திருவாரூர் மாவட்டத்தில் ஜூலை
1-ஆம் தேதி 8 வருவாய்க் கிராமங்களில் "அம்மா' திட்ட முகாம்கள்
நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அனைத்துக் கிராமங்களிலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை
"அம்மா' திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளன. முகாம்களில் மக்கள் அளிக்கும் பட்டா
மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்), சிட்டா நகல்கள், குடும்ப
அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள்,
சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ்கள் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள்
மீதும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவிகள் பெற சமர்பிக்கப்படும்
மனுக்கள், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் புதிய
உறுப்பினர்கள் சேர்த்தல், துயர்துடைப்பு மற்றும் விபத்து நிவாரணம் கோரும்
மனுக்கள் மீதான அறிக்கை, ஒரே நாளில் தீர்வு காணக்கூடிய இதர மனுக்கள்
மீதும் அன்றைய தினமே பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
உடனடியாக முடிவு செய்ய இயலாத விண்ணப்பங்களுக்கு 30
நாள்களுக்குள் முடிவான பதில் சம்மந்தப்பட்ட மனுதாரருக்குத்
தெரிவிக்கப்படும். நிலுவை மனுக்கள் குறித்து உயர் அலுவலர்களால் ஆய்வு
செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஜூலை 1-இல் திருவாரூர் வட்டம் நடப்பூரில், குடவாசல்
வட்டம் வயலுரில், வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் , நீடாமங்கலம் வட்டம்
மாறங்குடி, மன்னார்குடி வட்டம் பருத்திக் கோட்டை, திருத்துறைப்பூண்டி
வட்டம் பனையூர், திருப்பத்தூர், நன்னிலம் வட்டம் நன்னிலம் ஆகிய 8
கிராமங்களில் "அம்மா' திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளன.
இந்த முகாம்களில் சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று பயன்பெறுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.