Wednesday 29 January 2014

தேவை மாற்று அல்ல; மாற்றம்!


    வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தேசிய அளவில் முடிந்த அளவு அதிக இடங்களில் போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி கட்சி முடிவெடுத்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் } தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே - ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களைப் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக வெற்றிபெற முடிந்ததற்கு பல காரணங்கள் உண்டு. அரவிந்த் கேஜரிவால் என்கிற தலைவர் ஏற்படுத்திய நம்பகத்தன்மை, அந்த கட்சி முன்வைத்த அரசியல் கலாசாரம், அக் கட்சி ஊழலுக்கும் அதிகார துஷ்பிரயோகத்துக்கும் எதிராக எடுத்த நிலைப்பாடு, தங்களது ஒவ்வொரு செயல்பாட்டிலும் முடிவிலும் மக்களை நேரடியாக ஈடுபடுத்தியது, நன்கொடை பெறுவதில்கூட அவர்கள் காட்டிய வெளிப்படைத்தன்மை போன்ற பல்வேறு அம்சங்கள் ஆம் ஆத்மி கட்சியை வித்தியாசப்படுத்திக் காட்டின.

தில்லி சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றி, அகில இந்திய அளவில் ஆம் ஆத்மி கட்சியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. புதியதொரு மாற்று அரசியல் கலாசாரத்திற்கான மக்களின் ஏக்கத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி ஒரு அருமருந்தாகத் தெரிகிறது. பணத்தை வாரி இறைத்து வாக்குகளை விலைக்கு வாங்கி வெற்றி பெறும் தேர்தல் கலாசாரத்திற்கு, ஆம் ஆத்மி போன்ற இயக்கங்களின் வளர்ச்சிதான் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதிலும் சந்தேகமே இல்லை. அதே நேரத்தில், ஆம் ஆத்மி கட்சியே தேசிய அளவிலான ஒரு அரசியல் கட்சியாக, காங்கிரûஸப் போல, பாஜகவைப் போல உருவாவது சாத்தியமாகக்கூடும் என்றாலும்கூட வரவேற்கப்படக்கூடிய ஒன்று அல்ல.

இப்போதே, காங்கிரஸிலிருந்தும் ஏனைய கட்சிகளிலிருந்தும் தங்கள் அடையாளங்களை மாற்றிக்கொண்டு ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினர்களாகிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் பலர். மேல்மட்டத்தில் இல்லாவிட்டாலும், தன்னால் தலைவனாக முடியாமல் இருக்கும் அடிமட்ட அரசியல்வாதிகள் பலர் தங்கள் நிறத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா முழுவதும் தங்கள் கட்சியில் இணைபவர்கள் லட்சிய உணர்வுடன் கூடிய நாணயஸ்தர்களாக இருப்பதை அரவிந்த் கேஜரிவாலால் நிச்சயமாக உறுதிப்படுத்த முடியாது. யாரோ செய்யும் தவறு அவரது கட்சிக்கு மட்டுமல்ல, அவரது பெயருக்கே களங்கத்தை ஏற்படுத்தக்கூடும். பரவலாக படித்த இளைஞர்கள் மத்தியிலும், குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களிலும் தகவல் தொலைத் தொடர்புத் துறையிலும் பணியாற்றும் இளைஞர்கள் மத்தியிலும் ஆம் ஆத்மி கட்சியில் சேரவும், அரசியலில் ஈடுபடவும் மிகுந்த ஆர்வம் காணப்படுகிறது. அரசியலில் தூய்மையும், ஊழலற்ற நிர்வாகமும் வேண்டும் என்கிற இவர்களது ஆர்வம் பாராட்டுக்குரியது. ஆனால், அவர்களில் எத்தனை பேர் தங்களது வசதியான நகர வாழ்க்கையிலிருந்து விலகி கிராமப்புற மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பார்கள் என்பது கேள்விக் குறியே.
 

பெரு நகரங்களில் மட்டும் செயல்படும் தேசிய கட்சியாக ஆம் ஆத்மி கட்சி உருவெடுத்தால், கிராமப்புறங்களில் வளர்ச்சி தடைபடும், மறந்துவிடக் கூடாது. அந்தக் கட்சியின் பார்வை நகர்ப்புறம் சார்ந்ததாகவும், நடுத்தர, மேல்மட்ட மக்கள் சார்ந்ததாகவும் மாறிவிடக்கூடும்.÷ஆம் ஆத்மி கட்சி தில்லியில் செயல்படுத்த விழையும் திட்டங்கள், எல்லா ஊருக்கும் பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது. நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையில் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் மாறுபட்டவை. மாவட்டத்துக்கு மாவட்டம், மாநிலத்துக்கு மாநிலம் வேறானவை. ஆம் ஆத்மி கட்சி ஏற்படுத்த விரும்பும் அரசியல் கலாசார மாற்றம் தேசிய அளவில் ஏற்புடையதாக இருந்தாலும், செயல் திட்டங்கள் நகரத்துக்கு நகரம், மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். அதனால் கேஜரிவாலின் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தேசியக் கட்சியாக உருவெடுக்க நினைத்தால் தோற்றுவிடும். இந்தியாவின் தேவை, ஊருக்கு ஒரு கேஜரிவால், மாநிலத்துக்கு மாநிலம் ஒரு சாமானியர்களின் (ஆம் ஆத்மி) கட்சி. அதுதான் காந்தியடிகள் முன்வைத்த கிராம சுயராஜ்யம்.
அரவிந்த் கேஜரிவாலின் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி, அரசியல் கலாசார மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறி என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. தேசிய அளவில் போட்டியிட்டு, பெருவாரியான இடங்களில் டெபாசிட்டைக் கூடப் பெற முடியாமல் அந்தக் கட்சி தோல்வியைத் தழுவினால், மாற்றத்திற்கான முயற்சியின் தோல்வியாக அது கருதப்படும்.

மாற்றத்திற்கான முயற்சியை எதிர்மறைப் பிரசாரத்தால் முனை மழுங்கச் செய்து விடுவார்கள் நமது அரசியல் மலை விழுங்கி மகாதேவர்கள்! ÷
இன்றைய தேவை, காங்கிரஸýக்கும், பாஜகவுக்கும், ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் மாற்று அல்ல. அடிப்படை அரசியல் கலாசார மாற்றம். தில்லியில் கிடைத்திருக்கும் வெற்றியை முறையாக பயன்படுத்தி, கட்சியையும் ஆட்சியையும் நிலைநிறுத்திக் கொள்ள முயலாமல் அவசரப்பட்டு அகலக்கால் வைக்க முயல்கிறது ஆம் ஆத்மி கட்சி. உட்கார்ந்த பிறகுதான் காலை நீட்ட வேண்டும். நின்று கொண்டு காலை நீட்ட ஆசைப்படுகிறார் அரவிந்த் கேஜரிவால்!

No comments:

Post a Comment