நாட்டில் பணப் புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் எடுப்பதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது.
இது இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுவரை ஒருவர் ஒரு வாரத்திற்கு ரூ.24,000 மட்டுமே வங்கி டெபாசிட்டில் இருந்து எடுத்துக் கொள்ள முடிந்தது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பால் கூடுதல் பணத்தை டெபாசிட் தொகையில் இருந்து எடுக்க முடியும். இருப்பினும், புதிய உச்ச வரம்பு என்னவென்பதை ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை.
கடந்த 8-ம் தேதியன்று ரு.500, 1000 செல்லாது என்ற பண மதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் அறிவித்தார். அதன் பின்னர் வங்கி, ஏடிஎம்களில் பணம் எடுப்பது தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை மத்திய அரசு விதித்து வந்தது. வங்கிகளில் டெபாசிட் செய்த பணத்திலிருந்து ஒருவர் வாரத்துக்கு ரூ.24,000 மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும் என்ற நடைமுறை அமல் படுத்தப்பட்டது.
இதனால்,வாரச் சம்பளம், தினக்கூலி போன்றவற்றை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சிறு வியாபாரிகள், வணிகர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுவந்தது. பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும், நோட்டு நடவடிக்கைக்குப் பின்னர் நியாயமான முறையில் சம்பாதித்த புதிய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய மக்கள் மத்தியில் தயக்கம் ஏற்பட்டது.
எனவே, நியாயமான வகையில் சேர்த்த புதிய பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்வதை ஊக்கப்படுத்தும் விதமாகவும், நாட்டில் பணப் புழக்கத்தை அதிகரிக்கும் விதமாகவும் புதிய அறிவிப்பை ரிச்ர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி, வங்கிகளில் 29-ம் தேதி (இன்று) முதல் புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு டெபாசிட் செய்யப்படும் தொகையை கட்டுப்பாடு இல்லாமல் திருப்பி எடுத்துக் கொள்ள முடியும். அவ்வாறு டெபாசிட் செய்யும் பணத்தை திருப்பி எடுத்துக் கொள்ளும்போது வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி ரூ.2000 அல்லது ரூ.500 நோட்டுகளாக அவற்றை பெற்றுக் கொள்ளலாம். வாடிக்கையாளரின் தேவையை பரிசீலித்து பணம் வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
8.1 லட்சம் கோடி டெபாசிட்:
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் நவம்பர் 27-ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கின்படி ரூ.8.1 லட்சம் கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ரூ.34,000 கோடி அளவில் பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகள் மாற்றப்பாட்டுள்ளது. வங்கிகளில் இருந்து ரூ.2.16 லட்சம் கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment