Sunday, 11 October 2015

சாலையில் ஏற்பட்ட மண் அரிப்பு சீரமைப்பு












சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இதில் திருத்துறைப்பூண்டி சிங்களாந்தி அருகே உள்ள சாலையின் கீழ் பகுதியில் வேதாரண்யம் செல்லும் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் பெய்த மழையால் இந்த பாலத்தின் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு 3 இடங்களில் பள்ளம் விழுந்தது. இதனால் கேரளா, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்செந்தூர், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, சென்னை செல்லும் வாகனங்கள் இரவு நேரங்களில் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு சாலை ஆய்வாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று 3 இடங்களில் ஏற்பட்ட மண்அரிப்பை மண் மூட்டைகளை அடுக்கி சீரமைத்தனர். மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண் மூட்டைகளை தயார் செய்து மழை நேரங்களில் ஏற்படும் பள்ளங்கள் சீரமைக்கப்படும் என உதவி கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்தார். 

முகவர்கள் மூலம் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை













அங்கீகாரம் செய்யப்பட்ட முகவர்கள் மூலம் மட்டுமே வெளிநாட்டு பணிக்கு செல்லுங்கள் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

சுரண்டலை தடுக்க, வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் அங்கீகாரம் செய்யப்பட்ட முகவர்கள் மூலம் செல்லுங்கள் என்று மத்திய வெளியுறவுத் துறை இணைமந்திரி வி.கே.சிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார். 

வேலூர் மாவட்டம் மூங்கிலேறி கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி முனிரத்தினம் என்பவர் வீட்டு வேலை பணிக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு முதலாளியால் அவர் துன்புறுத்தப்பட்டார். மேலும் கஸ்தூரியின் கையும் வெட்டப்பட்டது. இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு, சவுதி அரேபியாவை வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில் வெளிநாட்டிற்கு பணிக்கு செல்லும் மக்களை எச்சரிக்கும் விதமாக மத்திய இணைமந்திரி எச்சரிக்கையை விடுத்து உள்ளார். 

இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய வி.கே. சிங், “மீடியா வாயிலாக ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன், வெளிநாட்டில் பணியினை பெறுவதற்காக முகவர்கள் மக்கள் தவறாக வழிநடத்தப்படக் கூடாது. இதுபோன்றவர்கள் (மோசடி முகவர்கள்) மூலம் வெளிநாட்டிற்கு செல்பவர்களுக்கு அந்நாட்டின் விதிமுறைகள் மற்றும் மோசமான வேலையில் செய்ய வேண்டியது என்ன என்பது தெரிந்திருக்க முடியாது,” என்று கூறினார். வேலைக்கு செல்லும் நாட்டின் விதிமுறைகள் தெரியாமல் சென்றால் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளார். 

“அரசு அங்கீகாரம் செய்த முகவர்கள் மூலம்தான் வெளிநாடு செல்கிறோம் என்பதை மக்கள் உறுதிசெய்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் போகாதீர்கள். மக்களுக்கு விழிப்புணர்வு தேவையானது. அதிகமான மக்கள் போலியான முகவர்கள் மூலம் செல்கின்றனர், போலி முகவர்களுக்கு வெளிநாடுகளின் சட்ட திட்டங்கள் தெரியாது. எனவே அவர்கள் உங்களுக்கு நீங்கள் செல்லும் நாட்டைப் பற்றி முழுமையான தகவலை அளிக்கமாட்டார்கள். மொழியும் தெரிய வாய்ப்பு கிடையாது. அங்குதான் எல்லா சிக்கலும் ஆரம்பமாகிறது.” என்று கூறிஉள்ளார். 

கை வெட்டப்பட்டு காயத்துடன் கஸ்தூரி முனிரத்தினம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் வெளியுறவுத்துறை தொடர்பில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


0
வாசிக்கப்பட்டது
1
பிரதி
Share

Saturday, 10 October 2015

ஹஜ் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது

சவூதி அரேபியாவின் மெக்கா அருகே மினாவில் அண்மையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்திய ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்தியர்களை அடையாளம் காண்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் சவுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு மேலும் 20 இந்தியர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது. இதனையடுத்து, பலியான இந்தியர்கள்  எண்ணிக்கை தற்போது 101 ஆக அதிகரித்துள்ளது.

Friday, 9 October 2015

தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில் புதன்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அண்மையில் மாட்டு இறைச்சி சாப்பிட்டதாக முதியவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவாரூர் ரயில் நிலையம் முன் தவ்ஹீத் ஜாமஅத் சார்பில் மாவட்டத் தலைவர் பீர்முகமது தலைமையில் 400-க்கும் மேற்பட்டவர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜிநாமா செய்ய வேண்டும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Thursday, 8 October 2015

அண்ணா பல்கலைக்கழகம் முற்றுகை போராட்டம்


ஆடை கட்டுப்பாட்டு விதிகளை நீக்கவேண்டும், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு அரசாணையில் அறிவித்ததுபோன்று கட்டண விலக்கு அளிக்கவேண்டும், தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் அசைவ உணவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணை தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட செயலாளர் நிருபன் முன்னிலை வகித்தார். 10 மாணவிகள் உள்பட மொத்தம் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதையடுத்து மாணவர் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் அண்ணா பல்கலைக்கழக பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாணவர்கள் தரப்பு கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக பிரதிநிதிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். 

Wednesday, 7 October 2015

பொதுமக்களின் வசதிக்காக அக்டோபர் 11-ல் மீண்டும் வாக்காளர் சிறப்பு முகாம்


 இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணி மேற்கொள்வது தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
 முதல் முகாமில் 5.53 லட்சம் மனுக்களும், 2-ஆவது முகாமில் 8.4 லட்சம் மனுக்களும் அளிக்கப்பட்டன. இவற்றில், பெயர் நீக்கலுக்காக மட்டும் சுமார் 60 ஆயிரம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்களைத் தவிர்த்து, அலுவலக வேலை நாள்களில், 51 ஆயிரத்து 897 பேர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.
 இந்த நிலையில், திருத்தம் பணி மேற்கொள்வதற்காக மீண்டும் ஒரு வாய்ப்பாக ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
மனுக்கள் குறித்து வாக்காளர்களுக்கு குறுந்தகவல்: இந்தப் பணிகள் குறித்து, வரும் 9-இல் காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளேன். வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், நீக்கவும் அளிக்கப்பட்ட மனுக்கள் குறித்து என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பாக, மனுதாரர்களுக்கு செல்லிடப்பேசி மூலமாகத் தகவல் தெரிவிக்கப்படும்.
 இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் கவனத்துக்கு...: ஜனவரி 5-இல் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. எனவே, பெயர் சேர்ப்பு, நீக்கல் உள்ளிட்ட பணிகளுக்காக அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நவம்பர் 24-க்குள் இறுதி செய்யப்படும்.
 இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
 எனவே, வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை சரிபார்த்துக் கொள்வது அவசியம் என்றார் சந்தீப் சக்சேனா.

திருவாரூர் மாவட்டத்தில் 2-வதுநாளாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி



Tuesday, 6 October 2015

தமிழக அரசின் வாட்ஸ் அப் செய்திகள்

   
பொதுமக்களிடம் விரைவாக சென்றடையும் வகையில் வாட்ஸ்–அப்பில் தமிழக அரசு செய்திகள் வெளியிடப்படுகிறது.
கூடுதல் சேவைதமிழக அரசின் செய்தி வெளியீட்டு பிரிவு சார்பில் வெளியிடப்படும் செய்திகள், சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் காலங்களில், முதல்–அமைச்சர் 110 விதியின் கீழ் வெளியிடும் அறிக்கைகள் மற்றும் கடிதங்கள் ஆகியவற்றை, வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்பத்திற்கேற்றவாறு, விளம்பர பணியின் முக்கியத்துவத்தை கருதி, கூடுதல் சேவையாக வாட்ஸ்–அப் மூலமாக அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போதைய காலக்கட்டத்தில் செல்போனை பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள், குறிப்பாக ஊடகவியலாளர்கள், சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், முக்கிய வணிக தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட இளம் தலைமுறையினர் என பல்வேறு தரப்பினரும் செல்போனில் ‘ஆன்ட்ராய்டு’ வசதி மூலம் வாட்ஸ்–அப் வாயிலாக எவ்வித காலதாமதமும் இன்றி, எவ்வித கட்டணமும் இன்றி, முழுக்க முழுக்க இலவசமாக உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர்.
வாட்ஸ்–அப் மூலம் செய்திஇதனடிப்படையில், முதல்–அமைச்சரின் அன்றாட அறிவிப்புகள், மக்கள் நல திட்டங்கள், அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்த செய்திகளை வாட்ஸ்–அப் வாயிலாக அனுப்பப்பட்டு வருகிறது.
இதன் மூலம் அரசின் செய்திகளை மேற்குறிப்பிட்ட ஏராளமான அமைப்புகள் வாட்ஸ்–அப் வாயிலாக உடனுக்குடன் செய்திகளை அறிந்து அவைகளை அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள மற்றவர்களுக்கு பரிமாறிக்கொள்ளும்போது, செய்திகள் எண்ணற்ற பொதுமக்களை விரைவாகவும், மிக எளிதாகவும் சென்றடைகிறது. அதன் வாயிலாக பொதுமக்கள் அரசின் செய்திகளை அறிந்து பயன்பெற நல்லதொரு வாய்ப்பு ஏற்படுகிறது.
செய்தி துறை நடவடிக்கைமேலும், வாட்ஸ்–அப் மூலம் அரசின் செய்திகளை ஒருவர் பெறும்போது, தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களைவிட மிக விரைவாக அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்கள் வசம் உள்ள செல்போன் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
இதன் வாயிலாக செய்திகளை ஊடக நிறுவனங்களும் மற்றும் அதன் தொடர்புடைய ஊடகப் பிரதிநிதிகளும் அவரவர் பணி நிமித்தமாக எந்த இடத்தில் இருந்தாலும், அங்கேயே அப்போதே செய்திகளை வாட்ஸ்–அப் மூலமாக மிக விரைவில் அறிந்துகொள்ள இயலும்.
மேலும் படிப்படியாக இந்த வசதி பெற்ற செல்போன் உள்ளவர்களுக்கு வாட்ஸ்–அப் மூலம் செய்தி அனுப்ப செய்தி துறை நடவடிக்கை எடுத்து வருவது சிறப்பு அம்சமாகும்.

Monday, 5 October 2015

மலேசியாவில் கடும் புகைமண்டலம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன










EPA

மலேசியாவில் பரவியுள்ள கடும் புகைமண்டலம் காரணமாக அனேகமாக எல்லா பள்ளிக்கூடங்களையும் 2 நாட்களுக்கு மூடிவிடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மலேசியாவில், மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு பரவியுள்ள கடும் புகைமண்டலம் காரணமாக அனேகமாக எல்லா பள்ளிக்கூடங்களையும் இரண்டு நாட்களுக்கு மூடிவிடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்தப் புகைமூட்டத்தால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய பாதிப்புகள் காரணமாக சிங்கப்பூரில் உள்ள பள்ளிக்கூடங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன.
இந்தோனேசியாவில் தணலாக எரிந்துகொண்டிருக்கும் காய்ந்த சருகுகளால் பரவும் தீ தான் இந்த பெரும்புகை மண்டலம் உருவாகக் காரணம்.
ஒவ்வொரு ஆண்டும் அண்டை நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தக்கூடிய விடயமாகவும் இது மாறியுள்ளது.
இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள இந்த புகைமாசு தான் முன்னெப்போதையும் விட மிக மோசமானதாக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அனேமான இடங்களில் 50 மீட்டருக்கும் குறைவான தூரமே கண்ணுக்குத் தெரியக்கூடிய நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sunday, 4 October 2015

அனைத்து அவசர உதவிக்கும் 112: டிராய் திட்டத்துக்கு தொலைத்தொடர்புத் துறை ஒப்புதல்

அமெரிக்காவில் இருப்பது போல (911), இந்தியாவிலும் அனைத்து அவசர உதவிக்கும் ஒரே எண்ணை (112) அழைக்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) இந்த திட்டத்துக்கு தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) ஒப்புதல் வழங்கி உள்ளது.

நாடு முழுவதும் இப்போது பல்வேறு அவசர உதவிகளுக்காக 100 (போலீஸ்), 101 (தீ), 102 (ஆம்புலன்ஸ்) மற்றும் 108 (பேரிடர்) ஆகிய எண்கள் பயன்பாட்டில் உள்ளன. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 108 ஆம்புலன்ஸ் அவசர உதவிக்கும் பயன்படுகிறது.

ஆனால் அமெரிக்காவில் அனைத்து அவசர உதவிக்கும் 911 என்ற எண் பயன்பாட்டில் உள்ளது. இதுபோல பொதுமக்கள் எளிதாக நினைவில் வைத்துக்கொள்வதற்கு வசதியாக இந்தியாவிலும் ஒரே எண்ணை அறிமுகம் செய்ய டிராய் திட்டமிட்டுள்ளது. இதற் காக 112 என்ற எண் தேர்வு செய்யப் பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு டிஓடி அனுமதி வழங்கி உள்ளது.

இதையடுத்து இந்த புதிய எண் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

அதேநேரம், பழைய எண்களும் இரண்டாவது வாய்ப்பாக சிறிது காலம் பயன்பாட்டில் இருக்கும். அதாவது இப்போது பயன்பாட்டில் உள்ள எந்த எண்ணை அழைத்தாலும் 112-க்கு திருப்பிவிடப்படும். பின்னர் படிப்படியாக இந்த எண்கள் வழக்கத்திலிருந்து நீக்கப்படும் என டிஓடி தெரிவித்துள்ளது.
மேலும் அழைப்பவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிவதற்காக அனைத்து செல்போன்களிலும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை புகுத்தலாம் என்று டிராய் ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தது. ஆனால், பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் குறைந்த விலை செல்போன்கள், ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளாது என்பதால் இந்த பரிந்துரையை டிஓடி நிராகரித்துவிட்டது.

விமான நிலையத்தில் கண்ணாடி மீண்டும் உடைந்தது


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், பன்னாட்டு முனையப் பகுதியில் தடுப்புக் கண்ணாடி வெள்ளிக்கிழமை மீண்டும் உடைந்து விழுந்தது.
இங்கு நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு, பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன. இதுவரை 13 முறை மேற்கூரைகளும், 17 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 14 முறை தடுப்புக் கண்ணாடிகளும், 5 முறை சுவரில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும், ஒரு முறை விளக்கு கண்ணாடியும் என இதுவரை 50-க்கும் மேற்பட்ட முறை உடைந்து விழுந்துள்ளன. இந்தச் சம்பவங்களில் 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், பன்னாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் 1-வது நுழைவு வாயில் அருகே மேலாளர் அறையும், லிப்ட்டும் உள்ளன. இதன் அருகே உள்ள 6 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட தடுப்புக் கண்ணாடி வெள்ளிக்கிழமை திடீரென உடைந்து விழுந்தது. அந்த வழியே யாரும் வராததால், பாதிப்பு ஏதுமில்லை.
தகவலறிந்து அங்கு விரைந்த ஊழியர்கள் நொறுங்கிக் கிடந்த கண்ணாடி சிதறல்களை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து விசாரணை நடக்கிறது.

Saturday, 3 October 2015

வாக்காளர் பட்டியல் திருத்தம்: தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு - திருத்தங்களை மேற்கொள்ள, தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 
 2016 ஜனவரி 1ஆம் தேதியுடன் 18 வயது நிறைவடைபவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், நீக்கவும், இடமாற்றம் குறித்த விவரங்களைத் தெரிவிக்கவும் மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 ÷ஏற்கெனவே கடந்த 20-ஆம் தேதி சிறப்பு முகாம் நடந்தது. அதில், 5 லட்சத்து 53,405 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. அதில், 4 லட்சத்து 43,992 பேர் பெயர் சேர்ப்புக்காகவும், 15,536 பேர் நீக்கத்துக்கும், 63,873 பேர் திருத்தங்கள் செய்யவும், 30,004 பேர் தொகுதிக்குள் முகவரி மாற்றத்துக்கும் விண்ணப்பங்களை அளித்தனர்.
 நாளை சிறப்பு முகாம்: தமிழகம் முழுவதும் வரும் 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இந்த முகாம் நடக்கிறது. முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளைச் செய்யலாம் எனவும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
 வாக்காளர்கள் கோரிக்கை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவிப்புப் பலகைகளை முகாம் நடைபெறும் இடங்களில் வைக்க வேண்டும் என வாக்காளர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த விவரங்களை வாக்குச் சாவடிகளில் உள்ள அலுவலர்கள் சரிவர தெரிவிப்பதில்லை எனவும், பெயர் இருக்கிறதா என்ற தகவலைக் கூட பார்த்துச் சொல்வதற்கு அவர்களால் முடியவில்லை என்றும் வாக்காளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
 எனவே, சிறப்பு முகாம் நடக்கும் வாக்குச் சாவடிகளில் உரிய தகவல் பலகைகளை இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

12.5% உணவுப் பொருள்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் கலப்பு: மத்திய அரசின் பரிசோதனையில் கண்டுபிடிப்பு


நாடு முழுவதும் இருந்து சேகரிக்கப்பட்ட உணவுப் பொருள்களின் மாதிரிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், 12.5 சதவீத உணவுப் பொருள்களில் அனுமதிக்கப்படாத பூச்சிக் கொல்லி மருந்துகள் கலந்திருப்பது மத்திய அரசால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: உணவுப் பொருள்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் கலந்துள்ளனவா என்பதை கண்டறியும் வகையில், மத்திய அரசால் "மானிடரிங் ஆஃப் பெஸ்டிசைட் ரிசிடியூஸ்' என்ற திட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
 இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த 2014-15ஆம் ஆண்டு காலத்தில் நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை நிலையங்கள், இயற்கை அங்காடிகள், விவசாய உற்பத்தி சந்தைக் குழுவின் சந்தைகளில் இருந்து உணவுப் பொருள்களின் 20,618 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதில், காய்கறிகள், பழங்கள், நறுமணப் பொருள்கள், மிளகாய்ப் பொடி, கறிவேப்பிலை, அரிசி, கோதுமை, பருப்புகள், மீன், இறைச்சி, முட்டை, தேயிலை, பால், தண்ணீர் ஆகியவை அடங்கும்.
 அவை அனைத்தும், ஆராய்ச்சிக் கூடங்களில் தீவிர பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில், 12.5 சதவீத உணவுப் பொருள்களில், அனுமதிக்கப்படாத பூச்சிக் கொல்லி மருந்துகளான கார்போசல்பான், ஆசிபேட், பிஃபென்திரின், ஆசிடமிபிரிட், டிரியாஜோபோஸ், மெடாலாசைல், மலாதியன், புரோபினோபோஸ், ஹெக்சாகோனாஜோல் உள்ளிட்டவை கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வேளாண் அங்காடி, சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 1,180 காய்கறி மாதிரிகள், 225 பழ மாதிரிகள், 732 நறுமணப் பொருள்களின் மாதிரிகள், 30 அரிசி மாதிரிகள், 43 பருப்பு மாதிரிகளில் அவை கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.
 காய்கறி மாதிரிகளில் ஆசிபேட், பிஃபென்திரின், டிரியாஜோபோஸ், ஆசிடமிபிரிட், மெடாலக்சைல், மலாதியான் ஆகிய அனுமதிக்கப்படாத பூச்சிக் கொல்லி மருந்துகளும், பழங்களின் மாதிரிகளில் ஆசிபேட், ஆசிடமிபிரிட், கார்போ சல்பான், சைபர்மிதிரின், புரோபினோபோஸ், குயினால்போஸ், மெடாலாசைல் ஆகியவையும் கலந்துள்ளன.
 அரிசி மாதிரிகளில், புரோபினோபோஸ், மெடாலாசைல், ஹெக்சாகோனாஜோலும், பருப்பு மாதிரிகளில் டிரியாஜோபோஸ், மெடாலாசைல், கார்பரைல், ஆசிபேட் ஆகியவை கலந்துள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Friday, 2 October 2015

நமதூர் மௌத் அறிவிப்பு 2/10/2015

நமதூர் மலாயாத் தெரு மர்ஹூம் செ மு யூசூப் தாஜுதீன்
அவர்களின் மனைவியும் சலாஹுதீன்  அவர்களின் தாயார்  அவர்கள் மௌத்.

அன்னாரின் ஜனாஸா 2/10/2015 மாலை 5  மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் .


டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு 'ஆன் - லைன்' பதிவு கட்டாயம்





'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வை எழுத விரும்புவோர், தங்களுடைய விவரங்களை புதிய, 'ஆன் - லைன்' சுயவிவர பக்கத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வு நடத்துகிறது.
புதிய நடைமுறைதேர்வு முறைகளில் உள்ள குறைகளை தீர்க்க, டி.என்.பி.எஸ்.சி.,யில் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன.அதன்படி, தேர்வுக் கட்டண சலுகை, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தேர்வருக்கான தகவல்கள் அனுப்புதல் போன்ற வற்றை எளிமைப்படுத்த, சுயவிவர பதிவுக்கான, நிரந்தர, 'ஆன் - லைன்' பதிவு முறை, நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:
டி.என்.பி.எஸ்.சி.,யின் போட்டித் தேர்வு எழுதுவோருக்கு, 'ஆன் - லைனில்' நிரந்தரப்பதிவு முறை - ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் இதுவரை கட்டாயமில்லை. ஆனால், இன்று முதல் இந்தப் பதிவு கட்டாயம் ஆக்கப்படுகிறது. அதற்கான சுயவிவர பக்கம், 'ஆன் - லைனில்' வெளியிடப்பட்டுள்ளது.தேர்வர் எப்போது வேண்டுமானாலும், நிரந்தர பதிவில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். தேர்வு அறிவிக்கப்படும்போது, சுயவிவர பக்கத்தில், தங்கள் சான்றிதழ் விவரங்களை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.சுயவிவர பக்கத்தின் மூலம், இனி தேர்வர்களுக்கு, 'யூசர்' எனப்படும், பயன்படுத்துனர் ஐ.டி., வழங்கப்பட்டு, 'பாஸ்வேர்ட்' எனப்படும் ரகசிய திறப்பு எண்ணும் தரப்படும்.
சட்ட நடவடிக்கை
தேர்வர் தங்களுடைய விவரங்களை இதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும். தேர்வுக் கட்டணம் செலுத்திய பின், அது டி.என்.பி.எஸ்.சி.,யிடம் சேர்ந்து விட்டதா, எத்தனை முறை கட்டண சலுகை பயன்படுத்தப்பட்டு உள்ளது, பதிவேற்றம் செய்து உள்ள சான்றிதழ்கள் எவை போன்ற விவரங்களை, தேர்வரும், டி.என்.பி.எஸ்.சி.,யும் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும். தேர்வர்கள் தவறான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்தால், சம்பந்தப்பட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, தேர்வு எழுத தடை விதிக்கப்படும். விரைந்து வெளியிட...நிரந்தரப் பதிவு செய்தாலும், தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். விண்ணப்பத்தில் உள்ள தகவல்களே, தேர்வு பரிசீலனைக்கு எடுக்கப்படும். நிரந்தர பதிவிலுள்ள சான்றிதழ் மற்றும் விவரங்கள் மூலம், இரண்டும் சரிபார்க்கப்படும். இந்த திட்டத்தால், வருங்காலத்தில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வர்களை நேரில் வரவழைக்க தேவையில்லை. தேர்வு முடிவையும் விரைந்து வெளியிட முடியும். தேர்வர்கள் தங்களின் சந்தேகங்களை, 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், www.tnpscexams.net/ என்ற இணைய தள முகவரியிலும் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, 1 October 2015

ஹிந்தி படித்தால் கூடுதல் தகுதி !


தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்தி மொழித்திறன் பெற்ற இளம் தலைமுறையினர் வட மாநிலங்களிலும், மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் எளிதில் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபா இதற்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின்போது மக்களை ஒன்றிணைக்க ஹிந்தி மொழி ஒரு கருவியாகப் பயன்படும் என்ற நோக்கத்துடன் "தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபா'வை 1918-இல் சென்னையில் தொடங்கி வைத்தார்.
அத்துடன் தனது மகன் தேவதாஸ் காந்தியை ஹிந்தி பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார். 1936 முதல் தமிழகத்தில் ஹிந்தி பிரசாரத்தை திருச்சியில் உள்ள தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபா ஏற்றுக் கொண்டது.
நிர்வாக வசதிக்காகவும், பிரசாரப் பணிக்காகவும் தென்மாநிலங்களில் இதன் கிளைகள் தொடங்கப்பட்டன.
தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபாவின் முக்கியத்துவத்தை உணர்த்த மத்திய அரசு 1964-ஆம் ஆண்டு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக இதை அங்கீகரித்து அறிவித்தது.
மும்மொழித் திட்டமாக கல்வி நிலையங்களில் தாய்மொழி, ஆங்கிலம், ஹிந்தி ஆகியன இருந்து வந்த நிலையில், 1962-இல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் தீவிரமடையத் தொடங்கியது. இதன் காரணமாக 1967-இல் இருமொழித் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதனால் நாட்டின் தேசிய மொழியான ஹிந்தியை தமிழக மாணவர்கள் அனைவரும் கற்கும் வாய்ப்பு பறிபோனது. இந்நிலையில் மத்திய அரசு நிதியுதவியுடன், ஓராசிரியர் வித்யாலயம், பகுதி நேர வித்யாலயம், பள்ளி நேரத்திற்குப் பிறகு ஹிந்தி வகுப்பு திட்டங்கள் மூலம் இன்றைக்கு தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபா தனது பணியை ஆற்றி வருகிறது.
தமிழகக் கிளைகள்: வேலூர், புதுச்சேரி, காரைக்கால், கடலூர், நெய்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, கரூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் சபாவின் கிளை அலுவலகங்கள் உள்ளன. 
தற்போது ஹிந்தி ஆரம்ப நிலைத் தேர்வான பிராத்மிக் தேர்வை மட்டும் 3.25 லட்சம் மாணவ, மாணவியர் தமிழகத்தில் ஆண்டுதோறும் எழுதுகின்றனர்.
பிராத்மிக், மத்யமா, ராஷ்டிரபாஷா, பிரவேஷிகா, விஷாரத் பூர்வார்த்த, விஷாரத் உத்தரார்த்த, பிரவீண் பூர்வார்த்த, பிரவீண் உத்தரார்த்த ஆகிய 8 தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அத்துடன் ஹிந்தி தட்டச்சுப் பயிற்சி வகுப்புகளும் அனைத்துக் கிளைகளிலும் நடத்தப்படுகின்றன.
பிராத்மிக் வகுப்பில் சேர 5-ஆவது படித்திருக்க வேண்டும். 6 தேர்வுகளை முடித்த பிறகு விஷாரத் பட்டமும், பிரவீண் தேர்வில் தேர்ச்சியை அடுத்து முதுநிலைப் பட்டமும் வழங்கப்படுகின்றன.
வேலைவாய்ப்புகள்: தமிழகத்தில் உயர்கல்வித் தகுதியுடன் ஹிந்தித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.  அத்துடன் ஹிந்தி தட்டச்சு தேர்ச்சி கூடுதல் தகுதியாகவும் கருதப்படுகிறது.
இந்திய ரயில்வே, அஞ்சல் துறை, மத்திய அரசு சார்ந்த பொது நிறுவனங்கள், தில்லியை தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிறுவனங்கள், முப்படைகள், எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றில் ஹிந்தி தேர்ச்சித் தகுதிக்காக கூடுதல் மதிப்பெண் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.
- ஆர்.ராமலிங்கம்.

Wednesday, 30 September 2015

சென்னை விமான நிலையம்:' 54 ' நாட்அவுட்!

சென்னை விமான நிலையத்தில் 54 வது முறையாக இன்றும் கண்ணாடி  கதவு ஒன்று விழுந்து நொறுங்கியது.
சென்னை  விமானநிலையம் தினமும் லட்சக்கணக்கான பயணிகளை கையாண்டு வருகிறது.  தென்னிந்தியாவின் வாயிலாக கருதப்படும்  இந்த விமான நிலையத்தை நவீனமயமாக்கிய பிறகு தொடர்ந்து கண்ணாடிகள் கீழே விழுந்து உடைவது வாடிக்கையாகி வருகிறது.
அவ்வப்போது இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் ஒரு வித பயத்துடன்தான் நடமாடி வருகின்றனர். 

சென்னை விமான நிலையத்திற்குள் ஹெல்மெட் போட்டுக் கொண்டு பயணிகள் செல்வது போல கூட கேலிசித்திரங்கள் அவ்வப்போது வெளியாவதும் வழக்கமாகி விட்டது.  எனினும் இந்த விஷயத்தில் விமான நிலைய அதிகாரிகள் மெத்தன போக்கால்  கண்ணாடிகள் விழுந்து உடைவது தொடர்கதையாகத்தான் உள்ளது. 

அந்த வகையில் 54 வது முறையாக சென்னை  விமான நிலையத்தில் இன்றும் கண்ணாடி  கதவு ஒன்று விழுந்து நொறுங்கியது. நல்ல வேளையாக யாரும் காயம் அடையவில்லை. கண்ணாடி விழுவதில் விரைவில் சென்னை விமான நிலையம் சதமடித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

வட்டி விகிதத்தைக் குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனக் கடன் சுமை குறையும்


வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை அரை சதவீதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
 இதனால் வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.
 இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அப்போது வட்டி விகிதத்தைக் குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
 பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று அரசு, தொழிலகங்கள் மற்றும் வங்கிகள் வலியுறுத்தி வந்த நிலையில், ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்தது குறிப்பிடத் தக்கது.
 ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வட்டி விகிதக் குறைப்பு அறிவிப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
 அப்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
 ரிசர்வ் வங்கியிடமிருந்து பிற வர்த்தக வங்கிகள் பெறும் தொகைக்கான வட்டி விகிதம் (ரெபோ ரேட்) தற்போதைய 7.25 சதவீதத்திலிருந்து 6.75 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
 பிற வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் தொகைக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெபோ) 5.75 சதவீதமாக இருக்கும். வங்கிகளின் ரொக்கக் கையிருப்பு தற்போதைய 4 சதவீத அளவிலேயே தொடரும்.
 முன்னதாக, 3 நிதிக் கொள்கை அறிவிப்புகளின்போது, தலா கால் சதவீதம் என மொத்தமாக முக்கால் சதவீத அளவு வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இப்போது அறிவிக்கப்பட்டதையும் சேர்த்து 1.25 சதவீத வட்டிக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த அறிவிப்பின் பலன் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் விதமாகப் பிற வங்கிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 இப்போதைய வட்டிக் குறைப்பு அறிவிப்புக்கு முன்னதாக 0.75 சதவீத அளவுக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டபோதிலும், வாடிக்கையாளர்களுக்கு சராசரியாக 0.30 சதவீதம் மட்டுமே வட்டி குறைக்கப்பட்டது.
 ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை செயல்படுத்துவதில் வர்த்தக வங்கிகளுக்கு உள்ள தடைகள் அகற்றப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
 மேலும், நிதிப் பற்றாக்குறை அளவைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்க அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
 கொள்கைகளில் சீர்திருத்தம், உற்பத்தித் திறனை அதிகரிக்கும்படியான தொழிலகங்களின் செயல்பாடுகள் ஆகியவைதான் நீடித்த வளர்ச்சிக்கான அடிப்படை உந்து சக்திகள்.
 இந்த நிலையில், அரை சதவீத வட்டிக் குறைப்பை அறிவித்து ரிசர்வ் வங்கி முக்கிய முடிவு எடுத்துள்ளது.
 சர்வதேச நிலவரங்களைப் பற்றிக் கவலைப்படாமல், நமது நீடித்த வளர்ச்சியை முன்வைத்து நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
 நமது பொருளாதாரம் நீண்ட நாளாக சில பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. அதனை மாயமாக மறைய வைக்க முடியாது.
 நடைமுறைக்கு சாத்தியமான வழிமுறைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி அடையச் செய்ய அரசு, ரிசர்வ் வங்கி, பிற கட்டுப்பாட்டு அமைப்புகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன.
 மேலும், வெளிநாட்டு முதலீடுகளின் வரம்புகள் அமெரிக்க டாலர்களின் அடிப்படையில் இல்லாமல், ரூபாயின் அடிப்படையில் இருக்கலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. ஜனவரி மாதத்துக்குள் பணவீக்கம் 6 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அது 5.8 சதவீதமாகக் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நிகழ் நிதி ஆண்டில் 7.4 சதவீதமாக இருக்கும். முன்னதாக, அது 7.6 சதவீதமாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டிருந்தது என்றார் ரகுராம் ராஜன்.
 நான் கிறிஸ்துமஸ் தாத்தா அல்ல!
 வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று தொழிலக அமைப்புகளும் அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அரை சதவீத வட்டிக் குறைப்பு அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
 "திடீர் பரிசு வழங்கும் நீங்கள் கிறிஸ்துமஸ் தாத்தாவா?' என்று செய்தியாளர்கள் வேடிக்கையாக ரகுராம் ராஜனிடம் கேட்டனர்.
 நான் கிறிஸ்துமஸ் தாத்தா அல்ல; என் பெயர் ரகுராம் ராஜன். நான் செய்ய வேண்டியதைச் செய்துள்ளேன்.
 தற்போதைய பொருளாதார நிலையையொட்டி வட்டிக் குறைப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி போனஸ் அல்ல என்றார் அவர்.
 கடனுக்கான வட்டியைக் குறைத்து வங்கிகள் அறிவிப்பு
 ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு அறிவிப்பையடுத்து, ஆந்திர வங்கி அளித்து வரும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக அந்த வங்கி அறிவித்தது.
 பாரத ஸ்டேட் வங்கியின் குறைந்தபட்ச வட்டி விகிதத்தை 0.4 சதவீத அளவுக்குக் குறைப்பதாக அந்த வங்கி தெரிவித்தது.
 இதையடுத்து, அந்த வங்கியின் குறைந்தபட்ச வட்டி விகிதம் 9.3 சதவீதமாக இருக்கும். மேலும், வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படும் எனவும் அந்த வங்கி தெரிவித்தது.
 தொழிலக அமைப்புகள் வரவேற்பு
 வட்டி விகிதத்தைக் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது, வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று பல்வேறு தொழிலக அமைப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளன.
 இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தலைமை இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி கூறுகையில், நமது பொருளாதார நிலையில் அடிப்படையாக உள்ள அடிப்படையான குறையை ரிசர்வ் வங்கி உணர்ந்து, வட்டி விகிதத்தைக் குறைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
 முதலீடுகளும் தொழில் வளர்ச்சியும் மீண்டும் புத்துணர்வு பெறும் விதமாக தொழிலகங்கள் செயல்படும் என்றார்.
 கடந்த ஜனவரியிலிருந்து மொத்தம் 1.25 சதவீத அளவு வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் என்று இந்திய வர்த்தக சபைகளின் சங்கத்தின் (அசோசேம்) தலைமை இயக்குநர் டி.எஸ்.ராவத் கூறினார்.
 ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு ஆட்டோ மொபைல் துறைக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய தீபாவளிப் பரிசு என்று ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.
 ஏற்றுமதிகள் குறைந்து வரும் நிலையில், அனைத்துப் பிரிவு ஏற்றுமதியாளர்களுக்கும் சிறப்புச் சலுகையாக, குறைந்தபட்சம் இரண்டு சதவீத வட்டி விதிப்பை ஒத்திவைக்க வேண்டும். நிலைமை சீராகும்போது, அதனைச் சேர்த்து அளிக்கும்படி அறிவிக்கலாம் என்று ஏற்றுமதியாளர்கள் அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tuesday, 29 September 2015

மகளிர் சுயஉதவி குழுக்களின் செயல்பாட்டுக்காக 20 ஆயிரம் பெண்களுக்கு ‘அம்மா கைபேசி’: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு









தமிழக சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
மகளிர் சுயஉதவி குழுக்கள்மகளிருக்கு சமூக பொருளாதார அதிகாரம் வழங்கிடவும், அதன்மூலம் வறுமை ஒழிக்கும் நோக்கத்துடனும் சுயஉதவி குழுக்களை எனது தலைமையிலான அரசு 1991–ம் ஆண்டு உருவாக்கியது.
மேலும் ஏழை, எளிய, நலிவுற்ற மக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்காக 2005–ம் ஆண்டு எனது தலைமையிலான அரசு உலக வங்கி நிதி உதவியுடன் கூடிய தமிழ்நாடு புதுவாழ்வு திட்டத்தையும் தொடங்கிவைத்தது. அதன் பயனாக, மகளிர் சுயஉதவி குழுக்கள் தமிழ்நாட்டில் மாபெரும் சக்தியாய் உருவெடுத்து, இன்று 6.08 லட்சம் மகளிர் சுயஉதவி குழுக்கள் 92 லட்சம் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன.
பயிற்றுநர்கள்தமிழ்நாட்டில் சுயஉதவி குழுக்களை ஒருங்கிணைக்க ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூட்டமைப்பின் கீழ் 20 முதல் 25 சுயஉதவி குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த சுயஉதவி குழுக்களை மேற்பார்வையிட சமுதாய சுயஉதவி குழு பயிற்றுநர்கள் உள்ளனர்.
சுயஉதவி குழுவில் ஊக்குநராக செயல்பட்ட அனுபவமிக்க உறுப்பினர்களே சமுதாய சுயஉதவி குழு பயிற்றுநர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் புதிய சுயஉதவி குழுக்களை அமைப்பதற்கும், பயிற்றுவிப்பதற்கும் துணைபுரிந்து வருகின்றனர்.
அம்மா செல்போன் திட்டம்மகளிர் சுயஉதவி குழுக்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்கள், சந்தா தொகை செலுத்துதல், சேமிப்பு, அவர்களுக்குள் கொடுத்துக்கொள்ளும் உட்கடன் விவரம், கடனை மீளச்செலுத்துதல் போன்ற நடைமுறைகளுக்கு பல்வேறு பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியுள்ளது.
விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்யவும், அவர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும் தமிழ் மொழியில் சிறப்பு மென்பொருள் ஒன்று உருவாக்கி கணினி மயமாக்கப்பட்ட செல்போன்கள் வழங்கப்படும். அம்மா செல்போன் திட்டம் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.
முதற்கட்டமாக, 20 ஆயிரம் சமுதாய சுயஉதவி குழு பயிற்றுநர்களுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அம்மா செல்போன்களை எனது தலைமையிலான அரசு வழங்கும் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

மலேசியாவில் திருவாரூர் தொழிலாளி சாவு உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனைவி கோரிக்கை



:
மலேசியா நாட்டில் திருவாரூரை சேர்ந்த தொழிலாளி இறந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும் என்று அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

மலேசியாவில் சாவு

திருவாரூர் அருகே உள்ள நீடாமங்கலம் தாலுகா வெள்ளக்குடி விழல்கோட்டகம் மேலத்தெருவை சேர்ந்தவர் தங்கமணி (வயது 36). இவரது மனைவி ராஜலெட்சுமி. கடந்த சில மாதங்கள் முன்பு தங்கமணி மலேசியா நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி தங்கமணி இறந்து விட்டதாக அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து திருவாரூரில் உள்ள அவரது குடும்பத்துக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து நேற்று தங்கமணி மனைவி ராஜலெட்சுமி, திருவாரூர் கலெக்டர் மதிவாணனை நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சொந்த ஊருக்கு...

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா வெள்ளக்குடி விழல்கோட்டகம் மேலத்தெருவில் வசித்து வருகிறேன். எனது கணவர் தங்கமணி . எங்களுக்கு புவனேஸ்வரி, சுபலெட்சுமி, வினோத்ஸ்ரீ ஆகிய 3 மகள்கள் உள்ளனர். எனது கணவர் தங்கமணி, மலேசியா நாட்டில் ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி அன்று தங்கமணி இறந்துவிட்டதாக, அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை அவரது உடல் சொந்த ஊருக்கு வந்து சேரவில்லை. எனக்கு பொருளாதார வசதி இல்லாததால் எனது கணவர் தங்கமணி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.