Sunday 20 November 2016

வங்கி லாக்கர்களை முடக்கும் திட்டம் இல்லை: மத்திய நிதி அமைச்சகம் உறுதி

வங்கி லாக்கர்களை முடக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசுக்குக் கிடையாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வருவதற்காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதன் அடுத்த கட்டமாக வங்கிகளின் லாக்கர்கள் சீல் வைக்கும் திட்டம் அரசிடம் இருப்பதாக வதந்தி வெளியானது. அத்துடன் லாக்கர்களில் உள்ள தங்க நகைகளைக் கைப்பற்றும் யோசனையும் இருப்பதாக செய்தி வெளியானது. இந்நிலையில் அத்தகைய யோசனை ஏதும் மத்திய அரசுக்கு இல்லை என நிதி அமைச்சகம் தனது ட்விட்டர் பதிவில் தெளிவுபடுத்தியுள்ளது.
புதிதாக அச்சிடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டில் சாயம் போவதாக வெளியான தகவலையும் நிதி அமைச்சகம் மறுத்துள்ளது. புதிய நோட்டில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளது. இன்டாக் லியோ எனப்படும் புடைப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
நல்ல நோட்டு என்பதைக் கண்டுபிடிக்க ஒரு துணியின் மீது ரூபாய் நோட்டைத் தேய்த்தால் சிறிதளவு மின்சாரம் பாய்வதைப் போன்ற உணர்வு ஏற்படும். இது தாளில் உள்ள நிறம் துணிக்கு மாறுவதால் ஏற்படுவதாகும் என்று நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் மோடி ஆலோசனை
இதனிடையே நிலைமையின் தீவிரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவை சகாக்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு களை சமாளிக்கும் விதம் மற்றும் பொதுமக்களை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்

No comments:

Post a Comment