Sunday 20 November 2016

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம் அ.தி.மு.க. தொண்டர்கள் கொண்டாட்டம்

தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த செப்டம்பர் 22-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உடல்நிலையில் முன்னேற்றம்

அவருக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் சிவகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் மற்றும் சிங்கப்பூர் ‘பிசியோ தெரபி’ நிபுணர்கள் மேரி சியாங், சீமா, ஜூடி ஆகியோரும் சிகிச்சை அளித்தனர்.

தொடர் சிகிச்சை காரணமாக அவருடைய உடல்நிலையில் நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகளுக்கும், உடல் அசைவு பயிற்சிகளுக்கும் ஜெயலலிதா முழு ஒத்துழைப்பு அளித்து வந்தார்.

செயற்கை சுவாசம்...

நுரையீரல் தொற்று முழுமையாக அகற்றப்பட்டு அவருக்கு ‘பிசியோ தெரபி’ சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றதை கண்டு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ‘டிரக்கியாஸ்டமி’ சிகிச்சை மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் செயற்கை சுவாசத்தின் அளவு படிபடியாக குறைக்கப்பட்டது. அதே வேளையில் உடல் அசைவு பயிற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

அவர் வழக்கமான உணவுகளை எடுத்து வருவதாகவும், சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார் என்றும் டாக்டர்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் செயற்கை சுவாச உதவி இன்றி இயற்கையாக மூச்சு விடுவதற்கு சில பயிற்சிகளை ஜெயலலிதாவுக்கு டாக்டர்கள் அளித்து வந்தனர். அது நல்ல பலனை தந்தது. அதன் தொடர்ச்சியாக பல மணி நேரம் இயல்பாக ஜெயலலிதா மூச்சுவிட்டும், நாற்காலியில் அமர்ந்து இளைப்பாறியும் வந்தார். அவர் இயல்பாக மூச்சுவிடுகிறார் என்றும், சாதாரண உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார் என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

டாக்டர்கள் ஆலோசனை

உலகத்தரமிக்க சிகிச்சை காரணமாக ஜெயலலிதா தினமும் 20 மணி நேரத்துக்கும் மேலாக செயற்கை சுவாசம் எதுவும் இன்றி இயற்கையாகவே சுவாசித்து வந்தார். தூங்கும் நேரத்தில் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஜெயலலிதா இயல்பாகவே மூச்சுவிடுகிறார். அவருடைய நுரையீரல் விரிவடைவதற்காக 15 அல்லது 20 நிமிடங்கள் மட்டும் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. அவர் நன்றாக இருக்கிறார். வீடு திரும்புவதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதை கண்ட மருத்துவ குழுவினர் அவருக்கு முழுமையாக செயற்கை சுவாசத்தை அகற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். தொடர் சிகிச்சை காரணமாக உடல்நிலை தேறி வரும் ஜெயலலிதா எந்த நேரத்திலும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆஸ்பத்திரி வளாகம் முன்பு தொடர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டும் வந்தனர். இந்த நிலையில் அவர் நேற்று மாலை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி நுழைவுவாயில் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்

ஜெயலலிதா சாதாரண தனி வார்டுக்கு மாற்றப்படும் தகவலை அறிவதற்காக அ.தி.மு.க.வினர் ஆஸ்பத்திரி முன்பு ஆவலோடு காத்திருந்தனர். இந்த நிலையில் 59 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஜெயலலிதா மாலை 5.30 மணி அளவில் தான் சிகிச்சை பெறும் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சை வார்டில் இருந்து அதே மாடியில் கடைசியில் உள்ள சாதாரண தனி வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த தகவலை அறிந்ததும் ஆஸ்பத்திரி முன்பு காத்திருந்த அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சியில் திளைத்தனர். மகிழ்ச்சி பொங்க அம்மா வாழ்க... என்று ஆடிப்பாடினர். இன்றுடன் அம்மாவுக்கு இருந்த திருஷ்டி அகன்றுவிட்டது என்று கூறி பூசணிக்காயில் சூடம் கொளுத்தி தரையில் உடைத்தனர்.

பின்னர் ஆஸ்பத்திரிக்கு வந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். ஆஸ்பத்திரி நுழைவுவாயில் முன்பு உள்ள விநாயகர் கோவிலில் கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.

சி.ஆர்.சரஸ்வதி பேட்டி

ஜெயலலிதா வார்டு மாற்றப்பட்டது குறித்து அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி நிருபர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டிருப்பது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. இதனை வார்த்தைகளால் கூற முடியாது. தமிழக மக்கள் முதல்-அமைச்சரை ஒரு தாயாகவே பார்த்து வருகிறார்கள். அந்த தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட தொடர் பிரார்த்தனைகள் நடத்தினர். பல நாட்களுக்கு பிறகு இந்த சந்தோஷ தகவல் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. ஓய்வு என்பது எனக்கு தெரியாது என்று அம்மா கூறியது போல், அவர் மீண்டும் செயல்பட இருக்கிறார். சொன்னதை செய்பவர் அம்மா என்பது அனைவருக்கும் தெரியும். உண்மையிலேயே தெய்வத்தின் அருளால் அவர் மறுபிறவி எடுத்துவிட்டார்.

அவர் சிகிச்சையில் இருந்த 59 நாட்களும் நாங்கள் அவர் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரி முன்பே காத்து கிடந்து வேண்டி வருகிறோம். அவர் பூரண உடல் நலம் பெற்று இன்றைய தினம் சாதாரண வார்டுக்கு மாறி இருக்கும் இந்த தருணம் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி. அம்மா வீடு திரும்பும் நாளுக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment