Wednesday, 22 February 2017

7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஒட்டி ஊதிய விகிதங்களை மாற்ற ஐவர் குழு அமைத்தது தமிழக அரசு

மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து, தமிழக அரசு அலுவலர்கள் ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க அலுவலர் குழு ஒன்றை உடனடியாக அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த அலுவலர் குழு தமது அறிக்கையை நான்கு மாத காலத்துக்குள் அரசுக்கு அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதை செயல்முறைபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எனது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (22.2.2017) நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. சண்முகம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க 'அலுவலர் குழு' ஒன்றை உடனடியாக அமைக்க உத்திரவிட்டுள்ளேன்.
இக்குழுவில் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை செயலாளர், உறுப்பினர் செயலாளர் உமாநாத் ஆகியோர் இடம்பெறுவர்.
இந்த 'அலுவலர் குழு' மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இக்குழு, இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்கும்.
அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம் / ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்குழு தனது அறிக்கையை நான்கு மாத காலத்திற்குள், அதாவது 30.06.2017-க்குள் அரசுக்கு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்" என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment