Sunday, 19 February 2017

அடையாள சான்றிதழை காண்பித்து இ-சேவை மையங்களில் இலவச வாக்காளர் அட்டை பெறலாம்

திருவாரூர் மாவட்டத்தில் அடையாள சான்றிதழை காண்பித்து இ-சேவை மையங்களில் இலவச வாக்காளர் அடையாள அட்டை பெறலாம் என கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இறுதி வாக்காளர் பட்டியல்

கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்ய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, செம்டம்பர் 1-ந்தேதி முதல் 30-ந் தேதி வரை பெறப்பட்டன. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 29 ஆயிரத்து 72 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

இந்த விண்ணப்பதாரர்கள் கடந்த ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். மேலும் இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டை பதிவு ஆகியவற்றின் காரணமாக 8 ஆயிரத்து 800 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது மாவட்டங்களில் இருந்து தரவுகள் தொகுக்கப்பட்டு, புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடுவதற்காக ஒப்பந்தக்காரர்களுக்கு அனுப்பப்பட்டது.

வாக்காளர் அடையாள அட்டை

இதை தொடர்ந்து கடந்த ஆண்டு அச்சிடப்பட்ட அட்டைகள் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டன. புதிய வாக்காளர்களுக்கு தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பத்தில் தங்களின் செல்போன் எண்ணை அளித்துள்ள புதிய வாக்காளர்களுக்கு ஒரு தனிப்பட்ட அடையாள எண், குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.

இந்த அடையாள எண்ணை தங்கள் பகுதியில் அல்லது அருகில் உள்ள இ-சேவை மையத்தில் காண்பித்து வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இலவசமாக பெற்று கொள்ளலாம். செல்போன் எண்ணை அளிக்காத புதிய வாக்காளர்கள் தேர்தல் துறையின் கட்டணமில்லா உதவி எண் 1950-யை தொடர்பு கொண்டு, தங்களின் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு அடையாள எண் அனுப்பப்படும். அவர்கள் இ-சேவை மையங்களில் தங்களுடைய ஏதேனும் ஒரு புகைப்பட அடையாள சான்றை காண்பித்து வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment