Thursday, 26 January 2017

குடியரசு தின விழா: முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் முதல்வர் ஓபிஎஸ்

68-வது குடியரசு தின விழாவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில் நடைபெற்ற விழாவில் காலை 8 மணியளவில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவியுடன் விழாவில் கலந்து கொண்டார்.
முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் விருதுகளை வழங்கினார். மாணவ, மாணவிகளில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் விதமாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெற்றது. பெரும்பாலான ஊர்திகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
முதல்முறையாக..
வழக்கமாக, சுதந்திர தினத்தன்று கோட்டை கொத்தளத்தில் முதல்வரும் குடியரசு தின விழாவில் மெரினா கடற்கரையில் ஆளுநரும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வர். விருதுகளையும் பதக்கங்களையும் முதல்வர் வழங்குவார்.
ஆனால், தற்போது தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படவில்லை. பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மகாராஷ்டிராவில் நடக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார். எனவே, தமிழகத்தில் முதல் முறையாக குடியரசு தினத்தில் முதல்வர் கொடியேற்றியிருக்கிறார்.
முதல்வராக 2-வது முறை:
முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கும் 2-வது குடியரசு தின விழா இதுவாகும். கடந்த 2015-ம் ஆண்டு நடந்த குடியரசு தின விழாவில் ஆளுநர் ரோசய்யா கொடியேற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது சொத்துக் குவிப்பு வழக்கு தண்டனை காரணமாக முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்திருந்தார். அவருக்கு பதில் முதல்வராக பதவியேற்றிருந்த ஓ.பன்னீர்செல்வம், விழாவில் பங்கேற்று விருதுகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment