Thursday, 8 February 2018

தரமற்ற முறையில் நடைபெறுவதாக கூறி சாலை சீரமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்

திருவாரூர் அருகே உள்ள பவித்திரமாணிக்கத்தில் இருந்து பெரும்புகளுர் செல்லும் சாலை சேதம் அடைந்து இருந்தது. இதை தொடர்ந்து அங்கு சாலை சீரமைக்கும் நடைபெற்று வந்தது. அப்போது ஏற்பட்ட பள்ளத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பால்ராஜ் தவறி விழுந்து படுகாயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாலை சீரமைக்கும் பணியை தரமாக ஒப்பந்தகாரர் செய்யாததால் விபத்து ஏற்பட்டு உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்போது சாலை சீரமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு நிறுத்தப்பட்ட சாலை சீரமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் சம்பவத்தன்று தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டதாகவும், சாலை விபத்தில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் சாலை சீரமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்்வு காண்ப்பது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பவித்திரமாணிக்கம் -பெரும்புகளூர் சாலையின் தரத்தினை உறுதி செய்த பின்னரே பணியினை தொடர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து செயற்பொறியாளர் மூலம் சாலையை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழக அரசின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இறந்த பால்ராஜ் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது. 

No comments:

Post a Comment