நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது | மருத்துவமனை, பால் பூத், பெட்ரோல் நிலையங்களில் செல்லும் | வங்கிகளுக்கு இன்று விடுமுறை; ஏடிஎம் மையங்கள் 2 நாட்கள் செயல்படாது
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இந்த உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் அண்மையில் துல்லிய தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்தி 7 தீவிரவாத முகாம்களை அழித்தது. இதேபோல நாட்டில் கருப்பு பணத்தைக் கட்டுப்படுத்த நிதித் துறையிலும் விரைவில் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் பிரதமர் தலை மையில் நேற்று மத்திய அமைச்சர வைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கருப்பு பணத்தை கட்டுப் படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
பிரதமர் மோடி உரை
இதைத் தொடர்ந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பிரதமர் மோடி நேற்றிரவு தொலைக் காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் செல்லாது. இந்த உத்தரவு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
எனினும் அவசர தேவையை கருதி நவம்பர் 11-ம் தேதி வரை மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள், அரசு அங்கீகாரம் பெற்ற பால் நிலையங்கள், விமான நிலையங்கள், ரயில்வே, பஸ் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்கள், அரசு கூட்டுறவு அங்காடிகளில் மட்டும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும்.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை அஞ்சல் நிலையங்கள், வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
வங்கிகளுக்கு இன்று விடுமுறை
இந்த காலக்கெடுவுக்குள் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத வர்கள் வங்கிகளில் தகுந்த அடை யாள சான்றுகளை சமர்ப்பித்து வரும் மார்ச் 31-ம் தேதி வரை ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். நாடு முழுவதும் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும்.
நவம்பர் 9-ம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் பொதுவிடுமுறை அளிக்கப்படும். இதேபோல நவம்பர் 9, 10-ம் தேதிகளில் வங்கி ஏடிஎம் மையங்கள் செயல்படாது.
ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10, ரூ.5, ரூ.2, ரூ.1 மற்றும் அனைத்து நாணயங்களும் செல்லுபடியாகும். இந்த ரூபாய் நோட்டுகளை வழக்கம்போல பயன்படுத்தலாம். தற்போதைக்கு ஏடிஎம் மையங்களில் நாளொன்றுக்கு ரூ.2000 மட்டுமே பணம் எடுக்க முடியும். வங்கி கணக்கில் இருந்து நாளொன்றுக்கு ரூ.10,000, வாரத்துக்கு ரூ.20,000 மட்டுமே எடுக்க முடியும் என்று வரம்பு நிர்ணயிக்கப்படும். நெட் பேங்கிங், பணம், டிடி நடவடிக்கைகளில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை.
ஆதரவளிக்க வேண்டுகோள்
உலகளாவிய அளவில் பொருளாதாரத்தில் அதிவேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதேநேரம் ஊழல் நாடுகளின் பட்டியலிலும் இந்தியா முதல் வரிசையில் உள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 1.25 லட்சம் கோடி கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது. எனினும் இன்னமும் கோடிக்கணக்கில் கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளது. கருப்பு பணமும் ஊழலும் நாட்டின் வளர்ச்சிக்கு, ஏழைகளின் முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக உள்ளன.
மத்திய அரசு எப்போதுமே ஏழைகளின் நலன்களுக்கு முன்னு ரிமை அளிக்கிறது. அவர்களின் நலன் கருதி கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சிகள், ஊடகங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ரிசர்வ் வங்கி அறிக்கை
இதனிடையே ரிசர்வ் வங்கி நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
500, 1000 ரூபாய் நோட்டுகளில் அதிக அளவு போலிகள் புழக்கத்தில் உள்ளன. இந்தப் பணம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கவும் திசைதிருப்பப்படுகிறது. இதை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிக பாது காப்பு அம்சங்களுடன் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும். தற்போதைய சூழ் நிலையை சமாளிக்க ஆர்பிஐ தரப்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment