Tuesday 15 April 2014

அடிக்கடி பழுதாகும் தமிழக அனல்மின் நிலையங்கள்: அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டு கொள்ளை அம்பலம்


அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டு சதியால், மின்வாரியத்தின், பணம் காய்ச்சி மரங்களாக கருதப்படும் தெர்மல்கள் அடிக்கடி பழுதடைவதும், மின் உற்பத்தி பாதிப்பதும் தொடர் கதையாகிறது. இது, தமிழக முதல்வரின் நேரடி கவனத்துக்கு சென்றுள்ளதால், ஊழலில் ஈடுபட்ட மின்கழக அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

தமிழகத்தில், தெர்மல் (அனல் மின் நிலையங்கள்) மூலம், 2,970; நீர்மின் நிலையங்களில், 2,237; காற்றாலைகளில், 7,240 மெகாவாட் என, 10,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.
இதில், சீசன் சமயத்தில் மட்டுமே, காற்றாலை, புனல்மின் நிலையங்கள் கைகொடுக்கும். ஆனால், ஆண்டு முழுவதும் மின்தேவையை சமாளிப்பது தெர்மல்கள் மட்டுமே. இதனால், தெர்மல்களில் தடையில்லா மின் உற்பத்தி செய்வதற்காக, அரசு, அதிக அக்கறை மற்றும் கவனம் செலுத்துகிறது.


பணம் காய்ச்சி மரம்:



தெர்மல்களில் மின் உற்பத்தி பாதித்தால், தமிழகத்தின் மின் பற்றாக்குறை அதிகரித்து விடும் என்பதால், தெர்மல்களில் பழுது ஏற்பட்டால், உடனடியாக சரி செய்யவும், போர்க்கால அடிப்படையில் உற்பத்தியை துவங்கவும், எவ்வளவு பணம் தேவையோ, அதை உடனடியாக ஒதுக்கீடு செய்கிறது அரசு.இதனால், மின்கழக அதிகாரிகளின், பணம் காய்ச்சி மரங்களாக, தெர்மல்கள் உள்ளன. இதை பயன்படுத்தி, குறுகிய காலத்தில், பலகோடி ரூபாய் சம்பாதிக்கும் ஆசையில், ஒவ்வொரு ஆட்சியின் போதும், மின்வாரியத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள, ஆளுங்கட்சி அரசியல்வாதி, தெர்மல்களில் உள்ள தலைமை பணியிட அதிகாரிகளை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.தெர்மல்களில், எந்த ஒரு நடவடிக்கையும், அதன் உயர் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு தெரியாமல் நடக்காது.


கூட்டு சதி திட்டம்



அரசியல்வாதி, அதிகாரிகள் கூட்டணி அமைத்து, தெர்மல்களில் யூனிட் பழுதடையும் போது, பணத்துக்காக, தரம் குறைவான தளவாடங்களை கொள்முதல் செய்து, கூடுதல் விலைக்கு வாங்கியதாக கணக்கு காட்டி, அதை பயன்படுத்துவது, தகுதியில்லாத கான்ட்ராக்டர்களுடன் ஒப்பந்தம் செய்து, பணி செய்ய வைப்பது என, கூட்டு சதியில் ஈடுபடுகின்றனர்.தங்களுக்கு வருவாய் ஈட்டி தருவதே, மின்கழக அதிகாரிகள் என்பதால், அதிகாரிகள் தவறு செய்தால், சம்பந்தப்பட்ட துறை நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பாக, 2012 மே, 9ம் தேதி இரவு, மேட்டூர் தெர்மல் கன்வேயர் பெல்ட் எரிந்ததால் ஏற்பட்ட விபத்தில் குறைந்தபட்சம், 225 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு ஒரு, 'மெமோ' கூட கொடுக்கபடவில்லை. மாறாக, 100 நாட்களுக்குள், பெல்டை சரி செய்ததாக கூறி, அதிகாரிகளுக்கு பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.இதனால், அரசியல்வாதிகள் ஆசியுடன், தெர்மல்களில் பணிபுரியும் அதிகாரிகள் மிகவும் துணிச்சலாக ஊழல் செய்கின்றனர்.கடந்த, எட்டு ஆண்டுக்கு முன், மின் உற்பத்தியை விட தேவை குறைவாக இருந்ததால், இந்த சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரவில்லை. தற்போது, மின்தேவை அதிகரித்துள்ளதால், தெர்மல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


முதல்வர் கோபம்



அ.தி.மு.க., அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்த, தெர்மல் யூனிட்களில் பழுது ஏற்படுத்தி, செயற்கை மின்பற்றாக்குறை ஏற்படுத்த வாய்ப்பில்லை. மாறாக தெர்மல் யூனிட் அடிக்கடி பழுதடைந்தால், சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள், சட்டவிரோதமாக சம்பாதிக்க முடியும். இந்த ஊழலே, அவ்வப்போது தெர்மல் பழுதுக்கு காரணமாகிறது. மின்துறை நிர்வாக திறமையின்மை, அதை சாதகமாக்கி, அரசியல்வாதிகள், அதிகாரிகள் செய்யும் கூட்டு சதியே, இதற்கு காரணமாகும்.இது முதன்முறையாக, தமிழக முதல்வரின் நேரடி கவனத்துக்கு சென்றுள்ளது. சதி செயல் குறித்து, விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க இருப்பதாக, நெல்லை பிரசாரத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார்.இதனால், ஊழலில் ஈடுபட்ட மின்துறை அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.


உளவுத்துறை தீவிரம்:



அ.தி.மு.க.,வில், சமீபத்தில் இணைந்த, மாஜி உளவுத்துறை அதிகாரி, அலெக்சாண்டர் மேற்பார்வையில் ஒரு குழு, தெர்மல் விவகாரம் குறித்தும், மின் தடை குறித்தும் விரிவான விசாரணை நடத்தி உள்ளது. அலெக்சாண்டர், முதல்வருக்கு கொண்டு சென்ற தகவலை தொடர்ந்து தான், முதல்வர் அதிரடி தாக்குதலை துவக்கி உள்ளார். அதன் தொடர்ச்சியாக தெர்மல்கள் அடிக்கடி பழுதடைவது ஏன் என்பது குறித்து, தமிழக உளவுத்துறை போலீசார் ஒவ்வொரு தெர்மல்களிலும், தொழிற்சங்க நிர்வாகிகள், அதிகாரிகள் என, பலதரப்பினரிடமும் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த விசாரணை அறிக்கை அரசுக்கு அனுப்பி வைத்த பின், அனல்மின் நிலைய நிர்வாகத்தில் பல்வேறு மாற்றம் இருக்கும் என, தெர்மல் தொழிற்சங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment