Saturday, 12 November 2016

ரூ.2,000 நோட்டில் ஏமாற்றப்பட்ட விவசாயி

கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் வெங்காய விவசாயி ஒருவரிடம் போலி ரூ.2000 நோட்டைக் கொடுத்து நபர் ஒருவர் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

ரூ.500, 1000 நோட்டுகள் நடவடிக்கைக்குப் பிறகு ரூ.2000 நோட்டுகளை வங்கிகள் அளித்து வருகின்றன. இந்நிலையில் சிக்மகளூர் சந்தையில் வெங்காய வியாபாரி ஒருவரிடம் வெங்காயம் கொள்முதல் செய்யவந்த நபர் ஒருவர் நகலெடுக்கப்பட்ட ரூ.2000 நோட்டைக் கொடுத்து ஏமாற்றியுள்ளார்.

ஏபிஎம்சி சந்தைக்கு அசோக் என்ற வெங்காய வியாபாரி விற்பனைக்காக வெங்காயம் கொண்டு வந்த போது, வெங்காயம் வாங்கிய நபர் ஒருவர் ரூ.2000 நோட்டை கொடுத்து அசோக்கிடம் இது புதிய நோட்டு, செல்லும் என்றும் கூறியுள்ளார். 

ஆனால், அசோக் இந்த நோட்டை அவரது நண்பர்களிடத்தில் காண்பித்த போது இது ஒரிஜினல் ரூ.2000 நோட்டல்ல அதன் நகலெடுக்கப்பட்ட நோட்டு என்று கூறினர். 

அதிர்ச்சி அடைந்த அசோக் போலீஸில் புகார் செய்தார். இதனையடுத்து போலீஸ் உயரதிகாரி கே.அண்ணாமலை ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “அசல் ரூ.2000 நோட்டின் அச்செடுக்கப்பட்ட நகல் இது, மேலும் மோசமாக நகலெடுக்கப்பட்டுள்ளது. பார்ப்பவர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே அது போலி நோட்டு என்று தெரியும். விவசாயிடம் நபர் பற்றிய விவரங்களை சேகரித்துள்ளோம் அவர் மீது இபிகோ பிரிவு 420-ன் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளோம்” என்றார்.

No comments:

Post a Comment