Monday 27 June 2016

"விளையாட்டுப் போட்டி: தமிழகம் 5-ஆம் இடத்துக்கு முன்னேற்றம்'

தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் 12-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்றார் ஓய்வுபெற்ற மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கலைச்செல்வன்.
 திருவாரூர் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் சார்பில் ஓய்வுபெற்ற மாநில முதன்மை உடற் கல்வி ஆய்வாளர் கலைச்செல்வனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் கலைச்செல்வன் பேசியது:
 அனைத்துப் பள்ளிகளும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டும். வெற்றி தோல்விகள் முக்கியமல்ல. போட்டிகளில் பங்கேற்க வேண்டும் இல்லையெனில் வரும் காலங்களில் விளையாட்டுத் துறையில் பின்தங்கிவிடும் நிலை ஏற்படும். இந்நிலை
விளையாட்டுத் துறையில் இருக்கக் கூடாது. இதில் உடற்கல்வி ஆசிரியரின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும்.
 எஸ்ஜிஎப்ஜ போட்டிகளில் கிராமத்து வீரர்கள்கூட தேசிய அளவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள் பாடத் திட்டப்படி பாடக் குறிப்பேடு எழுதி பாடத்தை நடத்த வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு நம்மைப் பற்றி தெரியும். மற்றவர்கள் மதிப்பது நம் கையில்தான் உள்ளது.
 நம்முடைய நடவடிக்கைகள், செயல்பாடுகளை வைத்துத்தான் மற்றவர்கள் நம்மை மதிப்பீடு செய்வார்கள். முழுமையாக கடமையை செய்யுங்கள். 5 ஆண்டுக்கு முன்னாள் உடற் கல்வியை ஓரம் கட்டும் நிலை வந்தது. தமிழக அரசு ரூ.10 கோடி ஒதுக்கி புத்துயிர்   ஊட்டியது.  தேசியப் போட்டிகளை நாமே நடத்துகிறோம். யாராலும் முடியாது என்பதே இல்லை.
 தேசியப் பேட்டிகளில் 12-வது இடத்தில் இருந்த நாம் 5-ஆவது இடத்துக்கு வந்துள்ளோம். தேசிய அளவில் தடகளப் போட்டியில் பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் இப்போது தான் நாம் 2-ஆம் இடத்தில் இருக்கிறோம் என்றார் கலைச்செல்வன்.  மாவட்டத் தலைவர் பாலன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்டச் செயலர் சந்திரமோகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கஸ்தூரிபாய் (பொ), மாவட்ட கல்வி அலுவலர் சரோஜா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மற்றும் தஞ்சை , நாகை, அரியலூர், நாமக்கல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள், திருவாரூர்  மாவட் டத்திலுள்ள உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.  நிகழ்ச்சியில், திருவாரூர் அருகே திருநெய்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி கால்பந்து வீராங்கனை பவித்ரா 14 வயதுக்குள்பட்டோர்  பிரிவில் இந்திய அணியில் விளையாடியதற்காக பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment