Saturday, 21 January 2017

நாளையே ஜல்லிக்கட்டு: முதல்வர் பன்னீர்செல்வம் உற்சாக அறிவிப்பு

 ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான தடை நீங்கியது. நாளையே ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முறைப்படி அறிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டுக்கான தடைகள் தகர்த்தெறியப்பட்டு தமிழர்களின் பண்பாடு காக்கப்படும் என நான் அளித்த வாக்குறுதியின்படி, ஜல்லிக்கட்டுக்கு எதிரான அமைப்புகளால் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு வர விடாமல் அடைக்கப்பட்ட காளைகள், வாடிவாசல் வழியே திறந்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு வீரர்களால் அணைக்கப்படும் நிகழ்வை நடத்திடுவது சாத்தியமாகியுள்ளது என்ற மகிழ்ச்சியை தமிழக மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் உள்ளம் பூரிக்கிறேன். மத்திய அரசின் 1960-ஆம் ஆண்டைய மிருக வதை தடுப்புச் சட்டத்திற்கு மாநில திருத்தம் செய்யப்பட்டு அதற்கான அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் உத்தரவு நேற்று (20.1.2017) இரவு பெறப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கான ஒப்புதல் மாநில ஆளுநர் அவர்களிடமும் பெறப்பட்டு விட்டது. எனவே, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயம் நடத்தப்பட வேண்டும் என்ற நம் கனவு நனவாகி உள்ளது.

தமிழர்களின் பண்டைய பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஜல்லிக்கட்டு, 2006-ஆம் ஆண்டு முதலே பல்வேறு தடைகளை கடந்து வந்துள்ளது. அவ்வப்போது உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணைகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்த சூழ்நிலையில், 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் பிராணிகள் நலப் பிரிவு, ஜல்லிக்கட்டு நிகழ்வு, பழக்கப்பட்ட விலங்கின் செயலைக் காட்சிப்படுத்துவது எனக் குறிப்பிட்டு, எனவே அவை தடை செய்யப்பட வேண்டும் என பரிந்துரைத்து பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினை தடுத்தல் சட்டத்தின் பிரிவு 22-ன் கீழ் புலிகள், கரடிகள் ஆகியவைகளுடன் காளையையும் சேர்க்க வேண்டும் என பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில், தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு தனது 11.7.2011 நாளிட்ட அறிவிக்கையில் காளையையும் இந்தப் பட்டியலில் சேர்த்து அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.
உச்சநீதிமன்றம், மத்திய அரசால் 11.7.2011 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கை மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 7.5.2014 அன்று இறுதி உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தவும், மகாராஷ்டிராவில் காளைமாட்டுப் பந்தயத்தை நடத்தவும் முழுமையான தடை பிறப்பிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டம் 2009, இந்திய பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு முரணாக அமைந்துள்ளதால் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதை முற்றிலும் தடை செய்து விட்டதால், இதனை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆணைப்படி 19.5.2014 அன்று தமிழ்நாடு அரசால் மறு ஆய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் 16.11.2016 அன்று தள்ளுபடி செய்துவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் 7.5.2014 அன்றைய தீர்ப்பின் காரணமாக, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திட இயலாது என்ற நிலையில் தமிழ்நாட்டின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை விடாது நடத்திட வேண்டும், நமது பண்பாட்டுச் சின்னத்தை எவ்வாறேனும் காத்திட வேண்டும் என்ற உன்னத நோக்குடன் ஜெயலலிதா அவர்கள் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்கள்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுத்திட வேண்டுமென்று மத்திய அரசை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியது.
7.8.2015 அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பாரதப் பிரதமர் அவர்களுக்கு அளித்த கோரிக்கை மனுவில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த வழிவகுக்கும் வகையில் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தார்கள். 11.7.2011 நாளிட்ட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் காட்சிப்படுத்தப்படும் விலங்காக சேர்க்கப்பட்டுள்ள காளைகளை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கிட வேண்டும் என்றும் 1960-ஆம் ஆண்டைய மிருக வதை தடுப்புச் சட்டத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் விதமாக திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். 2015-ஆம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இது குறித்த மசோதா ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்யும் என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணை அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது. புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அந்தக் கூட்டத் தொடரில் பேசியிருந்தனர். எனினும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழகத்தில் அனுமதிக்கும் வகையிலான எந்தவித மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாததால், ஜெயலலிதா அவர்கள் 22.12.2015 அன்று பாரதப் பிரதமர் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்கள். அந்தக் கடிதத்தில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த வகை செய்யும் அவசரச் சட்டம் ஒன்றை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். தொடர் வற்புறுத்தலின் காரணமாக மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் 7.1.2016 அன்று ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. இந்த அறிவிக்கையின்படி, காளைகள் என்பது காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் தொடர்ந்து இருந்தாலும், ஒரு காப்புரையை சேர்த்தது. அந்தக் காப்புரையில், உச்ச நீதிமன்றம் தனது 7.5.2014 நாளிட்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ள ஐந்து உரிமைகள் மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் உள்ள கூறுகள் ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டுமென தெரிவித்தது. எனினும், ஒருசில அமைப்புகள் இந்த அறிவிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ததில், 12.1.2016 அன்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு, தான் ஏற்கனவே கேட்டுக் கொண்டபடி, அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டுமென்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களைக் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டார்கள். அதன் பின்னர், அவசரச் சட்டம் ஒன்றை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்று புரட்சித் தலைவி அம்மா அவர்களாலும், தமிழக அரசாலும், என்னாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை 19.12.2016 அன்று நேரில் சந்தித்த போது தமிழ்நாட்டின் நலனுக்கான கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை நான் அளித்தேன். அதில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படவேண்டும் என வற்புறுத்தி இருந்தேன். 9.1.2017 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு நான் அனுப்பிய கடிதத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் விதமாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டேன். மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தால் 7.1.2016 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்காத நிலையில் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் இந்த ஆண்டும் நடைபெறாத நிலை ஏற்பட்ட காரணத்தால், இது தொடர்பாக அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என்று நான் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை 19.1.2017 அன்று புதுடில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன். எனது கருத்துகளை பரிவுடன் கேட்டுக் கொண்ட மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், இந்த பிரச்சனையில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்படாததை சுட்டிக் காட்டிய மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக எடுத்திடும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை அளித்தார். எனவே, நான் புதுடில்லியிலேயே தங்கியிருந்து மத்திய அரசின் மிருக வதை தடுப்புச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொண்டு அதன் மூலம் ஜல்லிக்கட்டு நடத்திட இயலுமா என்பது பற்றி சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் விவாதித்தேன். அதனடிப்படையில் மத்திய அரசின் மிருக வதை தடுப்புச் சட்டத்திற்கு மாநில திருத்தம் ஒன்றை கொண்டு வர முடிவெடுக்கப்பட்டு, வரைவு சட்ட திருத்தம் புதுடில்லியிலேயே தயார் செய்யப்பட்டது. இதை அவசர சட்டமாக பிறப்பிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி, இந்த அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் பரிந்துரை பெறப்பட்டு, மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்படவேண்டும் என்பதால் அதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த அவசர சட்டத்திற்கு மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் நேற்று (20.1.2017) இரவு பெறப்பட்டது.
தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதிலும், தமிழகத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதிலும், தன்னிகரில்லா தலைவராக விளங்கிய மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஜல்லிக்கட்டு நடைபெற்றிட முனைந்து மேற்கொண்ட முயற்சிகளே இன்று இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கு மூல காரணம் என்பதை இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
ஒரே நாளில் அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளின் ஒப்புதல் மற்றும் மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் ஆகியவற்றை பெற்றுத் தர காரணமாக இருந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர் பண்பாட்டைக் காத்திட அறவழியில் போராட்டம் நடத்திய மாணாக்கர்கள், இளைஞர்கள் மற்றும்  பொது மக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேதகு இந்திய குடியரசுத் தலைவரால் உத்தரவு வழங்கப்பட்ட மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்திற்கான மாநில அரசின் சட்ட திருத்தத்திற்கு மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஒப்புதல் இன்று பெறப்பட்டுள்ளது. எனவே, ஜல்லிக்கட்டுக்கான அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகளின் தளைகள் அவிழ்க்கப்பட்டு விட்டன. அரசமைப்புச் சட்டப்படி இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக சட்ட முன் வடிவு 23.1.2017 அன்று தொடங்க உள்ள சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜல்லிக்கட்டுக்கான தடைகள் நீக்கப்பட்டதனால், அலங்காநல்லூரிலும், மாநிலத்தின் ஏனைய பகுதிகளிலும் நாளையே (22.1.2017) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்வை நாளை காலை 10 மணிக்கு நான் நேரில் தொடங்கி வைப்பேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு நடைபெறும் மற்ற பகுதிகளில் அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த அமைச்சர்கள் காலை 11 மணிக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பார்கள்.
தமிழ்நாடெங்கும் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் மாணாக்கர்களும், இளைய சமுதாயத்தினரும்,  பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்று இந்நிகழ்வுகளை வெற்றிகரமாக்கிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment