Sunday 5 June 2016

மாவட்டத்தில் 2,196 ஏழை மகளிர் குடும்பத் தலைவராக உள்ளனர்'

 


திருவாரூர் மாவட்டத்தில் 2,196 குடும்பங்கள் ஏழை மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட குடும்பங்களாக கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் கூறினார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சனிக்கிழமை தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான ஏழை மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத் திட்டத்தின் மூலம் சணல் பொருள்கள் தயாரிக்கும் பயற்சியை தொடங்கிவைத்து அவர் பேசியது:
தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான ஏழை மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத் திட்டத்தின் நோக்கம் வேலைவாய்ப்புடன் கூடிய திறன்பயிற்சி மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கான பயிற்சி ஆகியவற்றின் மூலம் மகளிரை குடும்ப தலைவராகக் கொண்ட குடும்பத்தின் வருமனாத்தைப் பெருக்குவதாகும்.
ஒரு குடும்பத்தில் விவாகரத்து, பிரிந்திருத்தல், இடம் பெயர்தல், திருமணம் ஆகாமல் அல்லது விதவையாக இருத்தல் ஆகிய காரணங்களினால் வயது வந்த ஆண்கள் இல்லாமல் இருத்தல் அல்லது வயது வந்த ஆண்கள் இருந்தும் குடும்ப வருமானத்துக்கு பங்களிப்பு இல்லாமல் இருத்தல் ஆகிய குடும்பங்களே மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட குடும்பம் ஆகும்.
திருவாரூர் மாவட்டத்தில் ஏழைப் பெண்களை குடும்பத் தலைவராகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத் திட்டம் செயல்படுத்தப்படும் 6 வட்டாரங்களில் 2,196 குடும்பங்கள் ஏழை மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட குடும்பங்களாக கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றில் இதுவரை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார  இயக்க அலகின் மூலம் 406 பயனாளிகளுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, அவற்றில் 154 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
மேலும், தற்போது இத்திட்டத்தில் 30 பேருக்கு பயிற்சி  தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்களது வாழ்வாதாரம் உயர்ந்து வறுமை நீங்கும் அளவுக்கு நீங்கள் இப்பயிற்சியை முனைப்போடு கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் மதிவாணன்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மனுநீதி நாளில் கோரிக்கை மனு  அளித்த நெம்மேலி ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மகேஷ்வரிக்கு பெட்டிக்கடை வைக்க ரூ. 30,000 கடனுதவி வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட  இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், முன்னோடி வங்கி மேலாளர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment