Tuesday 14 June 2016

இ-சேவை மையங்களில் மின்கட்டணம் செலுத்த வசதி



திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் இ-சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்த புதிய வசதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் இ-சேவை மையங்கள் மூலம் வருவாய்த்துறை சான்றிதழ்கள் (வருமானம், சாதி, இருப்பிடம், முதல் பட்டதாரி, கணவரால்   கைவிடப்பட்டவர், பட்டா மாறுதல், சமூகநலத் துறையின் கீழ் திருமண நிதியுதவி திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் ஆகிய திட்டங்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, பொதுமக்கள் மின் கட்டணத்தையும் பொது சேவை மையங்கள் மூலம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் 7 பொது சேவை மையங்களிலும், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலம் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் பொது சேவை மையத்திலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலம் செயல்படும் 117 மையங்களிலும், புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 156 மையங்களிலும் பொதுமக்கள் மின் கட்டணத்தை செலுத்தலாம்.
மேலும், ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அனைத்து பொது சேவை மையங்களும் அனைத்து நாள்களிலும் (ஞாயிற்றுக்கிழமை உள்பட) செயல்படும்.
அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வருவாய்த்துறை சான்றிதழ்கள், சமூக நலத்துறையின் கீழ் திருமண நிதியுதவி திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் ஆகிய திட்டங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம். மேலும், மின் கட்டணம் செலுத்தலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment