Wednesday 23 April 2014

நாகை தொகுதியைக் கைப்பற்ற அதிமுக, திமுக கடும் போட்டி









   நாகப்பட்டினம் தொகுதியில் ஒன்பது வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆனாலும் திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான் நேரடிப் போட்டி. திமுக சார்பில் ஏற்கனவே மூன்று முறை நின்று வென்று மக்களவை உறுப்பினராக இருக்கும் ஏ.கே.எஸ்.விஜயன் களத்தில் உள்ளார். அவரை எதிர்த்து ஏற்கனவே அதிமுக சார்பில் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் கோபால் போட்டியிடுகிறார்.
 
ஆனால், கோபால் போட்டியிடுகிறார் என்று சொல்லப்படுகிறதே தவிர உன்மையான போட்டியாளர் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தான். அந்த அளவுக்கு கோபாலை முன்னிறுத்திவிட்டு பணம், படை என்று எல்லாவற்றையும் முன்னெடுத்துச் சென்றிருக்கிறார் அமைச்சர். தொகுதிக்கு பொறுப்பாளரான தங்கமுத்துவிடம் கூட முழுவதுமாக வேலைகளை ஒப்படைத்து விடாமல் எல்லாவற்றையும் தன்னிடமே வைத்துக்கொண்டு முழுக்க முழுக்க பொறுப்பை தன் தலைமேல் போட்டுக் கொண்டு வேலை பார்த்தார்.
 
 
 
பிரபலமான பிரச்சாரகர்களை அழைத்துவந்து தொகுதியை வட்டமிடச் செய்தார். அதன் விளைவாக ஆரம்பத்தில் திமுகதான்யா ஜெயிக்கும் என்று சொன்ன அதிமுகவினரே தற்போது நாம ஜெயிச்சுடலாம் போலயிருக்குய்யா என்று உற்சாகத்தில் உள்ளனர். இறுதி நேரத்தில் தெம்புதரும் வைட்டமின் வழங்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுவதால் நிச்சய வெற்றியை நம்பிக் கொண்டிருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
 
ஆனால், திமுக தரப்பில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை ஆரம்பம் முதலே இருந்ததால் பணம் விஷயத்தில் கொஞ்சம் இறுகப் பிடித்து விட்டார்கள். கட்ட கடைசியில் கையில் பணம் விளையாடாமல் உடன் பிறப்புக்கள் தவித்துப் போய் விட்டார்கள். ஆனால் ஸ்டாலின், கருணாநிதி ஆகியோரின் பிரச்சாரமும் தொகுதிக்குள் தனக்கு இருக்கும் அறிமுகமும் நல்லபெயரும், நிலவும் கடுமையான மின்வெட்டும் தன்னை காப்பாற்றி கரை சேர்த்துவிடும் என்று விஜயன் நம்பிக் கொண்டிருக்கிறார்.
 
இவர்களைத் தவிர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.பழனிச்சாமிக்கு கம்யூனிஸ்ட்கள் ஏகோபித்து வேலை செய்தார்கள். பிருந்தா காரத், தா.பாண்டியன், டி.ராஜா, ரங்கராஜன் என்று கம்யூனிஸ்ட் கட்சி பெருந்தலைவர்கள் வந்து காம்ரேட்டுக்களை உற்சாகப் படுத்திவிட்டு போயிருக்கிறார்கள். அதனால் திமுக, அதிமுக இரு வேட்பாளர்களையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் குறிப்பிடத்தக்க அளவில் அதிக வாக்குகளை வாங்குவார் பழனிச்சாமி. காங்கிரஸ் கட்சியின் செந்தில் பாண்டியனும், பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணனும் மற்ற அறுவரில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

No comments:

Post a Comment