Saturday, 5 November 2016

நுழைவு இசைவு விதிகளை கடுமையாக்கியது பிரிட்டன்: இந்திய ஐ.டி. பணியாளர்களுக்கு சிக்கல்

நுழைவு இசைவு (விசா) விதிகளை பிரிட்டன் அரசு கடுமையாக்கியுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் பணிபுரியும் இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளர்கள் அங்கு தொடர்ந்து தங்கிப் பணியாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நுழைவு இசைவு விதிகளை பிரிட்டன் கடுமையாக்கும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில மாதங்களாக நீடித்து வந்தது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இல்லாத பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான புதிய நுழைவு இசைவு விதிகளை அந்நாட்டு அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
நிறுவனத்துக்கு உள்ளேயே பணியாளர்களை இடமாற்றம் (ஐசிடி) செய்வதற்காக இரண்டாம் நிலைப் பிரிவில் நுழைவு இசைவு பெறுவதற்கு இதுவரை இருந்த அதிகபட்ச ஊதிய வரம்பை ரூ.17.36 லட்சத்தில் இருந்து (20,800 பவுண்ட்), ரூ.25.05 லட்சமாக (30,000 பவுண்ட்) உயர்த்தியுள்ளது.
இந்தப் புதிய விதி நவம்பர் 24-ஆம் தேதிக்குப் பிறகு நுழைவு இசைவு கோரி விண்ணப்பிப்பவர்களுக்குப் பொருந்தும். குடியேற்ற ஆலோசனைக் குழு அளித்த பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவில் இருந்து பிரிட்டன் சென்று பணியாற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் இந்திய ஐ.டி. நிறுவனங்கள் 90 சதவீதம் ஐசிடி முறையில்தான் பணியாளர்களை பிரிட்டனுக்கு அனுப்பி வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து வரும் தகவல்தொழில்நுட்பப் பணியாளர்களால் பிரிட்டனில் உள்ள பணியாளர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள பெரிய அளவில் வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.
திறமைவாய்ந்த பணியாளர்கள் இந்தியாவில் இருந்து அதிகஅளவில் இங்கு வருவது இதற்கு உதாரணமாக உள்ளது என்று குடியேற்ற ஆலோசனைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment