Sunday 5 January 2014

வாக்காளர் பட்டியல் ஜன.10-இல் வெளியாகும்: தேர்தல் ஆணையம் தகவல்

திருத்தப்பட்டு இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் வரும் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக, வாக்காளர் பட்டியல் வரும் 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்காக, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 5.14 கோடியாக உள்ளது.

2014 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியுடன் 18 வயது பூர்த்தி அடைபவர்கள், பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அக்டோபர் வரை பெயர்களைச் சேர்க்கும் பணிகள் நடைபெற்றன.

மொத்தம் 30 லட்சம் பேர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மொத்தம் 30 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பங்கள் அனைத்தும் முழுமையான அளவில் சரிபார்த்து வாங்கப்பட்டுள்ளதால், அனைத்தும் ஏற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.44 கோடியாக அதிகரிக்கும்.

கடந்த வாரத்தில் இந்திய துணை தேர்தல் ஆணையர் சுதீர், சென்னை வந்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, ஜனவரி 10 ஆம் தேதி பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரிவீண் குமார் தெரிவித்துள்ளார். மாநகராட்சி, நகராட்சி உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள், வாக்குச் சாவடி மையங்கள் ஆகியவற்றில் மக்களின் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment