Saturday 4 June 2016

மீண்டும் பேரவைத் தலைவரானார் தனபால்: 2-ஆவது முறையாக தேர்வான முதல் தலைவர்

 


தமிழக சட்டப் பேரவையின் தலைவராக பி.தனபால் மீண்டும் ஒருமனதாக வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
 அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, 1952-ஆம் ஆண்டு முதல் அமைக்கப்பட்ட சட்டப் பேரவைகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்ட முதல் தலைவர் என்ற பெருமையை தனபால் பெற்றுள்ளார். மேலும், 1955-ஆம் ஆண்டுக்குப் பிறகு பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் தலித் தலைவர் என்ற பெருமையையும் தனபால் பெற்றுள்ளார்.
 1946-ஆம் ஆண்டில் இருந்து 1955-ஆம் ஆண்டு வரையில் பேரவையின் தலைவராக ஜெ.சிவசண்முகம் பிள்ளை இருந்தார். அவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவருக்குப் பிறகு, 14-வது சட்டப் பேரவையின் தலைவராக, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பி.தனபால் செயல்பட்டு வந்தார்.
 இந்த நிலையில், 15-ஆவது சட்டப் பேரவையின் தலைவராகவும் அவரே ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 இதுகுறித்து, சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை பெருமிதம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:-
 தமிழக சட்டப் பேரவையின் தலைவராக ஒருமனதாக மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தனபால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பேரவைக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட முதல் தலைவர் என்ற பெருமை வந்தடைந்திருப்பது மற்றுமொரு மகிழ்ச்சி என்றார். முன்னதாக, பேரவைத் தலைவராக பி.தனபால் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்த அறிவிப்பை, தாற்காலிகத் தலைவர் எஸ்.செம்மலை வெளியிட்டார்.
 அவை முன்னவர்-எதிர்க்கட்சி தலைவர்: தாற்காலிக தலைவரின் அறிவிப்பைத் தொடர்ந்து, தனபாலை அவை முன்னவரான ஓ.பன்னீர்செல்வமும், எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினும் பேரவைத் தலைவர் இருக்கையில் அமர வைத்தனர். இதையடுத்து, தனபால் பதவியேற்றுகொண்டதும், பேரவை துணைத் தலைவராக பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.
 பாராட்டு-புகழுரை: மீண்டும் பேரவைத் தலைவரான தனபாலுக்கும், துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கர் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
 இதைத் தொடர்ந்து, இருவரையும் முதல்வர் ஜெயலலிதா பாராட்டிப் பேசினார். பாராட்டுரைகளை ஏற்றுக் கொண்டு, பேரவை துணைத் தலைவர் ஜெயராமன், தலைவர் தனபால் ஆகியோர் உரையாற்றினர்.
 "பேரவையின் சிறப்புகளை நிச்சயம் காப்பேன்'
 சட்டப் பேரவையின் சிறப்புகளை நிச்சயம் காப்பேன் என்று பேரவைத் தலைவராக இரண்டாம் முறையாகப் பதவியேற்ற பி.தனபால் கூறினார்.
 சட்டப் பேரவையில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பேரவைத் தலைவராக பொறுப்பேற்ற தனபாலை முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பாராட்டிப் பேசினர். இதனை ஏற்று, பி.தனபால் பேசியது:
 பேரவைத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்ததற்கு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. ஜனநாயக முறைப்படி இந்தப் பேரவை நடக்க வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்டவர் முதல்வர் ஜெயலலிதா. இதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.
 இந்தப் பேரவையில் உறுப்பினர்கள் ஆக்கப்பூர்வமான கருத்துகளைச் சொல்வதற்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படும். 
 பேரவை இயற்றி எனக்கு அளித்துள்ள விதிகளைப் பின்பற்றி, மரபுகளில் இருந்து விலகாமல், பேரவைக்கு உள்ள சிறப்புகளை நிச்சயம் காப்பேன் என்றார்.
 இதையடுத்து, பேரவையின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஏற்புரையாற்றி பேசியது:-பேரவையின் பெருமைக்கு சற்றும் களங்கம் ஏற்படாத வகையில், பேரவைத் தலைவரின் செயல்பாடுகளுக்கு துணை நின்று, பொறுப்புணர்வோடும், கடமையுணர்வோடும் பணியாற்றுவேன் என்றார்.
பேரவை 16-இல் மீண்டும் கூடுகிறது
 தமிழக சட்டப்பேரவை ஜூன் 16-ஆம் தேதி மீண்டும் கூடும் என்று பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.
 15-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் மே 25-ஆம் தேதி கூடியது. அதில், உறுப்பினர்கள் அனைவரும் எம்.எல்.ஏ.க்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலுக்காக சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை காலை கூடியது. பேரவைத் தலைவராக தனபாலும், துணைத் தலைவராக பொள்ளாச்சி ஜெயராமனும் தேர்வு செய்யப்பட்டனர்.
 அவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தும், அந்தப் பாராட்டுகளை இருவரும் ஏற்றுக் கொண்டும் உரையாற்றினர். இதன்பின், பேரவைத் தலைவர் பி.தனபால் பேசுகையில், சட்டப் பேரவையின் நிகழ்வுகள் முடிவுற்றதாகவும், மீண்டும் பேரவை ஜூன் 16-ஆம் தேதி காலை 11 மணிக்குக் கூடும் எனவும் அறிவித்தார். இதன்பின், பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment