Tuesday 22 November 2016

3 தொகுதிகளிலும் முத்தான வெற்றியைப் பெற்றது அதிமுக!

தமிழகத்தில் மூன்று தொகுதிகளிலும் முத்தான வெற்றியைப் பெற்றுள்ளது அதிமுக.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 19-ஆம் தேதியன்று நடந்தது. அவரக்குறிச்சியில் அதிகபட்சமாக 81.86 சதவீதமும், திருப்பரங்குன்றத்தில் 71.04 சதவீதமும், தஞ்சாவூரில் 69.41 சதவீத வாக்குகளும் பதிவாகின.
மூன்று தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. அவைகள் இன்று 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. அரவக்குறிச்சியில் மட்டும் ஒரு மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  
இதில், தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாராயணசாமி அமோக வெற்றி பெற்றார். முதல் முறையாக பேரவை உறுப்பினராக நாராயணசாமி தேர்வாகியுள்ளார்.
அரவக்குறிச்சியில் பதிவான வாக்குகள் கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியிலும் தஞ்சாவூர் தொகுதியில் பதிவானவை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கலைக் கல்லூரியிலும், திருப்பரங்குன்றம் தொகுதியில் பதிவான வாக்குகள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் வைத்து எண்ணப்பட்டு வந்தன.
மூன்று தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேசைகள் அமைக்கப்பட்டு அதில், அரவக்குறிச்சியில் 18 சுற்றுகளும், தஞ்சாவூரில் 20 சுற்றுகளும், திருப்பரங்குன்றத்தில் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஒவ்வொரு மேசையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.  இதனால், வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கும், வாக்கு எண்ணிக்கையை தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்தே உடனடியாக அறியவதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
வாக்கு எண்ணும் பணியில் 25 பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு மேசையிலும் ஒரு வாக்கு எண்ணும் பணியாளர் தவிர அரசு அல்லது பொதுத்துறை நிறுவனத்தைச் சேர்ந்த நுண் பார்வையாளரும் உடன் இருந்தனர்.
ஒவ்வொரு சுற்றிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் சம்பந்தப்பட்ட கட்சிகள் அல்லது சுயேச்சை வேட்பாளர்களின் முகவர்களுக்கு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, வேட்பாளர் பெற்ற வாக்குகள் சரிபார்க்கப்பட்டு அடுத்த சுற்று தொடங்குவதற்கு முன்பாக வெளியிடப்பட்டு வந்தன.
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், நுண் பார்வையாளர்கள், பிற வாக்கு எண்ணும் பணியாளர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். வாக்கு எண்ணும் செயல்முறைகள் அனைத்தும் விடியோ படம் பிடிக்கப்பட்டு வந்தன.
தஞ்சையில் அதிமுக வெற்றி: தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளர் ரெங்கசாமி வெற்றி பெற்றார். 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இறுதிச் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 97,855 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி 71,402 வாக்குகள் பெற்றார். 26,483 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ரெங்கசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
திருப்பரங்குன்றத்திலும் 8வது முறையாக அதிமுக வெற்றி: திருப்பரங்குன்றம் தொகுதியில் 8-வது முறையாக அதிமுக வெற்றி பெற்றுள்ளார். இறுதிச் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். ஏ.கே.போஸ் 1,12,988 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர்.சரவணன் 70,361 வாக்குகள் பெற்றுள்ளார். 42,627 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் பாஜக 6,453 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கும், தேமுதிக 3,901 வாக்குகள் பெற்று 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி அதிமுக வெற்றி: அரவக்குறிச்சியில் இறுதிச் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 23,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். செந்தில் பாலாஜி 88,068 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.சி பழனிச்சாமி 64,395 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதையடுத்து சட்டப்பேரவையில் ஆளும் அதிமுகவின் பலம் 136 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி: புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில் நாராயணசாமி அமோக வெற்றி பெற்றார். 11,144 வாக்குகள் வித்தியாசத்தில் நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார். நாராயணசாமி பெற்ற மொத்த வாக்குகள்: 18,709. அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர்- 7565 வாக்குகள் பெற்றார். நோட்டாவில் 334 வாக்குகள் பதிவாகின.

No comments:

Post a Comment