Tuesday, 6 February 2018

மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

மானிய விலை ஸ்கூட்டருக்கு சென்னையில் 23 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர். கடைசி நாளான நேற்று பெண்கள் போட்டிபோட்டு விண்ணப்பம் வழங்கினர்.

வேலைக்கு செல்லும் பெண்கள் ‘ஸ்கூட்டர்’ வாங்கிக்கொள்ள ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். அந்த திட்டத்தை ‘அம்மா இருசக்கர வாகன திட்டம்’ என தமிழக அரசு செயல் படுத்த இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலகங்களில் வினியோகிக்கப்பட்டது.

விண்ணப்பங்களை ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் வாங்கினர். விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று (திங்கட் கிழமை) மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.

சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்களிலும் இறுதி நாளான நேற்று காலை முதலே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பெண்கள் அதிக ஆர்வம் காட்டினர். போட்டிபோட்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்த பெண்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது.

பெண்கள் குவிந்ததால் மண்டல அலுவலகங்கள் நிரம்பிவழிந்தன. பாதுகாப்புக்காக மண்டல அலுவலகங்களில் போலீசாரும் நிறுத்தப்பட்டு இருந்தனர். ஓட்டுனர் பயிற்சி உரிமம் பெறுவதற்காக பெண்கள் திரண்டதால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் இதேநிலை தான் இருந்தது.

கடந்த 2-ந் தேதி வரை சென்னையில் 6,187 பெண்கள் ஸ்கூட்டர் பெறுவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்திருந்தனர். இறுதி நாளான நேற்று மட்டும் 16,773 பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர். சென்னையில் மட்டும் மொத்தம் 22,960 பெண்கள் மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

இந்த விண்ணப்பங்கள் மீதான ஆய்வுப்பணி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் பணி 15-ந் தேதி நடக்கிறது.

No comments:

Post a Comment