 தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் 2 காங்கிரஸ், 2 சுயேச்சை உறுப்பினர்கள், நகரசபை தலைவரின் தன்னிச்சையான முடிவை கண்டித்து கோஷங்கள் எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு எழுதி, அதில் 19 உறுப்பினர்கள் கையெழுத்து போட்டு நகராட்சி ஆணையரிடம் கொடுக்க முயன்றனர். அவர் வெளியில் சென்றதால் அலுவலக மேலாளரிடம் மனுவை வழங்கினர்.
வாக்குவாதம்
பின்னர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ், சுயேச்சை உறுப்பினர்கள் நகராட்சி அலுவலகம் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து நகரசபை தலைவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது கோஷங்கள் எழுப்பியவர்கள் மீது சைக்கிள் வீசப்பட்டது. மேலும் குடம், கற்களும் வந்து விழுந்தன. இந்த நிலையில் அங்கு வந்த அ.தி.மு.க. உறுப்பினர்களும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து நகராட்சி வாசலில் பாதுகாப்பில் இருந்த திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில், போலீசார் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தங்களது பிரச்சினைகளை புகாராக அளிக்கும்படி கூறினர். இதனை தொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ், சுயேச்சை உள்பட 19 உறுப்பினர்கள் நகரசபை கூட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து புகார் கொடுக்க புறப்பட்டனர்.
அப்போது நகரசபை தலைவர் ரவிச்சந்திரன் அறையின் மீது யாரோ கற்களை வீசினர். இதில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இந்த பிரச்சினையால் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவானது. இதனால் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Sunday, 18 September 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 18/9/2016

இன்னாலில்லாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்


நமதூர் புதுமனை தெரு அஸ்மாநாச்சியா அவர்கள் மௌத்

உஷார்! கலப்படம்...



உணவுப் பொருள்களில் உள்ள கலப்படத்தை கண்டறிய சில எளிய வழிகள்:
வெல்லம் 
வெல்லத்தின் மேல் பகுதியில் வெள்ளை வெள்ளையாக மாவு போன்று படிந்து  இளம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது ரசாயனத்தால் பிளீச் செய்யப்பட்டது.
பால் 
ஒரு தட்டை சாய்வாக  வைத்து அதில் அரை தேக்கரண்டி பாலைவிட்டால் சுத்தமான பாலாக இருந்தால் லேசாக நகரும் அல்லது அப்படியே நிற்கும். கலப்படப் பாலாக இருந்தால் வேகமாக கீழே ஓடி விடும்.
தேயிலை
தேயிலையை  ஈரமான டிஷ்யூ பேப்பரில் சிறிதளவு தூவினால் செயற்கை நிறம் தானாகப் பிரிந்துவிடும்.
சர்க்கரை 
சர்க்கரையை ஒரு கண்ணாடி டம்ளர் நீரில் கரைத்தால் அதில் கலந்துள்ள சாக்கட்டி தூள் மற்றும் ரவை இரண்டும் மேலே மிதக்கும்.
ஜவ்வரிசி 
ஜவ்வரிசியை 10 நிமிட நேரம் நீரில் ஊற வைத்து பிறகு முகர்ந்துப் பார்த்தால் பிளீச்சிங் வாசனை வரும்.
தானியங்கள் 
தானியங்களை உப்பு நீரில் போட்டால் அதில் கலந்துள்ள காளான் விதைகள் மிதக்கும். தானியம் அடியில் தங்கும்.
கோதுமை மாவு 
இது சற்று வெண்மை நிறமாகவும் அதிக நீர்விட்டுப் பிசையும் படியும் இருந்தால் அது கலப்பட கோதுமை மாவு.  இதில் செய்த சப்பாத்தி சுவையற்று கெட்டியாக இருக்கும்.
ஒரிஜினல் தேன் 
ஒரிஜினல் தேனை கண்டுபிடிக்க சுத்தமானப் பருத்தி துணியில் தேனை நனைத்து தீக்குச்சிப் பற்ற வைத்து அதில் காட்டினால் தீப்பிடித்து நன்றாக எரிந்தால் அது சுத்தத் தேன். கலப்பட தேன் என்றால் தீப்பட்டதும் அந்தத் துணி உடனே கருகிவிடும்.
காபித் தூள் 
ஒரு டம்ளர் நீரில் இலேசாக காப்பித்தூளைத் தூவினால் காப்பித்தூள் தண்ணீரின் மேல் மிதக்கும். ஆனால் அதில் கலந்துள்ள சிக்ரி சில விநாடிகளில் மூழ்கிவிடும். சிக்ரியில் அதிக அளவு கரு வெல்ல சாயம் இருப்பதால் ஒரு வித நிறத் தொடர்ச்சி காணப்படும்.
சாதாரண உப்பு 
சாதாரண உப்பில் வெள்ளை கல்லின் தூள் மற்றும் சாக்கட்டி போன்றவைகள் கலக்கப்படுகின்றன. இவைகளைக் கண்டுபிடிக்க ஒரு டம்ளர் நீரில் ஒரு தேக்கரண்டி சாதாரண உப்புத்தூளை கலக்கவும். சாக்கட்டி கலந்திருந்தால் அந்த நீர் வெள்ளை நிறமாவதோடு மற்ற அசுத்தமானப் பொருள்கள் கீழே தங்கிவிடும்.

Saturday, 17 September 2016

தமிழகத்தில் நேற்று இரவு எவ்வளவு மழை பெய்திருக்கிறது தெரியுமா?

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
வியாழக்கிழமை இரவும், சென்னையில் கன மழை பெய்தது. அதைப் போலவே, வெள்ளிக்கிழமை இரவும் மழை கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்தது. தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.
தமிழகத்தில் அதிகபட்சமாக மகாபலிபுரம், வடக்கு சென்னை, செம்பரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ. மழையும், டிஜிபி ஆபிஸ் மற்றும் சென்னையின் பிற பகுதிகளில் 5 செ.மீ. மழையும் பதிவானது.
திருவள்ளூர், கோலப்பாக்கம், காட்டுக்குப்பம், புழல், எச்விஎஃப் ஆவடி பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Friday, 16 September 2016

பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் நாளை இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் ரயில்வே நிலையங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது

Thursday, 15 September 2016

ஆதார்' எண் இல்லாவிட்டாலும் கல்வி உதவித்தொகை உண்டு

ஆதார் எண் இல்லாவிட்டாலும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் சார்பில், ஒன்றாம் வகுப்பு முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மாணவர்களுக்கு உதவித்தொகை திட்டங்கள், பல அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. பள்ளிகள் மூலம், கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், முறைகேடுகளை தடுக்கவும், போலி ஆவணங்கள் பெயரில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதை தவிர்க்கவும், மாணவர்களின் ஆதார் எண்ணை பதியும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆதார் எண்ணை பதிந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை கிடைக்கும் என, மத்திய அரசு அறிவித்தது.

அனைத்து மாணவர்களுக்கும், இன்னும் ஆதார் எண் வழங்கப்படாததால், பல லட்சம் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது, ஆதார் அட்டை இல்லாவிட்டாலும், கல்வி உதவித்தொகை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., கல்லுாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'ஆதார் எண் இல்லை என, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மறுக்கக்கூடாது.

'ஆதார் எண் இல்லா தோர், முகவரி அடையாள சான்றுடன், வங்கிக் கணக்கு எண்ணை பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட துறைகள் உதவித்தொகை வழங்கும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tuesday, 13 September 2016

விண்ணப்பித்த 4 நாள்களில் பாஸ்போர்ட்

விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) வழங்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் இது குறித்து கூறியதாவது:
விண்ணப்பிக்கும் எவரும் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பேன் கார்ட், ஆகிய மூன்று ஆவணங்களுடன் ஐ-அநெக்ஸ்சர் (ஐ-அய்ய்ங்ஷ்ன்ழ்ங்) இணைத்திருந்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும். பாஸ்போர்ட் கிடைக்கப் பெற்றவுடன் காவல்துறையின் சான்றாய்வு மேற்கொள்ளப்படும். தத்கல் எனப்படும் துரித பாஸ்போர்ட் திட்டத்திலிருந்து இது முற்றிலும் மாறானது
பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு விரைவாக காவல்துறை சான்றாய்வு பெற ஏதுவாக "மொபைல் போலீஸ் ஆப்' என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே மூன்று மாநிலங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தற்போது தமிழகத்தில் அறிமுகம் செய்ய மாநில அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
"மொபைல் போலீஸ் ஆப்' என்ற செயலியின் மூலம் காவல் துறை அதிகாரிகள் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களுக்கு காவல் துறை சான்றொப்பம் வழங்குவார்கள். இந்த புதிய செயலியின் மூலம் போலீஸ் சான்றொப்பம் கிடைப்பதற்கான நேரம் வெகுவாக குறையும். இந்தத் திட்டம் ஒருமாத காலத்தில் சென்னை, விழுப்புரம், கடலுôர் ஆகிய மாவட்டங்களிலும் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 280 இ-சேவை மையங்களில் இணைய வழி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வாழும் மக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெறுவதற்கு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சென்னை மண்டல் பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் 4 லட்சத்து பத்தாயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை மூன்று லட்சத்து மூன்றாயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிப்பார்ப்பதற்கான கால அளவு 19 நாட்களில் இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் அளித்த மறுநாளே அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பதற்கு அழைக்கப்படுவார்கள்.
புதிய பாஸ்போர்ட் அதிகாரி: தற்போது ஆளுகை மற்றும் பொதுக்கொள்கை மேற்படிப்புக்காக ஓராண்டுக்கு நான் இங்கிலாந்து செல்லவுள்ளேன். இதைத் தொடர்ந்து, பி.அசோக் பாபு சென்னை மண்டலத்தின் புதிய பாஸ்போர்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார் என்றார்
பாலமுருகன்.

ஹஜ்ஜுப்பெருநாள் :


Monday, 12 September 2016

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று புதிய வரலாறு: தனியாக விளையாடி சாதனையாளராக மாறிய மாரியப்பன்




















பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று புதிய வரலாறு: தனியாக விளையாடி சாதனையாளராக மாறிய மாரியப்பன்

ரியோ பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்ற தகவல் அறிந்ததும், அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டி கிராமம் விழாக்கோலம் பூண்டது. தங்கவேலு-சரோஜா தம்பதியின் மூத்த மகனான மாரியப்பனின் சாதனையை அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

வாடகை வீட்டில்...

மாரியப்பனின் சாதனையை டி.வி.யில் பார்த்து நெகிழ்ந்த அவரது தாயார் சரோஜா கூறியதாவது:-

எனக்கு மாரியப்பன் (வயது 21), குமார் (20), கோபி (16) ஆகிய மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகள் சுதாவுக்கு(26) திருமணம் ஆகி விட்டது. எங்களது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. ஊர், ஊராக சென்று காய்கறி வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். சொந்த வீடு கிடையாது. ரூ.500-க்கு வாடகை வீட்டில் வசிக்கிறோம்.

மாரியப்பனுக்கு 5 வயதாக இருக்கும் போது அந்த மோசமான சம்பவம் நடந்தது. நான் பஸ் நிறுத்தம் அருகே காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது வீதியில் விளையாடிய எனது மகனின் மீது எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது. இதில் அவனது வலது காலில் சக்கரம் ஏறியதில், வலது கால் பெருவிரல் தவிர்த்து மற்ற 4 விரல்களும் நசுங்கின. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தும், அதை குணப்படுத்த முடியவில்லை. என்றாலும் அவர் மனம் தளரவில்லை.

இதன் பிறகு எங்கள் ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்த்தோம். அங்கு அவர் நன்றாக படித்தார். அவருடைய விளையாட்டு ஆர்வத்தை கண்டறிந்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் தடகள போட்டியான உயரம் தாண்டுதலில் பயிற்சி பெற்று இப்போது இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறார்.

அவரது இந்த வெற்றியின் மூலம் பிறந்த ஊருக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கே பெருமை சேர்த்து இருக்கிறார்.

எனது மகனின் இந்த சாதனையை பாராட்டி தமிழக முதல்-அமைச்சர் ரூ.2 கோடி பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பயிற்சியாளர் சொல்வது என்ன?

மாரியப்பனுக்கு தொடக்க காலத்தில் பயிற்சி அளித்த பெரிய வடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் கூறியதாவது:-
மாரியப்பன் வலது கால் பெருவிரல் தவிர்த்து மற்ற 4 விரல்களும் இன்றி சற்று சிரமப்பட்டு தான் நடப்பார். இடது காலை விட வலது கால் 7 சென்டிமீட்டர் அளவில் உயரம் குறைவாக இருப்பதால் அவருடைய நடையில் வேறுபாடு தெரியும். இருப்பினும், மாரியப்பனுக்கு படிப்பை போன்று விளையாட்டிலும் ஆர்வம் இருந்தது. ஆனால் மாரியப்பனால் வேகமாக ஓட முடியாததால் சக மாணவர்கள் அவரை விளையாட்டில் சேர்க்க தயங்குவார்கள். இதனால் ஏமாற்றம் அடையும் மாரியப்பன், மற்ற மாணவர்கள் விளையாடி முடிக்கும் வரை விளையாட்டு மைதானத்தில் ஒரு பார்வையாளராக காத்திருப்பார்.

பின்னர் மற்ற மாணவர்கள் விளையாடி முடித்து விட்டு சென்ற பிறகு தனியாக ஓடியாடி விளையாடுவார். இந்த நிலையில் அவருடைய உயரம் தாண்டும் ஆர்வத்தை கண்டறிந்து அவருக்கு பயிற்சி அளித்தோம். இன்றைக்கு மாரியப்பன் தன்னுடைய விடா முயற்சியால் இந்த சாதனை சிகரத்தை எட்டி உள்ளார். அவரை மனதார பாராட்டுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாரியப்பனின் காலை சரி செய்வதற்காக ரூ.3 லட்சம் ரூபாய் வரை அவரது பெற்றோர் மருத்துவ செலவு செய்துள்ளனர். அதற்காக வாங்கிய கடனை இன்னும் அடைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இனி அந்த கவலை இருக்காது. முதல்வேலையாக தனது தாயாருக்கு சொந்த வீடு கட்டித்தர வேண்டும் என்கிறார், இந்த ‘தங்க மகன்’ மாரியப்பன்.

விநாயகர் சிலை ஊர்வலத்தில் முன்னாள் எம்.பி. வீட்டின் ஜன்னல் கண்ணாடி மீது கல்வீச்சு போலீஸ் விசாரணை

முத்துப்பேட்டையில் நேற்று வெற்றி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் பட்டுக்கோட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது யாரோ ஒருவர் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை முன்னாள் எம்.பி. அப்துல்ரகுமான் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மீது கல்வீசி தாக்கியதாக தெரிகிறது. இதில் கண்ணாடி உடைந்தது. தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sunday, 11 September 2016

நமதூர் மௌத் அறிவிப்பு 11/09/2016

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

நமதூர் பச்சைகிளி வீட்டு Y.முஹம்மது அபூசாலிஹ் அவர்களின் மனைவியும் செல்லதம்பி என்கிற செய்யது அமீருதீன் ,சேட் என்கிற அப்துல் ஃபத்தாஹ் ஆகியோர்களின் தாயாருமாகிய M.N ஹபீப் நாச்சியார்அவர்கள் மெளத் இன்று காலை 11 மணிக்கு (11.9.2016) நல்லடக்கம் செய்யப்படும்.

Saturday, 10 September 2016

ஸ்மார்ட்' ரேஷன் கார்டு: 'மொபைல்' சேவை துவக்கம்

ஸ்மார்ட்' ரேஷன் கார்டு திட்டத்திற்காக, மொபைல், 'ஆப்' சேவையை, உணவுத் துறை அறிமுகம் செய்து உள்ளது. தமிழகத்தில், தற்போது புழக்கத்தில் உள்ள, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி மூலம், மக்களிடம் இருந்து, 'ஆதார்' விபரம் பெறப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் பலரும், 'ஆதார்' விபரம் வழங்க, ரேஷன் கடைக்கு செல்வதால், கூட்டம் அதிகமாக உள்ளது. மக்கள், தங்கள் இடத்தில் இருந்தே, ஆதார் விபரத்தை வழங்க, மொபைல், 'ஆப்' சேவையை, உணவுத் துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையைப் பெற, மொபைல் போனில், 'டி.என்.இ.பி.டி.எஸ்.,' என்ற மொபைல், 'ஆப்'ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அதில், ரேஷன் கார்டுதாரர், தன் மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, சமர்ப்பிக்க வேண்டும். பின், அவற்றில் கேட்கப்படும் விபரங்களை, 'டைப்' செய்து, 'ஆதார்' அட்டையையும், 'பார் கோடு' வாயிலாக, 'ஸ்கேன்' செய்து சமர்ப்பிக்கலாம்.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை, கோவை போன்ற நகரங்களில், அதிக அளவில், மொபைல் போன் பயன்பாடு உள்ளது. இங்குள்ள பலர், ரேஷன் கடைக்கு செல்வது கிடையாது. எனவே, அவர்கள், ரேஷன் கடைக்கு சென்று காத்திருக்காமல், எளிய முறையில், ஆதார் விபரங்களை வழங்க, 'மொபைல் ஆப்' சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த சேவையை பயன்படுத்தி பலரும், தங்கள் ஆதார் விபரங்களை, விரைவாக வழங்கினால், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பணி, வேகம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Friday, 9 September 2016

ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

சரக்கு மற்றும் சேவை வரி அரசியல் அமைப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்தார். 

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேடி நடைமுறைப்படுத்தப்படும் முனைப்புடன் கொண்டு வரப்பட்ட நாட்டின் மிகப்பெரிய மறைமுக வரி விதிப்பு முறை மாற்றத்திற்கு தற்போது பிரணாப் ஒப்புதல் அளித்துள்ளார். 

நாட்டின் மறைமுக வரிகளை ஒருமுனைப்படுத்தும் நோக்கத்தில் மத்திய, மாநில வரிகளில் பெரும்பாலானவற்றை ஜிஎஸ்டி தனக்குள் கொண்டு வருகிறது, மதிப்புக்கூட்டு வரி, கலால் வரி, சேவை வரி, மத்திய விற்பனை வரி, கூடுதல் சுங்கத் தீர்வை, சிறப்பு சுங்கத்தீர்வை ஆகியவை ஜிஎஸ்டிக்குள் அடக்கப்படும். 

அரசமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு 50% மாநில சட்டப்பேரவைகளில் ஒப்புதல் பெறுவது அவசியம். இந்நிலையில் பாஜக ஆளும் அசாம் முதலில் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஒப்புதல் தெரிவிக்க இதுவரை 19 மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்ததையடுத்து பிரணாப் முகர்ஜி ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டது. 

அசாம் தவிர, பிஹார், ஜார்கண்ட், சட்டிஸ்கர், இமாச்சல் பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், டெல்லி, நாகாலாந்து, மகாராஷ்டிரா, ஹரியாணா, சிக்கிம், மிஜோரம், தெலுங்கானா, கோவா, ஒடிசா, ராஜஸ்தான், அருணாச்சல், மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. 

தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்து விட்ட நிலையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் கவனத்திற்கு இதனை மத்திய அரசு கொண்டு செல்லும். இந்த கவுன்சில் வரி விதிப்பு விகிதத்தை முடிவு செய்யும். இந்த கவுன்சிலுக்கு அருண் ஜேட்லி தலைவர், மாநில நிதியமைச்சர்கள் குழுவின் அங்கத்தினர்களாவர்.

Thursday, 8 September 2016

தமிழக காவல்துறை டி.ஜி.பி.யாக டி.கே. ராஜேந்திரன் பொறுப்பேற்பு

தமிழக காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி. யாக (பொறுப்பு) டி.கே.ராஜேந்திரன் புதன்கிழமை பொறுப்பேற்றார். இதேபோல சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக மூன்றாவது முறையாக எஸ்.ஜார்ஜ் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இது குறித்த விவரம்:
தமிழக காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்த அசோக்குமார் கடந்த 2015ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இருப்பினும் தமிழக அரசு அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது. இதன்படி அசோக்குமார், இந்த ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி வரை பணியில் இருக்கலாம்.
இந்த நிலையில், அசோக்குமார், தனக்கு விருப்ப ஓய்வு கேட்டு தமிழக அரசிடம் முறையிட்டதாக தெரிகிறது. அந்த முறையீட்டை ஏற்ற அரசு, அவரைப் பணியில் இருந்து இம்மாதம் 6-ஆம் தேதி விடுவித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரனை, நுண்ணறிவுப் பிரிவு டி.ஜி.பி.யாக நியமித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ் புதன்கிழமை உத்தரவிட்டார். மேலும் அந்த உத்தரவில், சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி. பணியை ராஜேந்திரன் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவையடுத்து, புதன்கிழமை நண்பகல் 1.40 மணியளவில் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வந்து பொறுப்பேற்றுக்கொண்டார் ராஜேந்திரன்.
பின்னர் ராஜேந்திரன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
எனக்கு வழங்கப்பட்ட பணியை செவ்வனே செய்வேன். பொதுமக்கள் எனக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாநிலத்தில், சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிக்கப்படும் என்றார் அவர்.
சென்னை காவல் ஆணையர்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் இருந்த டி.ஜி.பி. எஸ்.ஜார்ஜை, சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக நியமித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் அபூர்வ வர்மா உத்தரவிட்டார்.
இதேபோல சென்னை பெருநகர காவல்துறை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த சு.அருணாசலத்தை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.யாக நியமித்து அபூர்வ வர்மா உத்தரவிட்டார்.
இந்த உத்தரவையடுத்து, டி.ஜி.பி. எஸ்.ஜார்ஜ், புதன்கிழமை பிற்பகல் 2.50 மணியளவில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Wednesday, 7 September 2016

அக். 1 முதல் ஆதார் எண் வழங்கும் அரசு கேபிள் நிறுவனம்!

ஆதார் எண் வழங்கும் பணியை அக்டோபர் 1 முதல் தமிழக அரசின் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்திடம் அளிக்கப்பட உள்ளது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் மேற்கொண்ட கணக்கெடுப்பு விவரங்களை பாரத மிகு மின் நிறுவனம் கணினியில் சேகரித்து வருகிறது. இந்த நிலையில், பாரத மிகு மின் நிறுவனத்திடம் இருந்து ஆதார் எண் வழங்கும் பணியை தமிழக அரசின் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதன்படி, அக்டோபர் 1 முதல் 400-க்கும் மேற்பட்ட இ. சேவை மையங்களில் ஆதார் எண் வழங்கப்பட உள்ளன.
ஆதார் எண் கிடைக்கப் பெற்றவர்களுக்கு பிளாஸ்டிக் வடிவிலான அடையாள அட்டைகளை அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்கெனவே வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

Tuesday, 6 September 2016

வெளிநாட்டு மௌத் அறிவிப்பு 06/09/2016

நமதூர் முன்னாள் நாட்டாண்மை மர்ஹும் கோ மு உபையத்துல்லாஹ் அவர்களின் மருமகன் ஹசனுதீன் அவர்கள் மலேசியாவில் மௌத்.



இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்து விட கர்நாடகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்திற்கு தினமும் 15,000 கன அடி வீதம் காவிரி நீரை 10 நாட்களுக்குத் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழக விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரணமாக இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. 

மேலும் காவிரியில் இருந்து நீர் திறந்து விடுவதை காவிரி கண்காணிப்புக் குழு மேற்பார்வையிடவும், இதற்காக காவிரி கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு 3 நாட்களுக்குள் அணுகவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

தங்களது கோரிக்கையை தமிழகம் 3 நாட்களுக்குள் குழுவிடம் அளிக்க வேண்டும். 3 நாட்களுக்குப் பிறகு கர்நாடக அரசின் நிலையை குழு கேட்டறிய வேண்டும். இரு மாநில நிலமைகளையும் கேட்டறிந்து 4 நாட்களில் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். 

காவிரியில் 50 டிஎம்சி தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிரக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ளது. அடுத்த விசாரணை 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக இந்த விசாரணையை முன்னிட்டு கர்நாடகாவில் கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கட்டுப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Monday, 5 September 2016

விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனை கள் ஊக்க உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2015-16-ஆம் கல்வியாண்டில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத்தில் படிக்கும் தகுதியுடைய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் மாணவர் அல்லாதோரிடமிருந்து விளையாட்டு ஊக்க உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஊக்க உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதில் உயர்நிலை, மேல்நிலை பள்ளியில் படிப்பவர்கள் மற்றும் மாணவர் அல்லாதோருக்கு ரூ.10,000, கல்லூரி, பல்கலைக்கழகத்தில் படிக்கும் வீரர்களுக்கு ரூ.13,000 வழங்கப்படுகி றது. 1.7.2014 முதல் 30.6.2015 மாதம் வரையிலான கால கட்டத்தில் விளையாட்டுத் துறையில் வெற்றிகளைப் பெற்று தகுதியும் திறனுமுடைய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு குழுமம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டுக்கழகங்கள், இந்திய விளையாட்டு குழுமம் நடத்தும் போட்டிகள் மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பத்தை அலுவலக வேலை நாட்களில் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ரூ.10 செலுத்தி செப்.10-ஆம் தேதிக்குள் பெற்று, தக்க அசல் சான்றிதழ் மற்றும் நகல் ஆகியவற்றுடன் நேரில் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04366-227158 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Sunday, 4 September 2016

வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை வாய்ப்பு

லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம், ''லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. இப்போதும் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரக்கோணத்தில் 70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூரில் 60 மில்லி மீட்டர், மணமேல்குடி, மருங்காபுரி, திருவாலங்காடு, ஆலங்குடி, கோத்தகிரி, சின்னக்கல்லூறு ஆகிய பகுதிகளில் தலா 30 மில்லி மீட்டர், நீடாமங்கலம், தேவகோட்டை, பெருங்களூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிட்டாம்பட்டி, குடவாசல், பேராவூரணி, உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் தலா 20 மில்லி மீட்டர், காரைக்குடி, இலுப்பூர், அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை, வால்பாறை உள்பட 17 இடங்களில் தலா 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Saturday, 3 September 2016

குற்றங்களை விரைந்து தடுக்க "ஹலோ போலீஸ்': எஸ்.பி. தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் குற்றங்களை விரைந்து தடுக்கும் வகையில் "ஹலோ போலீஸ்' தொடங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம்.மயில்வாகணன் தெரிவித்தார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது: மாவட்டத்தில் நிகழும் குற்றங்களை தடுக்கவும், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் ஹலோ போலீஸ் தொடங்கப்பட்டு 8300087700 என்ற தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆங்காங்கே நிகழும் குற்றங்கள் குறித்து தகவல் தெரிவி க்கலாம். தகவல் கொடுப்பவர் குறித்த ரகசியம் காக்கப்படும்.
ஏதேனும் ஒரு நிகழ்வில் பாதிக்கப்படுபவர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் குற்றங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். குற்றத்தகவல் கிடைத்தவுடன் அந்தந்த பகுதி காவல் நிலையங்கள் மற்றும் இருசக்கர ரோந்துப்பணி காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஹலோ போலீஸ் மூலம் வரும் தகவல்கள் குறித்து நாள்தோறும் எனது கவனத்துக்கு வந்தவுடன் அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாவட்டத்திலுள்ள 5 துணைக் காவல் கண்காணிப்பு பகுதிகளில் செயின் பறிப்பு, கத்தியைக் காட்டி பணம் பறிக்கும் கும்பலை கண்டுபிடிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 17 வயதுக்கு கீழ் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முத்துப்பேட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலப் பாதுகாப்பில் 8 மாவட்டத்திலிருந்து சுமார் 2,000 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர் என்றார் மயில்வாகணன்.
பேட்டியின்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அப்துல்லா, திருவாரூர் டிஎஸ்பி வீ.சுகுமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் 9,71,178 வாக்காளர்கள்: ஆட்சியர் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் 9,71,178 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் 1.9.2016 வரையிலான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்துக்கட்சி பிரமுகர்களிடம் வியாழக்கிழமை வெளியிட்டு மேலும் ஆட்சியர் பேசியது: மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 4 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், திருவாரூர் தொகுதியில் 1,25,439 ஆண்கள், 1,27,742 பெண்கள், இதரர் 13 பேர் என மொத்தம் 2,53,194 வாக்காளர்கள் உள்ளனர்.
இதேபோல், திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் 1,11,074 ஆண்கள், 1,11,900 பெண்கள், இதரர் 1 என மொத்தம் 2,22,975 வாக்காளர்களும், மன்னார்குடி தொகுதியில் 1,19,040 ஆண்கள், 1,22,443 பெண்கள், இதரர் 3 என மொத்தம் 2,41,486 வாக்காளர்களும், நன்னிலம் தொகுதியில் 1,28,623 ஆண்கள், 1,24,899 பெண்கள், இதரர் 1 என மொத்தம் 2,53,523 வாக்காளர்களும் உள்ளனர். அதன்படி, மாவட்டத்தில் 4 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 4,84,176 ஆண்கள், 4,86,984 பெண்கள், இதரர் 18 என மொத்தம் 9,71,178 வாக்காளர்கள் உள்ளனர். 29.4.2016 வரை 4 தொகுதிகளில் மொத்தம் 9,70,413 வாக்காளர்கள் இருந்தனர்.
அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில், 4 தொகுதிகளிலும் 446 ஆண்கள், 384 பெண்கள் என மொத்தம் 830 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல், 34 ஆண்கள், 31 பெண்கள் என மொத்தம் 65 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல்கள் திருவாரூர், மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகம், அனைத்து வட்ட அலுவலகம், அனைத்து நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். தவிர 1,152 வாக்குச்சாவடிகளில் தொடர்புடைய பாகங்களின் வாக்காளர் பட்டியல் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். செப்.10, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
18 வயது முடிந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்காதவர்கள் 1.1.2017 அன்று 18 வயது நிறைவடையும் அதாவது 31.12.1998 வரை பிறந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு படிவம் 6-ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். விண்ணப்பத்துடன் மார்பளவு கலர் புகைப்படம், வயது மற்றும் இருப்பிட ஆதாரம் கொடுக்க வேண்டும்.
பெயர் நீக்க படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8, சட்டப் பேரவைத் தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய படிவம் 8ஏ பூர்த்தி செய்து அந்தந்த வாக்குச்சாவடி மையங் களில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலரிடம் 1.9.2016 முதல் 30.9.2016 வரை கொடுக்கலாம்.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் செப்.11, 25 ஆகியத் தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியல்களை ht‌t‌p:​‌e‌l‌e​c‌t‌i‌o‌n‌s.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம். இதே இணைய தளத்தில் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்றார் நிர்மல்ராஜ்.