Saturday 25 June 2016

திருவாரூர் மாவட்டத்தில் 1000 ஹெக்டேரில் தோட்டக்கலை பயிர் சாகுபடி: ஆட்சியர் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன என ஆட்சியர் எம்.மதிவாணம் தெரிவித்தார்.
 மன்னார்குடி பகுதியில் தோட்டக்கலை மூலம் உயர்தொழில்நுட்ப முறையில் தோட்டக்கலை பயிர்கள் பயிர் செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் எம்.மதிவாணன் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 மேலநாகை கிராமத்தில் விவசாயி ராஜேந்திரன் தோட்டத்தில் மூன்று ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசன முறையில் பயிர் செய்துள்ள பாகற்காய்,  புடலங்காய், கத்தரிக்காய் ஆகிய தோட்டக்கலை பயிர்களையும், கீழநாகை கிராமத்தில் விவசாயி முகமதுசுபையர் இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் கீழ் அடர் நடவு கொய்யா சாகுபடியையும், மாங்கனி சாகுபடியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 பின்னர் விவசாயிகளிடம் சாகுபடி, வணிக ரீதியான விற்பனைகள் குறித்த விவரங்களைக்  கேட்டறிந்த பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது:
  திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் 400 ஹெக்டேரில் பழ வகைகளும், 400 ஹெக்டேரில் காய்கறி, கீரை வகைகளும், 20 ஹெக்டேரில் மலர் வகைகளும், 20 ஹெக்டேரில் மிளகாய் வகைகளும், 160 ஹெக்டேரில் முள்ளில்லா மூங்கில். சவுக்கு என மர வகைகளும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
 தோட்டக்கலை மூலம் விவசாயிகள் பயன் அடைய மத்திய, மாநில அரசுகளில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல்  ஆகிய வட்டங்களில் இத்திட்டம் அதிக அளவில் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சாகுபடி செய்யப்படுபவையை சந்தைப்படுத்தி நல்லமுறையில் விற்பனை செய்யவும் துறைவாரியான ஆலோசனை வழங்கப்படுகிறது. சொட்டுநீர் பாசனம், நுண்ணீர் பாசனம் மூலம் தண்ணீரை சிக்கனப்படுத்தி சேமிக்க முடியும் என்றார்.
 ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் மயில்வாகனன், தோட்டக்கலை துணை இயக்குநர் சுரேஷ்குமார், மாவட்ட வளர்ச்சி மேலாளர்(நபார்டு) ரவிசங்கர், மன்னார்குடி வட்ட துணை தோட்டக்கலை அலுவலர் முகமதுசாதிக் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment