Tuesday 21 June 2016

மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் கூடிய ஜாதிச் சான்றிதழ்:மத்திய அரசு அறிவுறுத்தல்

பள்ளி மாணவர்களுக்கு அவர்களது ஆதார் எண்ணுடன் கூடிய ஜாதி மற்றும் இருப்பிடச் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும், இந்தச் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இச்சலுகைகளை பெற மாணவர்களின் ஜாதி மற்றும் இருப்பிடச் சான்றுகள் அவசியமாகின்றன. ஆனால், இச்சான்றிதழ்கள் மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் கிடைக்கப்பெறாததால், அரசின் சலுகைகளைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இதையடுத்து மத்தியப் பணியாளர் நலத் துறை இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஜாதி மற்றும் இருப்பிடச் சான்றிதழ்களை கோரி விண்ணப்பிக்கும் 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 30 முதல் 60 நாள்களுக்குள் இச்சான்றிதழ்கள் அளிக்கப்படுவதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும். அத்துடன் மாணவர்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு அவர்களது ஆதார் எண்ணுடன்கூடிய ஜாதி மற்றும் இருப்பிடச் சான்றிதழ்களை அளிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment