ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கோலாலம்பூரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு நிதியில் இருந்து நஜீப் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்குகளுக்கு 70 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 4,600 கோடி) மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ரசாக் மறுத்தபோதிலும் மலேசியாவில் அவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வந்தது.
இந்த நிலையில், ரசாக் பதவி விலக வலியுறுத்தி போராட்டக்காரர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், சிறுவர் சிறுமியர் எனப் பலரும் மஞ்சள் நிற ஆடை அணிந்து இன்று (சனிக்கிழமை) தலைநகர் கோலாலம்பூரில் திரண்டு பிரதமருக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த 'பெர்சிக்' அமைப்பின் முக்கிய உறுப்பினர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த 7,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் குறித்து 'பெர்சிக்' அமைப்பின் துணைத் தலைவர் ஷருல் அமன் ஷாரி பேசும்போது, "நாங்கள் எங்களது நாட்டை அவமதிக்க இங்கு கூடவில்லை. நாங்கள் எங்கள் நாட்டை மிகவும் நேசிக்கிறோம். எங்கள் நாட்டை வலுமையாக்கவே இங்கு திரண்டிருக்கிறோம்" என்றார்.
மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் பதவிவிலகக் கோரி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே அந்நாட்டில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment