Wednesday, 14 February 2018

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவர்களுக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயம்

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் ‘நீட்‘ என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை எழுதுவது கடந்த 2016-ம் ஆண்டு கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில் வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை மேற்கொள்ள இந்தியாவில் இருந்து ஆண்டு தோறும் சுமார் 7 ஆயிரம் மாணவர்கள் செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கல்வித் திறன் சரிவர மதிப்பீடு செய்யப்படாத நிலையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படிப்பதற்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவது மத்திய அரசின் கவனத்துக்கு வந்தது.

இதையடுத்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்களும் ‘நீட்‘ தேர்வை கட்டாயம் எழுதவேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 2002-ம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்திருந்த மதிப்பீட்டு தேர்வு விதிமுறைகளின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

தற்போது, வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிடம் இருந்து பெறும் அடிப்படைச் சான்றிதழை சமர்பித்தாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment