சென்னையில் சில்லறை ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருவதால் காய்கறிகள் விற்பனை குறைந்து வருகிறது. இதனால் சில்லறை காய்கறி வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோயம்பேடு சந்தையில் தினமும் ரூ.5 கோடி அளவில் காய்கறிகள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள் வாங்கிச் சென்று, மளிகை கடைகள் மற்றும் சிறு சந்தைகள், சாலையோரக் கடைகளில் விற்பனை செய்கின்றனர். கடந்த 10 நாட்களாக சில்லறை ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், சில்லறை காய்கறி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தொழிலை நம்பியுள்ளோர் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
வியாசர்பாடியில் சாலையோரம் சில்லறை விலையில் காய்கறி வியாபாரம் செய்து வரும் ரோசி என்பவர் இதுபற்றி கூறும்போது, “தினமும் ரூ.20 ஆயிரம் வரை காய்கறி வியாபாரம் நடக்கும். கடந்த 10 நாட்களாக ரூ.5 ஆயிரத்துக்குகூட வியாபாரம் நடைபெறவில்லை. வருவாய் இழப்பு காரணமாக இந்த மாதத்துக்கான மாதச்சீட்டு தொகை, கடன் போன்றவற்றை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காய்கறி வாங்க வருவோரெல்லாம் பழைய 500 ரூபாய் நோட்டு அல்லது புதிய 2000 நோட்டுகளைத்தான் கொண்டு வந்து நீட்டுகின்றனர். எங்களால் சில்லறை கொடுக்க முடியவில்லை. இதனால் வியாபாரம் குறைந்துள்ளது” என்றார்.
ஜாம்பஜாரில் கடை வைத்திருக் கும் முகமது அலி என்பவர் கூறும்போது, “தினமும் ரூ.5 ஆயிரம் வரை வியாபாரம் நடைபெறும். தற்போது ரூ.2 ஆயிரத்துக்குகூட வியாபாரம் நடைபெறவில்லை. பொதுமக்கள் வரத்தும் குறைந்துவிட்டது. லாபத்தை குறைத்துக்கொண்டு காய்கறிகளை மலிவாக விற்றாலும் வாங்க ஆள் இல்லை” என்றார்.
மொத்தத்தில் சென்னையில் காய்கறி வியாபாரம் குறைந்து, அதை நம்பி அத்தொழிலில் ஈடுபட்டும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
No comments:
Post a Comment