ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி அளிக்க வகை செய்ய தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக, தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு, ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்க வகை செய்யும் அவசரச்சட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவரின் அனுமதியையும் பெற்றது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, உடனடியாக அவசரச் சட்டம் சட்டமாக ஒப்புதல் பெறப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த சட்டத்தில் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டு, தமிழக மக்களின் போராட்டத்துக்கு முழு வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.
குடியரசுத் தலைவரின் கையெழுத்துப் பெறப்பட்டதை அடுத்து, இந்த சட்டம், இன்று மாலை அரசிதழில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஜல்லிக்கட்டு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அரசியல் சாசனத்தில் காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இதையடுத்து, ஜல்லிக்கட்டு தொடர்பாக விரைவாக தீர்ப்பளிக்குமாறு மத்திய, மாநில அரசுகள் வைத்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பு எழுதப்பட்டுவருவதாகக் கூறியிருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் போராட்டம் வெடித்ததை அடுத்து, ஒரு வார காலத்துக்கு ஜல்லிக்கட்டுத் தொடர்பாக தீர்ப்பளிக்கக் கூடாது என்று தடை பெற்றது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment