Thursday 3 April 2014

Nagore - ஏப்ரல் 1 கந்தூரி விழா தொடக்கம்: நந்நகர் நாகூரில் நல்லிணக்க நல்லாலயம்


 
நாகூர் ஓர் இஸ்லாமியத் தலம். ஆனால் சாதி, சமய, மொழி, இன வேறுபாடின்றி இந்தியாவிலிருந்து மட்டுமல்லாது உலகம் முழுவதிலிமிருந்து நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் நாகூர் தர்ஹாவிற்கு வந்துசெல்லும் விந்தையை வியந்து முன்னாள் தமிழக அரசவை கவிஞர் நாமக்கல் இர்ரமலிங்கம் பிள்ளை, “ஆரார் வந்து அனுதினமும் நாகூர் ஆண்டவரைத் தொழுகிறார் அறியாயோ?” என்று பாடினார்.
 
இங்கு அடக்கமாகி 450 ஆண்டுகளுக்கு மேலாய் அற்புதங்கள் நிகழ்த்தும் மஹான் சாஹுல்ஹமீது ஒலியுல்லாஹ் உத்தரப் பிரதேசத்திலுள்ள மாணிக்கபூரில் பிறந்தார். மத்திய பிரதேசத்திலுள்ள குவாலியரில் 10 ஆண்டுகள் முஹம்மது கௌஸ் என்ற ஆன்மிகக் குருவிடம் கல்வி கற்றார்; ஆழ்நிலை பயிற்சி பெற்றார்; ஊழ்வினையையும் உப்பக்கம் காணும் உயர்நிலையை அடைந்தார்.
 
404 சீடர்களுடன் இந்தியா முழுவதும் சுற்றி அரிய சாதனைகளை நிகழ்த்தினார். ஆன்மிகப் பயணத்தில் தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்கனின் ( 1560 - 1614 ) தீராத நோய் தீர்ந்து நலம்பெற உதவினார். மன்னர் மகப்பேறு பெற இறைவனிடம் இறைஞ்சினார், இறைவனும் அருள் புரிந்தான், ஆண்வாரிசைப் பெற்றார் அரசர்.
 
துளசி மஹாராஜாவின் மகன் பிரதாப் சிங் மகாராஜா நாகூர் தர்ஹாவின் முன்னுள்ள 131 அடி உயர பெரிய மினாரை 1752ல் தொடங்கி 1755-ல் கட்டி முடித்தார். இந்த மினாரா கட்டிட வேலைகளை அரசின் அதிகாரியாக இருந்து மேற்பார்வை பார்த்தவர் சேக் அப்துல் மலிக்.
 
தர்ஹாவின் உட்புறமுள்ள 77 அடி உயரமுள்ள முதல் மினாரை செஞ்சி இப்ராஹிம் கானும் 931/2 அடி உயர இரண்டாவது மற்றும் மூன்றாவது மினாராக்களை நாகப்பட்டினம் நல்ல செய்யிது மரைக்காயரும் 80 அடி உயர நான்காவது மினாரைப் பரங்கிப்பேட்டை தாவூது கானும் கட்டினர்.
எல்லா சமயத்தினரும் வேண்டுதல் நிறைவேற அல்லது வேண்டுதல் நிறைவேறிய பின் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குகின்றனர். அன்னதானம் வழங்கல் ஆண்டுமுழுவதும் நடைபெறுகிறது,
 
நாகப்பட்டினம் புயலுக்குப் புகலிடம். ஒவ்வோர் ஆண்டும் மழை, வெள்ளம், புயல் இவ்வூர் மக்களுக்கு வழக்கமானது. ஆயினும் அந்த ஆபத்துக் காலங்களில் தாழ்வான பகுதிகளில் இருப்போர் பாகுபாடின்றி தஞ்சம் புகுவது தர்ஹாவில். இத் தர்ஹா பேரிடர் மையமாகவும் இயற்கை சீற்றங்களுக்கு மாற்றிடமான பாதுகாப்பு அரணாகவும் பயன்படுகிறது.
 
26-12-2004 சுனாமியில் பாதிக்கப்பட்ட ஆதி திராவிட, மீனவ மற்றும் ஏழை மக்கள் மாற்றிடம் ஏற்பாடு செய்யும்வரை தர்ஹாவில் தங்கினர், சுனாமியில் பாதிக்கப்பட்ட 9 தலித் இன தம்பதிகளின் திருமணம் 16-03-2005ல் நாகூர் தர்ஹாவில் வைத்து நடந்தது, இத்திருமண செலவைக் கிறித்துவ டி.எம்.ஐ. நிறுவனம் ஏற்றது. இந்நிகழ்ச்சிக்கு அன்றைய மாவட்ட ஆட்சியர் ஜெ. இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார், டி.எம்.ஐ. சமூக சேவை அமைப்பாளர் சகோதரி அருள்திரு விஜி வரவேற்றார். அன்றைய தர்ஹா நிர்வாக அறங்காவலர் முஹம்மது கலிபா சாஹிப் மணமக்களை வாழ்த்தினார். இராமன், லெட்சுமணன் என்ற தலித் இரட்டையர் திருமணம் 05-04-2010-ல் தர்ஹாவில் நடந்தது. எல்லா சமயத்தினரும் இப்புண்ணிய தர்ஹாவில் நந்நலம் நாடி திருமணம், காது குத்தல், நிச்சயதார்த்தம் முதலிய நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
 
இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டின் 6-வது மாதமான ஜமாதுல் ஆஹிர் பிறை 1-ல் தொடங்கும் கந்தூரி விழா பிறை 14-ல் முடிவடையும். கந்தூரி, சந்தனக்கூடு ஊர்வலங்கள் நாகப்பட்டினத்திலிருந்து புறப்பட்டு நாகூர் தர்ஹாவிற்கு வரும். அப்பொழுது இரவு, பகல் என்றில்லாது எப்பொழுதும் எல்லாரும் கூட்டம் கூட்டமாய் வருவதை மேலப்பாளையம் ஹசனலி புலவர் பூவடி சிந்தில், “பற்பல ஜாதி பலர் தேடிப் பவனியாக அவனி புகழ் நாகப்பட்டினம் நோக்கி, சாதி பேதமிலாதி யாவரும் பாதி ராவதிலே கூட” என்று பாடுகிறார்.
நந்நகர் நாகூரில் நல்லிணக்க நல்லாலயமாக திகழ்கிறது சாஹூல்ஹமீது ஆண்டகை அடக்கமாகியுள்ள உள்ளொளி தரும் உயரிய தர்ஹா.
 
கட்டுரை :  ஹிந்து தமிழ் நாளிதழ் 3/4/2014




No comments:

Post a Comment