Tuesday, 28 February 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 28/02/2017



கொடிக்கால்பாளையம் ஜேஎம்தெரு மேலவீட்டு R.S.முஹம்மது மெய்தீன்,அவர்களின் மனைவியும்,அப்துல் ரஷீது,முஹம்மது ரஃபீக் அவர்களின் தாயாருமாகிய மைமூனா பீவி அவர்கள் தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

*இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!*
நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Monday, 27 February 2017

நமதூர் மௌத் அறிவிப்பு 27/02/2017

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

நமதூர் சின்னபள்ளிவாசல் தெரு வெ.ப.மு அப்துல் வஹாப் அவர்களின் மகனார் பஜிலூர் ரஹ்மான் அவர்கள் மௌத்.

Sunday, 26 February 2017

இஸ்லாம் வாழ்வியல்: சாந்தி சமாதானம்

மனித உறவுகளில் ஏற்படும் விரிசலுக்கு உச்சவரம்பு மூன்று நாள் என்று நிர்ணயித்த கையோடு மீண்டும் அந்த உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள அழகிய வழிமுறையாய் சலாம் என்னும் முகமனை நபிகளார் முன்மொழிகிறார். பிணங்கியுள்ள ஒருவர் மற்றொருவருக்கு, “இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்!” என்று பரஸ்பரம் பறிமாறிக் கொள்ளும் வாழ்த்து மீண்டும் சகோதரத்துவ உறவுக்கு வழிகோலுகிறது. இதயங்களை இணைக்கிறது. அத்தோடு இறையருளைப் பெற்றுத் தருகிறது.
ஒவ்வொரு பிணக்கிலும் யாராவது ஒருவர் மற்றொருவருக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தியே இருப்பார். இந்த இழப்பை ஈடுகட்டுவதன் முதல் நிலையாக, பாதிப்பை ஏற்படுத்தியவர் வருந்துவதோடு அந்த வருத்தத்தை வாய்மொழியாய் வெளிப்படுத்தும்போது, அந்தப் பிரச்சினை முற்றுப் பெற்றதாகிவிடும்.
“தன்னுடைய சகோதரரின் உரிமைகளைப் பறித்துக் கொண்டவர், தன்னுடைய சகோதரனின் கண்ணியத்தைக் களங்கப்படுத்தியவர் இன்றே உடனடியாக அந்த உறவுகளைச் சீர்செய்து கொள்ளட்டும். இல்லையேல் மறுமைநாளில், அநீதி இழைத்தவரின் நன்மைகள் அவர் இழைத்த அநீதிக்கு ஏற்றாற் போல அநீதி இழைக்கப்பட்டவருக்குப் பகிர்ந்தளிக்கப்படும். ஒருவேளை அப்படி நன்மைகள் இல்லாத பட்சத்தில் அநீதி இழைக்கப்பட்டவரின் தீமைகள் அநீதி இழைத்தவரின் பதிவேட்டில் சேர்க்கப்படும்!” என்று பொருள்படும்படி நபிகளார் எச்சரிக்கிறார்.
சகஜ நிலையை அடையச் சொல்லும் மார்க்கம்
அதேபோல, அடுத்தவரால் பாதிப்புக்குள்ளானவர் தனது மென்மையான போக்கால் அவருடைய தவறுகளை மன்னித்துவிடும்படியும் மற்றொரு தரப்பினரையும் நபிகளார் அறிவுறுத்துகிறார். மனிதரிடையே எழும் கருத்துப்பிழைகள் மனங்களில் கொதிநிலையில் இருக்க ஒருபோதும் இஸ்லாம் அனுமதிப்பதில்லை. அவை தணிக்கப்பட்டு சகஜநிலையை அடையவே மார்க்கம் விரும்புகிறது.
ஒருமுறை நபிகளார் தமது தோழரை நோக்கி கேட்கிறார். “சகோதரர்களே. தீயவர் யார் என்று நான் அடையாளப்படுத்தட்டுமா?”
அங்கு கூடியிருந்தோர், அதைத் தங்களுக்கு எடுத்துரைக்கும்படிக் கேட்கின்றனர்.
“உங்களில் மிகவும் தீயவர் யார் என்றால், யார் எப்போதும் பிறரைவிட்டுத் தனிமையில் இருக்கிறாரோ, யார் தன்னுடைய பணியாட்களிடம் கொடுமையாக நடந்து கொள்கிறாரோ, யார் பிறருக்கு அன்பளிப்பு தர மறுக்கிறாரோ அவரேதான்!” என்றுரைத்தார் நபிகளார்.
“யார் அடுத்தவர்க்கு எதிராக காழ்ப்புணர்வு கொண்டிருக்கறாரோ அவர்தான் மிகவும் தீயவர்” என்று சொன்ன நபிகளார் இன்னும் கொடிய தீயவர் யார் என்பதையும் கூறினார்.
“அடுத்தவர் தவறுகளை மன்னிக்காதவர்கள். அடுத்தவர் தம்மை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டும் அவரை மன்னிக்க மறுப்பவர்கள்” என்று நபிகளார் பல்வேறு நிலை மனிதர்களை அடையாளப்படுத்தி தமது தோழர்களை எச்சரிக்கிறார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

தமிழகத்தில் விவசாயம் பாதிக்கும் வகையில் மீத்தேன் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் எடுப்பதற்காக இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் உணவு உற்பத்தியும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு இளைஞர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு ஜெய்சிங் தலைமை தாங்கினார். இதில் நவீன், ராஜா, சிலைடன், வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Saturday, 25 February 2017

திருவாரூர் :தமிழக அரசின் உத்தரவின்பேரில் திருவாரூர் மாவட்டத்தில் 14 மதுக்கடைகள் மூடல்

தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை அடையப்படும் என்று கடந்த 2016– சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் தேர்தல் அறிக்கையின்படி முதல் கட்டமாக கடந்த ஆண்டு மே மாதம் 500 மதுக்கடைகளை மூடியது. மேலும் கடை திறந்திருக்கும் நேரமும் குறைக்கப்பட்டன.
இந்தநிலையில் கடந்த 20–ந் தேதி முதல்–அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றதை தொடர்ந்து தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், பேரளம், விளமல், காட்டூர், கீரங்குடி, தேவர்கண்டநல்லூர், களப்பால், பூந்தோட்டம், தேவன்குடி, மகாதேவப்பட்டினம், விக்கிரபாண்டியம் ஆகிய பகுதிகளில் உள்ள 14 மதுக்கடைகள் நேற்று மூடப்பட்டன. திருவாரூர் மாவட்டத்தில் 148 மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் முதல் கட்டமாக 7 கடைகளும், தற்போது 2–வது கட்டமாக 14 மதுக்கடைகளும் மூடப்பட்டன. இதனால் தற்போது மாவட்டத்தில் 127 மதுக்கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

Friday, 24 February 2017

ஒரே நாளில் டிஎன்பிஎஸ்சி, பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு: 2 தேர்வுகளையும் எழுத காத்திருப்போர் குழப்பம்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30-ம் தேதி நடத்தப்படும் என கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அறிவித்தார். அதே நாளில் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் குரூப் 7-பி பணிக் கான தேர்வும் நடைபெற உள்ள தால் 2 தேர்வுகளையும் எழுதுவ தற்காக தங்களை தயார்படுத்தி வருவோர் குழப்பத்தில் உள்ளனர்.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதைப் பின்பற்றி மாநில அரசு தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை 2012-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.
இந்தத் தேர்வை எழுத பட்டப் படிப்பு படித்தவர்கள் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர். இந் நிலையில், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஏப்ரல் 30-ம் தேதி நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்துள்ளார்.
அதே நாளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 7-பி எக்ஸ்கியூட்டிவ் ஆபீசர்ஸ் பணிக்கான தேர்வும் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 25.11.2016-ல் வெளியிடப்பட்டது.
ஒரேநாளில் 2 தேர்வு நடை பெற இருப்பதால் இரண்டு தேர்வு களிலும் பங்கேற்கத் திட்டமிட்டு தங்களைத் தயார்படுத்தி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு குழப் பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பட்டதாரி ஆசிரி யர் தகுதித் தேர்வுக்கு தயாராகி வரும் ஒருவர் கூறியபோது, “என்னைப் போன்று பட்டதாரி கள் குரூப் 7-பி பணிக்கு விண்ணப் பித்துள்ளோம். இந்நிலையில், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 30-ல் நடைபெறும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர் பணி கிடைக்கும் என ஏராளமானோர் காத்திருந்த நிலையில், 2 தேர்வும் ஒரே நாளில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளதால் அதிர்ச்சியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை கோடை விடுமுறை யான மே மாதத்தில் நடத்தி னால் தேர்வில் பங்கேற்க உள் ளோருக்கு கால அவகாசமும், 2 தேர்வுகளையும் எழுதும் வாய்ப்பும் கிடைக்கும். எனவே, இதனை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

Wednesday, 22 February 2017

7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஒட்டி ஊதிய விகிதங்களை மாற்ற ஐவர் குழு அமைத்தது தமிழக அரசு

மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து, தமிழக அரசு அலுவலர்கள் ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க அலுவலர் குழு ஒன்றை உடனடியாக அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த அலுவலர் குழு தமது அறிக்கையை நான்கு மாத காலத்துக்குள் அரசுக்கு அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதை செயல்முறைபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எனது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (22.2.2017) நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. சண்முகம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க 'அலுவலர் குழு' ஒன்றை உடனடியாக அமைக்க உத்திரவிட்டுள்ளேன்.
இக்குழுவில் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை செயலாளர், உறுப்பினர் செயலாளர் உமாநாத் ஆகியோர் இடம்பெறுவர்.
இந்த 'அலுவலர் குழு' மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இக்குழு, இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்கும்.
அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம் / ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்குழு தனது அறிக்கையை நான்கு மாத காலத்திற்குள், அதாவது 30.06.2017-க்குள் அரசுக்கு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்" என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

Tuesday, 21 February 2017

விவசாயிகளுக்கு உடனடியாக ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம்: முதல்வர் பழனிசாமி உத்தரவு

வறட்சியால் பாதிக்கப்பட்ட 32,30,191 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகையாக ரூ.2,247 கோடி உடனடியாக விடுவிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மாநில பேரிடர் நிவாரண நெறிமுறைகளின்படி பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கும் மற்றும் இதர பாசன பயிர்களுக்கும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5,465, மானாவாரி பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3,000, நீண்டக்கால பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.7,287 மற்றும் பட்டுப்புழு வளர்ப்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2,428/- லிருந்து ரூ.3,000/- வரை இடுபொருள் நிவாரண உதவித் தொகையாக வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்:
"தமிழ்நாட்டில் அக்டோபர் 1-ம்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த பருவமழை காலத்தில் சராசரியாக 440 மி.மீ. மழை கிடைக்கப்பெறும். ஆனால், நடப்பு ஆண்டில் 168.03 மி.மீ, மழையே கிடைக்கப்பெற்றுள்ளது.
கடந்த 140 ஆண்டுகளில் இது போன்ற குறைந்த மழையளவை தமிழ்நாடு சந்தித்தில்லை. இதனால் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
மாநிலம் முழுவதும் நேரடி பயிர் ஆய்வு செய்ய நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆய்வை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டு, அக்குழுவினர் மாநிலம் முழுவதும் கள ஆய்வினை மேற்கொண்டு, வறட்சி குறித்த அறிக்கை மற்றும் பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பித்தனர்.
வறட்சி குறித்த கள ஆய்வின் முடிவில், மொத்தம் உள்ள 16,682 வருவாய் கிராமங்களில், 13,305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என கண்டறியப்பட்டது. இவற்றுள், 1,564 கிராமங்களில் பயிர்நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 87 விழுக்காடு வரை நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான குழுக்கள் அளித்த அறிக்கைகளின் பேரில் வறட்சி மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அரசு ஆணைகள் வெளியிடப்பட்டு அவற்றின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்:
1. அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது.
2. அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் செலுத்த வேண்டிய 1426 ஆம் பசலி ஆண்டுக்குரிய நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்ய ஆணையிடப்பட்டு, தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
3. கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் ஆகியவற்றில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை மத்திய காலக் கடனாக மாற்றியமைப்பதற்கு தேவையான அன்னவாரி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
4. 33 சதவீதத்திற்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவித் தொகை வழங்க வருவாய் மற்றும் வேளாண் துறைகள் இணைந்து கணக்கெடுப்பு மேற்கொள்ள ஆணையிடப்பட்டு, கணக்கெடுக்கும் பணி முடிவு பெற்றுள்ளது.
5. வறட்சி காரணமாக ஏற்படும் கால்நடை தீவனப் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை வாயிலாக, பசுந்தீவனம், அடர்தீவனம் மற்றும் உலர் தீவனம் வழங்க 6.91 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
6. வறட்சி காரணமாக வன உயிரினங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, வனத்துறை மூலம் அவற்றுக்குத் தேவையான தீவனம் மற்றும் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் பணிகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டு, தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
7. வறட்சி காரணமாக வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு, போதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 100 நாட்கள் பணி வரம்பு என்பது 150 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
8. வறட்சி காரணமாக கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகள் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த ஆணையிடப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
9. வறட்சி காரணமாக நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகள் 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த ஆணையிடப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
10. பொதுப்பணித் துறை மூலமாக நிலத்தடி நீர்த்தேக்கும் அமைப்பு, நிலத்தடி நீர் செரிவூட்டும் அமைப்பு போன்ற நீராதாரங்களை மேம்படுத்த 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
11. கடந்த இரண்டு மாதங்களில் 17 விவசாயிகள் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டிருந்தாலும், இறந்தவர்களின் வறிய நிலையை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க ஆணையிடப்பட்டு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
12. புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைக்கும் என்பதால், நடப்பு ஆண்டில் பயிர்க் காப்பீட்டிற்கு அரசின் பங்களிப்பு தொகையான 410 கோடி ரூபாய் வேளாண்மைத் துறை மூலம் செலுத்தும்பொருட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் 14.99 லட்சம் விவசாயிகள் இதுவரை பதிவு செய்துள்ளனர். 30.102 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.
13. பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகள், காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பயிர் இழப்புக்கான இழப்பீட்டுத் தொகையை பெற ஏதுவாக, பயிர் அறுவடை பரிசோதனைகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டது.
இதுவரை 44,489 பயிர் அறுவடை பரிசோதனைகள் பல்வேறு பயிர்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இச்சோதனைகளில் பெறப்பட்ட மகசூல் விவரங்களின் அடிப்படையில் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களால் விரைவில் வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 39,565 கோடி ரூபாய் நிதியுதவி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமையினை பார்வையிட 9 உறுப்பினர்கள் கொண்ட குழு 23.1.2017 முதல் 25.1.2017 வரை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவித் தொகை வழங்கிட, வருவாய் மற்றும் வேளாண் துறைகள் இணைந்து செய்த கணக்கெடுப்புப் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன.
இந்த கணக்கெடுப்பின்படி 32,30,191 விவசாயிகளுக்குச் சொந்தமான 50,34,237 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதால் பயிர் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகையாக 2,247 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டியுள்ளது.
இதன் மூலம், வேளாண் பயிர் சாகுபடி செய்த 28,99,877 விவசாயிகளுக்குச் சொந்தமான 46,27,142 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட சேதத்திற்கு 2,049 கோடி ரூபாயும், தோட்டப்பயிர் சாகுபடி செய்த 3,27,398 விவசாயிகளுக்குச் சொந்தமான 4,04,326 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட சேதத்திற்கு 197 கோடி ரூபாயும், பட்டுப்பூச்சி வளர்ப்புக்காக மல்பெரி சாகுபடி செய்த 2,916 விவசாயிகளுக்குச் சொந்தமான 3,658 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட சேதத்திற்கு 1 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 2,247 கோடி ரூபாய் வேளாண் இடுபொருள் நிவாரண உதவித்தொகையாக வழங்கப்படவேண்டும்.
மேற்கண்ட சூழ்நிலையில் விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகை வழங்குவது சம்பந்தமாக இன்று (21.2.2017) எனது தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், 32,30,191 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகை 2,247 கோடி ரூபாய், விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இதன்படி, மாநில பேரிடர் நிவாரண நெறிமுறைகளின்படி பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கும் மற்றும் இதர பாசன பயிர்களுக்கும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5,465, மானாவாரி பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3,000, நீண்டக்கால பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.7,287 மற்றும் பட்டுப்புழு வளர்ப்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2,428- லிருந்து ரூ.3,000- வரை இடுபொருள் நிவாரண உதவித் தொகையாக வழங்கப்படும்.
இதைத் தவிர, மாநில அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் பயனாக பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ள 14.99 இலட்சம் விவசாயிகள், பதிவு செய்துள்ள பயிருக்கு ஏற்றவாறும், மாவட்டத்திற்கு ஏற்றவாறும், பயிர் இழப்புக்கு ஏற்றவாறும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,800 முதல் ரூ.69,000/- வரை காப்பீட்டுத் ஈட்டுத் தொகையாக பெற இயலும். பயிர் அறுவடை பரிசோதனை முடிய முடிய, இந்த காப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் விடுவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவது மற்றும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களுக்குப் போதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்துவது போன்றவற்றை உறுதி செய்யும் வகையில், கிராம அளவில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு வறட்சி குறித்த நிலைமையினை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து, தேவைப்படும் அனைத்து துயர் துடைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது"
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே திருவாரூரில் தர்பூசணி பழங்கள் விற்பனை மும்முரம்

கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தணிப்பதில் தர்பூசணி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. இதனால் ஆறு, குளம், குட்டை போன்ற நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வற்றி கிடக்கிறது. இதனால் கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது பனிபொழிவு அதிகமாக உள்ளது. மார்கழி மாதம் பெய்ய வேண்டிய பனி தை மாதத்தை கடந்து மாசி மாதம் வரை நீடித்து வருகிறது. இரவு குளிருக்கு நிகராக, பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக நிலவி வருகிறது. இதனால் திருவாரூரில் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கத்தை தணிக்க தர்பூசணி பழங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து திருவாரூர் கமலாலயம் தென்கரையில் உள்ள தர்பூசணி வியாபாரி கூறுகையில், இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்குவதற்குள் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பொதுமக்களின் தாகத்தை தணிக்கின்ற வகையில் திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் ஆர்வத்துடன் பழங்களை வாங்கி செல்கின்றனர் என தெரிவித்தார். 

Monday, 20 February 2017

பெண்களுக்கு 50% மானியத்தில் ஸ்கூட்டர்; 500 டாஸ்மாக் கடை மூடல்: முதல்வர் பழனிசாமியின் முதல் 5 நடவடிக்கைகள்

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி முறைப்படி இன்று (திங்கள்கிழமை) பகல் 12.30 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் அவரது நாற்காலியில் அமர்ந்து பணிகளைத் துவக்கினார் பழனிசாமி. அவரை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர் 500 டாஸ்மாக் கடைகள் மூடல், அம்மா இரு சக்கர வாகனம் திட்டம், மகப்பேறு நிதியுதவி உயர்வு, மீனவர்களுக்கு வீட்டு வசதி திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு ஆகிய 5 அறிவிப்புகள் கொண்ட கோப்புகளில் கையெழுத்திட்டார்.
தேர்தல் வாக்குறுதியின்படி இத்திட்டங்களை நிறைவேற்றுவதாக முதல்வர் தெரிவித்தார்.
இந்த 5 அறிவிப்புகள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
'அம்மா இரு சக்கர வாகனம் திட்டம்'
மகளிர், பணியிடங்களுக்கும் பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இரு சக்கர வாகனங்கள் வாங்க ஐம்பது சதவீத மானியம் வழங்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்க ஐம்பது சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 20,000 வழங்கப்படும். மகளிரின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை வைத்திருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக இத்திட்டம் 'அம்மா இரு சக்கர வாகனம் திட்டம்' என அழைக்கப்படும். ஆண்டொன்றுக்கு, சுமார் 200 கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தினை தமிழ்நாடு அரசுசெயல்படுத்தும்.
'மகப்பேறு நிதியுதவி திட்டம் அதிகரிப்பு'
ஏழை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி, 1.6.2011 முதல் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க முன்னாள் முதல்வர் ஆணையிட்டிருந்தார்.
உலக நாடுகளின் நிலையையொத்த பேறு கால குறியீடுகளை தமிழ்நாடு அடையும் பொருட்டும், பேறு கால தாய் சேய் இறப்பு விகிதத்தினை மேலும் குறைக்கும் பொருட்டும், 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவியினை 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனை நிறைவேற்றும் வகையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவியினை 12ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 6 லட்சம் தாய்மார்கள் பயனடைவர். ஆண்டொன்றுக்கு 360 கோடி ரூபாய் கூடுதல் செலவில் இத்திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும்.
'மீனவர்களுக்கு வீடு'
தேர்தல் அறிக்கையில், மீனவர்களுக்கென தனியே வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முனைப்பாக செயல்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் மீனவர்களுக்கான தனி வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 5000 வீடுகள் கட்டப்படும். ஒரு வீட்டின் மதிப்பு 1 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும். 85 கோடி ரூபாய் செலவினத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
'வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை அதிகரிப்பு'
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகை இரு மடங்காக அதிகரிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேற்கண்ட தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூபாய் 100லிருந்து ரூபாய் 200 ஆக உயர்த்தியும், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூபாய் 150லிருந்து ரூபாய் 300ஆக உயர்த்தியும், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூபாய் 200லிருந்து ரூபாய் 400 ஆக உயர்த்தியும், பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூபாய் 300லிருந்து ரூபாய் 600 ஆகவும் உயர்த்தியும் ஆணையிடப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் தற்போது உதவித்தொகை பெற்று வரும் 55,228 இளைஞர்கள் உயர்த்தப்பட்ட உதவித் தொகை பெற்று பயன் பெறுவர். இத்திட்டத்தை செயல்படுத்துவதனால் தமிழ் நாடு அரசுக்கு ஆண்டொன்றுக்கு 31 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும்.
'மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்'
மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 500 மதுபானக் கடைகளை மூடியும், மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைத்தும் 24.5.2016 அன்று அப்போதைய முதல்வர் ஆணையிட்டார். மேற்கண்ட கொள்கையினை முன்னெடுத்து செல்லும் வகையில், தமிழ்நாட்டில் மேலும் 500 மதுபானக் கடைகள் மூடுவதற்கான ஆணையிடப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, 19 February 2017

அடையாள சான்றிதழை காண்பித்து இ-சேவை மையங்களில் இலவச வாக்காளர் அட்டை பெறலாம்

திருவாரூர் மாவட்டத்தில் அடையாள சான்றிதழை காண்பித்து இ-சேவை மையங்களில் இலவச வாக்காளர் அடையாள அட்டை பெறலாம் என கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இறுதி வாக்காளர் பட்டியல்

கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்ய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, செம்டம்பர் 1-ந்தேதி முதல் 30-ந் தேதி வரை பெறப்பட்டன. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 29 ஆயிரத்து 72 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

இந்த விண்ணப்பதாரர்கள் கடந்த ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். மேலும் இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டை பதிவு ஆகியவற்றின் காரணமாக 8 ஆயிரத்து 800 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது மாவட்டங்களில் இருந்து தரவுகள் தொகுக்கப்பட்டு, புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடுவதற்காக ஒப்பந்தக்காரர்களுக்கு அனுப்பப்பட்டது.

வாக்காளர் அடையாள அட்டை

இதை தொடர்ந்து கடந்த ஆண்டு அச்சிடப்பட்ட அட்டைகள் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டன. புதிய வாக்காளர்களுக்கு தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பத்தில் தங்களின் செல்போன் எண்ணை அளித்துள்ள புதிய வாக்காளர்களுக்கு ஒரு தனிப்பட்ட அடையாள எண், குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.

இந்த அடையாள எண்ணை தங்கள் பகுதியில் அல்லது அருகில் உள்ள இ-சேவை மையத்தில் காண்பித்து வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இலவசமாக பெற்று கொள்ளலாம். செல்போன் எண்ணை அளிக்காத புதிய வாக்காளர்கள் தேர்தல் துறையின் கட்டணமில்லா உதவி எண் 1950-யை தொடர்பு கொண்டு, தங்களின் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு அடையாள எண் அனுப்பப்படும். அவர்கள் இ-சேவை மையங்களில் தங்களுடைய ஏதேனும் ஒரு புகைப்பட அடையாள சான்றை காண்பித்து வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமூக பணியாக நினைத்து சீமைக்கருவேல மரங்களை அகற்ற அனைவரும் முன்வரவேண்டும்

திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சீனிவாசன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் நீரை உறிஞ்சுகிறது. இதனால் விவசாயம் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. மதுரை கிளை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மாநிலம் முழுவதும் அனைத்து இடங் களிலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம். அதிக மகசூல் கொடுக்கும் தன்மையுடைய மண்வளம் பெற்றது. எனவே நிலத்தடி நீரை சேமித்து விவசாயத்தை பாதுகாத்திட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு அலுவலர்கள் தாங்கள் பணியாற்றும் இடங்களிலுள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். இப்பணியை சுமையாக கருதாமல் சமூக பணியாக நினைத்து செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அறிக்கை அனுப்ப வேண்டும்

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கூறுகையில், மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளிலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அரசு அலுவலர்கள் உடனடியாக தங்களது பகுதியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டு விரைந்து அறிக்கை அனுப்ப வேண்டும். தனியார் இடத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அதன் உரிமையாளர்கள் உடனடியாக அகற்றி கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் அந்த மரங்களை அகற்றும். அகற்ற ஏற்படும் செலவு இரு மடங்காக நிலத்தின் உரிமையாளரிடம் வசூலிக்கப்படும் என கூறினார்.

இதில் தலைமை குற்றவியல் நீதிபதி சத்தியமூர்த்தி, மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், உதவி கலெக்டர் முத்துமீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Saturday, 18 February 2017

எதிர்க்கட்சியினர் இல்லாத பேரவை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி

சட்டப்பேரவை சனிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியதும், பேரவைத் தலைவர், அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான தீர்மானத்தை கொண்டு வர முதல்வருக்கு அனுமதி அளித்தார். பலத்த அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.
ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் பேரவை உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினர்.
இந்நிலையில் திமுகவினருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அணியினர் முழக்கமிட்டதால் அமளி ஏற்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு காரணமாக சட்டப்பேரவையின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 பிரிவுகளாக அமர்த்தப்பட்டனர். முதல் மூன்று பிரிவுகளில் அதிமுகவினரும், மற்ற மூன்று பிரிவுகளில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமர்ந்தனர்.
ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை
ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு ஓபிஎஸ் அணி கொறடா செம்மலை கோரிக்கை விடுத்தார். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் செம்மலை வேண்டுகோள் விடுத்தார்.
''உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும், எம்.எல்.ஏக்களின் உரிமை, மாண்பு பாதுகாக்கப்படும்'' என்று சபாநாயகர் தனபால் கூறினார். சபாநாயகர் தவிர, சட்டப்பேரவையில் 230 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்க ஸ்டாலின் கோரிக்கை
சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ''ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே உண்மையான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும். வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்க வேண்டும். ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்திருக்கும்போது அவசரமாக வாக்கெடுப்பு நடத்துவதற்கு காரணம் என்ன?" என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் அளித்த அவகாசத்தை கருத்தில் கொண்டே இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறுவதாகக் கூறி ஸ்டாலின் கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.
முன்னதாக, சிறைக்கைதிகள் போல் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அழைத்து வரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
பேரவையில் ஓபிஎஸ் பேசுகையில், ''கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டதை அனைவரும் அறிவர். மக்களின் குரல் பேரவையில் ஒலிக்க, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதிக்குச் சென்று வந்த பிறகே வாக்கெடுப்பு நடத்த வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
என் உரிமையில் யாரும் தலையிடக் கூடாது: சபாநாயகர்
ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று சபாநாயகர் தனபால் கூறினார். மேலும், வாக்கெடுப்பு முறை எனது தனிப்பட்ட முடிவு, என் உரிமையில் யாரும் தலையிடக் கூடாது என்றார்.
மக்களை சந்திக்க சட்டப்பேரவை உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும் என்று மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ நட்ராஜ் கோரிக்கை விடுத்தார். இவ்வாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதால் பேரவை தொடங்கி ஒருமணிநேரம் ஆகியும் வாக்கெடுப்பு தொடங்கவில்லை.
1 மணி வரை அவை ஒத்திவைப்பு
இந்நிலையில், வேண்டும் வேண்டும் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர், எதிர்க்கட்சியினர் சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். இதனால் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருக்கைகளை தட்டியும், காகிதங்களைக் கிழித்தெறிந்தும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பேரவையில் இருந்து சபாநாயகர் வெளியேறினார்.
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருக்கைகளை தட்டியும், காகிதங்களைக் கிழித்தெறிந்தும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் அமைதி காக்காததைக் கண்டித்து பேரவையில் இருந்து சபாநாயகர் வெளியேறினார். சபாநாயகரை பாதுகாப்பாக அவை காவலர்கள் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டம் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பேரவைத் தலைவர் தனபால் மைக் உடைக்கப்பட்டது. அவரது இருக்கை சேதப்படுத்தப்பட்டது. பேரவை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையும் உடைக்கப்பட்டது. இந்த பலத்த அமளிக்கு இடையிலும், எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டும் அமைதி காத்தது குறிப்பிடத்தக்கது.
அவை 1மணி வரை ஒத்திவைக்கப்பட்டதால், சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளியே வந்து, பிறகு பேரவைக்குள் சென்றனர். இந்த இடைவெளியில் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
108 ஆம்புலன்ஸ் வருகை
தலைமைச்செயலகத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வந்தது. ரகளையின் போது மயக்க வந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட அவைக்காவலர் பாலாஜி ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்.
மீண்டும் கூடிய சட்டப்பேரவை
ஒத்திவைப்புக்குப் பின்னர் சட்டப்பேரவை மீண்டும் கூடியது. சபாநாயகர் தனபால், ''தனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது?அவை விதிகளின்படியே அவையை நடத்த கடமைப்பட்டிருக்கிறேன்'' என்றார்.
திமுகவினர் வெளியேற்றம்; 3 மணி வரை அவை ஒத்திவைப்பு
ரகசிய வாக்கெடுப்பு மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு தேதியை ஒரு வாரம் ஒத்திவைக்க வேண்டும் என்று ஸ்டாலின் இரு கோரிக்கைகளை முன்வைத்தார். சபாநாயகர் அதை ஏற்காததால் திமுகவினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் மைக் இரண்டாவது முறையாக உடைக்கப்பட்டது. அதிமுக அமைச்சர்களின் இருக்கையின் மீதேறி திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சபாநாயகர் தனபால், ''அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால் திமுகவினரை வெளியேற்ற வேண்டும்'' என்று உத்தரவிட்டார். இதனால் பேரவையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அவைக் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திமுகவினரை வெளியேற்ற முடியாமல் அவைக்காவலர்கள் திணறினர். மீண்டும் அமளி ஏற்பட்டதால் சட்டப்பேரவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டப்பேரவைக்குள் திமுகவினர் தர்ணா
சட்டப்பேரவைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து சேகர் பாபு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உத்திரமேரூர் சுந்தர், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், தளி பிரகாஷ், நந்தகுமார் ஆகியோர் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
அவையில் இருந்து வெளியேற திமுகவினர் மறுப்பு தெரிவித்தனர். தரையில் அமர்ந்து ஸ்டாலின் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குண்டுக்கட்டாக அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய ஸ்டாலின், ''ஜனநாயக முறையில் அறப் போராட்டம் நடத்தினோம். எங்களை குண்டுக்கட்டாக தூக்கி அடித்து, உதைத்து சட்டைகளை கிழித்தனர். இது குறித்து ஆளுநரிடம் முறையிடுவோம்'' என்றார்.
அதற்குப் பிறகு ஸ்டாலின் ஆளுநரை சந்திக்க புறப்பட்டார். ஸ்டாலினுடன் 9 எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்திக்க சென்றனர்.
காங்கிரஸ் வெளிநடப்பு
இந்த நிலையில் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி
3 மணிக்கு கூடிய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த தீர்மானத்துக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.
குரல் வாக்கெடுப்புதான் மரபு. தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளால் எண்ணிக்கை வாக்கெடுப்பு தொடங்குவதாக சபாநாயகர் தனபால் கூறினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவைக்குள் இல்லாததால் நடுநிலைமை வாக்குகள் எதுவும் இல்லை.
வாக்கெடுப்புக்கு முந்தைய பின்னணி
முன்னதாக, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அதன்பின் டிசம்பர் 29-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானார். புதிய அமைச்சரவை அமைந்து 2 மாதங்கள் கழிந்த நிலையில், திடீரென பிப்ரவரி 5ம் தேதி, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.
அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக தற்போது 10 எம்எல்ஏக்கள் தலைமையை எதிர்த்து வெளியேறியுள்ளனர். சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னை கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
கடந்த 14-ம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சசிகலா சிறைக்கு சென்றார். அன்றே சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தங்களுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தொடர்ந்து வலியுறுத்தியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். மாலையே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 30 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றது.
முன்னதாக, ஆட்சி அமைக்க அழைக்கும்போது, 15 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார். அதன்படி, சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், இன்று பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி, அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இது மூன்றாவது முறை...
சட்டப்பேரவையில் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் இதுபோன்ற நிகழ்வு நடப்பது 3-வது முறையாகும். முதலில் 1952-54 காலகட்டத்தில் ராஜாஜி தமிழக முதல்வராக இருக்கும் போது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்பின் எம்ஜிஆர் மறைவை அடுத்து 1988-ல் அரசு மீது நம்பிக் கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது 3-வது முறையாக இன்று பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடந்தது.
அதில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக தன் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்

Thursday, 16 February 2017

தமிழகத்தின் 13வது முதல்வராக பழனிசாமி பதவியேற்பு

தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில், ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  பதவியேற்ற முதல்வர் பழனிசாமிக்கு, ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.
பிறகு, தமிழக அமைச்சர்களுக்கு ஆளுநரை பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதி மொழியும் செய்து வைக்குமாறு, தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் அழைப்பு விடுத்தார்.
 அப்போது திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ. செங்கோட்டையன், கே. ராஜூ, தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், சண்முகம், கே.பி. அன்பழகன் ஆகிய அமைச்சர்கள் கூட்டாக பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பும் எடுத்துக் கொண்டனர்.

Wednesday, 15 February 2017

நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதாலும், காவிரி நீர் சரிவர கிடைக்காததாலும் ஆறு, வாய்க்கால், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் வறண்டு போனது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நீர்நிலைகள் வறண்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகின்றது. இதனால் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் அளவில் சராசரியாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 8 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் குறைந்து இருந்தது. ஆனால் தற்போது ஜனவரி மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் 15 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. திருவாரூரில் அமைந்துள்ள கமலாலயம் குளம் நகரத்தை சுற்றி நிலத்தடி நீரை பாதுகாத்து வந்தது.

ஆறுகளில் தண்ணீர்் இல்லாததால் குளத்திற்கு தண்ணீர் பாசனம் செல்வது தடைப்பட்டது. இதனால் தற்போது இந்த குளம் எந்த ஆண்டும் இல்லாத அளவில் தண்ணீர் வற்றி தரையை தொடுகின்ற அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நகர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இதன் காரணமாக திருவாரூர் நகர் பகுதியில் 40 அடியில் கிடைத்து வந்த நிலத்தடி நீர் கிடு, கிடுவென குறைந்ததால் பல வீடுகளில் ஆழ்குழாய் மோட்டார்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டது. இதனால் அனைத்து ஆழ் குழாய்கள் மீண்டும் 100 அடிக்கு மேல் ஆழப்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல் நகராட்சி நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்படும் ஆழ்குழாய் மின் மோட்டார்களின் செயல்பாடு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு

திருவாரூர் மாவட்டத்தின் முக்கிய ஏரிகளான வடுவூர் ஏரி, உதயமார்த்தண்டபுரம் ஏரி ஆகியவை பராமரிப்பில்லாததால் வறண்டு காணப்படுகின்றன. மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான குளங்கள், ஏரிகள், நீர்்நிலைகளும் ஆக்கிரமிப்பு செய்து அழிக்கப்பட்டு விட்டது. நிலத்தடி நீரின் பெரும் பகுதியை கருவேல மரங்கள் எடுத்துக்கொள்கின்றது. இதனால் ஆண்டுக்கு ஆண்டு நிலத்தடி நீரின் அளவும் குறைவதற்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.

மாவட்டத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளான முத்துப்பேட்டை, பெருகவாழ்ந்தான் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் கடல்நீர் உட்புகுவது அதிகமாகிவிட்டது. இதனால் நிலத்தடி நீர் வெகுவாக உப்பாக மாறி வருவதால் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீர் பிரச்சினையால் கோடை காலத்தில் மிகப்பெரிய வறட்சியால் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே தமிழக அரசு நிலத்தடி நீரை பாதுகாத்து குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தி பெரும் திட்டங்களை செயல்படுத்திட வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள குளம், குட்டை நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

நீர் நிலைகளை முழுமையாக தூர்வாரி தண்ணீரை சேமிக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுபாட்டை போக்கிட முடியும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மணல் திருட்டை தடுக்க வலியுறுத்தி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருவாரூர் அருகே உள்ள பழவனக்குடி ஊராட்சி கொச்சக்குடி கிராமத்தில் உரிய அனுமதியின்றி அரசு நிலங்கள், விளைநிலங்கள் மற்றும் ஆற்றின் கரைகளிலும் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இந்த மணல் திருட்டால் பாதிப்பு ஏற்படும் என்பதால் கிராமமக்கள் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தனர். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து மணல் திருட்டு சம்பவம் தொடர்ந்து அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக சுக்கான் ஆற்றின் கரை உடையும் அபாயநிலையில் உள்ளது. மேலும் விளைநிலங்களில் மண் எடுக்கப்படுவதால் ஆபத்தான சூழ்நிலை உருவானது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் நேற்று சொச்சக்குடியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மணல் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும். அதனை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மணல் திருட்டுக்கு எதிராக கிராமமக்கள் நடத்திய போராட்டத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tuesday, 14 February 2017

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவ் ராய் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.
இரண்டு நீதிபதிகளுமே ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினர். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினர். கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். கர்நாடகா சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பு அப்படியே ஏற்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டு சிறை; ரூ.10 கோடி அபராதம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்று மாலைக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடனடியாக ஆஜராக உத்தரவு:
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் ஆஜராக வேண்டும் என கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்
கர்நாடக சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 48-ல் மூவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு பின்னடைவு:
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வந்துள்ளது. இதன் காரணமாக சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்தது. 4 ஆண்டு சிறைத் தண்டைனையில் ஏற்கனெவே அனுபவிக்கப்பட்ட சிறைத் தண்டனையைத் தவிர்த்து எஞ்சியுள்ள தண்டனைக் காலத்தை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தண்டனை உறுதியானதால் சசிகலா இன்னும் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
வழக்கு கடந்து வந்த பாதை:
கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.66 கோடி சொத்துக் குவித்ததாக சுப்பிரமணியன் சுவாமி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சென்னையில் நடைபெற்ற இவ்வழக்கு, திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் கோரிக்கையை ஏற்று கடந்த 2004-ம் ஆண்டு பெங்களூருவுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் ஆவணங்கள் மொழிபெயர்ப்பு, சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்கு மூலம், இறுதிவாதம் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இறுதியில் 2014, செப்டம்பர் 27-ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா உள்ளிட்டோருக்கு ரூ.10 கோடியும் அபராதம் விதித்து தீர்ப்பை வழங்கினார்.
இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி குமாரசாமி 2015, மே 11-ம் தேதி ஜெயலலிதா,சசிகலா உள்ளிட்ட நால்வரையும் நிரபராதி என விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து கர்நாடக அரசு, சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அன்பழகன் தரப்பில் கடந்த ஆண்டு ஜூலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, 13 February 2017

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 56 ஆயிரத்து 960 பேருக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளது

தட்டம்மை தடுப்பூசி

திருவாரூர்் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபல்லா தடுப்பூசி போடும் பணி கடந்த 6-ந் தேதி தொடங்கியது. மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகிய இடங்களில் 2,123 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி திருவாரூர்் மாவட்டத்தில் தட்டம்மை தடுப்பூசி போடும் பணி கடந்த 6-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. முகாம்களில் 9 மாதம் முடிவடைந்த குழந்தைகள் முதல் 15 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் ஏற்கெனவே தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் கூடுதலாக ஒரு முறை தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.

வதந்தி

இந்த தடுப்பூசி போட்டுக்கொள்வதால் தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஆகிய இரு நோய்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் குழந்தைகளைப் பாதுகாக்கலாம். மாவட்டத்தில் இதுவரை ஊசி போடப்பட்ட குழந்தைகளுக்கு எவ்வித சிறு பாதிப்பும்கூட ஏற்படவில்லை.

எனவே, வதந்திகளை நம்பாமல் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தவறாமல் இந்த தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 56 ஆயிரத்து 960 பேருக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி சம்பந்தமான ஆலோசனை பெற 104 என்ற தொலைபேசி் எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Sunday, 12 February 2017

206 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது சம்பா அறுவடை பணி நடைபெற்று வருவதால் அரசு மூலம் நெல் கொள்முதல் செய்ய 206 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் விவசாயிகள் நெல் விற்பனை செய்து பயன்பெற வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள குறைகளை என்னுடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். குடவாசல் பகுதியில் உள்ள மேலராமன் சேத்தி கிராம பொதுமக்கள் கோரிக்கைகளை ஏற்று மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Saturday, 11 February 2017

வாட்ஸ்-அப்பில் புது பாதுகாப்பு வசதி!

ட்ஸ்-அப் நிறுவனம், புதிதாக 2 கட்ட பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் புது ஃபோன்களில் வாட்ஸ்-அப்பை பாதுகாப்பாக இன்ஸ்டால் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பின் மூலம், வாட்ஸ்-அப்பை ரீ-இன்ஸ்டால் செய்யும்போது பயனர்கள் 6 டிஜிட் பாஸ்கோடின் மூலம் மட்டுமே ஆப்பை பயன்படுத்த முடியும். பாஸ் கோடை பதிவு செய்யும்போதே, கூடவே மின்னஞ்சல் முகவரியும் பதிவு செய்ய வேண்டும். பாஸ் கோட் மறக்கப்பட்டால், மின்னஞ்சல் மூலம் அதை திரும்பிப் பெற முடியும். 
ஆனால், இந்த பாதுகாப்பு வசதி கட்டாயம் கிடையாது, வேண்டியவர்கள் அவர்களின் வாட்ஸ்-அப் செயலியில் செய்துகொள்ளலாம்.  

Friday, 10 February 2017

தலைமைச்செயலாளர், டிஜிபியுடன் கவர்னர் வித்யாசாகர் ராவ் நடத்திய ஆலோசனை நிறைவு

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை கடந்த 5-ந்தேதி எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்தனர். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கவர்னர் மாளிகையில் கொடுத்திருந்தார். அந்த கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக் கொண்டு புதிய அமைச்சரவை அமையும் வரை முதல்-அமைச்சர் பொறுப்பில் நீடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே கட்டாயப்படுத்தப்பட்டதால் முதல் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாக  ஓ பன்னீர் செல்வம் கூறியிருந்தார். இதன்பின்னர்,நேற்று சென்னை வந்த கவர்னரை சசிகலா எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதேபோல், ஓ பன்னீர் செல்வமும் ஆளுநரை சந்தித்து பேசினார். 

சசிகலாவை ஆதரித்துள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேசமயம், கவர்னர் அழைக்கும்போது ஒன்றாக செல்வதற்கு வசதியாக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக சசிகலா ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். எம்.எல்.ஏ.க்களை மீட்கக்கோரி தொடரப்பட்ட ஆட்கொணர்வு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுபற்றி விசாரிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன், டி.ஜி.பி. ராஜேந்திரன் இன்று சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலை, அதிகாரிகள் மாற்றம் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து டி.ஜி.பி.யுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தினார். மேலும், சசிகலாவுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்.ஏ.க்கள் தற்போது எங்கிருக்கிறார்கள்? என்பது பற்றியும் ஆளுநர் கேட்டறிந்ததாக தெரிகிறது. 

டி.ஜி.பி.யை தொடர்ந்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் ஆணையர் ஜார்ஜ், உளவுப்பிரிவு கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் ஆகியோரும் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஆலோசனை நிறைவு பெற்றது.

இன்று இரவு முதல் சந்திர கிரகணம் பனி நிலவாக தெரியும்

சர்வதேச நேரப்படி பிப்ரவரி 10ம் தேதி 22:34 மணிக்கு தொடங்கும் கிரகணம் அடுத்த நாள் 02:53 வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆசியாவில் பல பகுதிகளில் இந்த அதிசய காட்சியை காணலாம்.சந்திர கிரகணம் ஏற்படும் போது பூமி இடையில் அமைந்திருக்க சூரியன், சந்திரன் ஆகியவை அணிவகுத்து நிற்கும்.

இந்த அணிவகுப்பின் போது பூமியின் நிழல், சந்திரன் மீது விழுந்து சந்திர கிரகணத்தை ஏற்படுத்தும்.மேலும், சந்திர கிரகணத்தின் போது நிலவு வெள்ளி படர்ந்ததை போல பேரழகாக காட்சியளிக்கும்.

பிப்ரவரியில் தோன்றும் இந்த முழு நிலவு, பனி நிலவு என அழைக்கப்படுகிறது. மேலும் கமெட் 45p என்னும் வால்நட்சத்திரமும் நடு இரவில் தோன்றும் என தெரிகிறது இந்த கமெட் 45p வால் நட்சத்திரம் 1948ல் கண்டுப்பிடிக்கப்பட்டதாகும்.

Thursday, 9 February 2017

பிப்ரவரி 20-முதல் சேமிப்பு கணக்கில் இருந்து வாரத்திற்கு ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி

கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக மத்திய அரசு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. இதற்கு பதிலாக புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால் தேவைக்கு ஏற்ப புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்காததால் வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இறுதியாக இருந்த நிலவரப்படி ஏ.டி.எம்.களில் ஒரு அட்டைக்கு ஒரு நாளைக்கு ரூ.4,500 மட்டுமே எடுக்க முடியும். வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். 

இதனால் பணம் எடுப்பதற்காக வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஏ.டி.எம்.களும் முழுமையாக இயங்கவில்லை, பெரும்பாலான ஏ.டி.எம்.கள் பூட்டியே இருந்தன. இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி இன்று  முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுள்ளது. 

அதாவது பிப்ரவரி 20- ஆம் தேதி முதல் சேமிப்பு கணக்கில் இருந்து வாரத்திற்கு ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல், மார்ச் 13 ஆம் தேதி முதல் சேமிப்புக்கணக்கில் கட்டுப்பாடு இன்றி பணம் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, 8 February 2017

தனி கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை: ஓ. பன்னீர்செல்வம் திட்டவட்டம்

அதிமுக பொதுச் செயலர் சசிகலாவுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ள முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தனி கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார்.
செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், தனி கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை.  எதிர்க்கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்கவில்லை.
அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரித்தால் மட்டுமே ஆட்சி அமைப்பேன். வாக்களித்த மக்களை மனதில் கொண்டு எம்எல்ஏக்கள் செயல்பட வேண்டும் என்று கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு, கூடிய விரைவில் மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். மக்கள் விரும்பினால் மட்டுமே ஆட்சிக்கு வருவேன். இல்லையென்றால் வர மாட்டேன்.
என்னை கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்க, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலருக்கு அதிகாரம் இல்லை என்று கட்சி விதி கூறுகிறது.
எனக்குப் பின்னணியில் திமுக இருப்பதாகக் கூறுவது உண்மையில்லை. பாஜகவுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் பன்னீர்செல்வம் கூறினார்.

Tuesday, 7 February 2017

kodikkalpalayam - பாச்சோற்று பெருவிழா

பாச்சோற்று பெருவிழா இன்று கொடிக்கால்பாளையம் முஹ்யீத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் வளாகத்தில் தற்போது நடைப்பெற்று வருகிறது.




Monday, 6 February 2017

திருவாரூர் மாவட்டத்தில் தட்டம்மை தடுப்பூசி முகாம் இன்று தொடங்குகிறது

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தட்டம்மை தடுப்பூசி முகாம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் தட்டம்மை நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக தட்டம்மை தடுப்பூசி முகாம்  (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த முகாம் வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் 9 மாத குழந்தைகள் முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வரை தட்டம்மை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக திருவாரூர் மாவட்டம் முழுவதும் 1,256 முகாம்கள் பள்ளிகளிலும், 867 முகாம்கள் அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து குழந்தைகள் பயன் பெறுவார்கள். இந்த தடுப்பூசி, தட்டம்மை நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும்.

4 பேர் கொண்ட குழு

ஒவ்வொரு முகாமிலும் கிராம சுகாதார செவிலியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் அடங்கிய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு தடுப்பூசி போடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் டாக்டர்கள் அடங்கிய கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகளை 30 நிமிடம் முகாமில் இருக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தியாகராஜன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அசோகன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.