Saturday 25 February 2017

திருவாரூர் :தமிழக அரசின் உத்தரவின்பேரில் திருவாரூர் மாவட்டத்தில் 14 மதுக்கடைகள் மூடல்

தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை அடையப்படும் என்று கடந்த 2016– சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் தேர்தல் அறிக்கையின்படி முதல் கட்டமாக கடந்த ஆண்டு மே மாதம் 500 மதுக்கடைகளை மூடியது. மேலும் கடை திறந்திருக்கும் நேரமும் குறைக்கப்பட்டன.
இந்தநிலையில் கடந்த 20–ந் தேதி முதல்–அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றதை தொடர்ந்து தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், பேரளம், விளமல், காட்டூர், கீரங்குடி, தேவர்கண்டநல்லூர், களப்பால், பூந்தோட்டம், தேவன்குடி, மகாதேவப்பட்டினம், விக்கிரபாண்டியம் ஆகிய பகுதிகளில் உள்ள 14 மதுக்கடைகள் நேற்று மூடப்பட்டன. திருவாரூர் மாவட்டத்தில் 148 மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் முதல் கட்டமாக 7 கடைகளும், தற்போது 2–வது கட்டமாக 14 மதுக்கடைகளும் மூடப்பட்டன. இதனால் தற்போது மாவட்டத்தில் 127 மதுக்கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment